வடகொரிய கப்பல்கள் எந்த நாட்டு துறைமுகத்துக்கும் செல்லத் தடை

வடகொரியாவின் 4 வர்த்தக கப்பல்களும் உலக நாடுகளின் எந்த துறைமுகத்துக்கும் செல்லக் கூடாது என்று ஐ.நா. பாதுகாப்புச் சபை புதியதொரு தடையை விதித்துள்ளது.

ஐ.நா. பாதுகாப்புச் சபையில் விதித்த பல்வேறு பொருளாதார தடைகளையும் மீறி தொடர்ந்து வடகொரியா அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

கடந்த மாதம் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து இலக்கை தாக்கி அழிக்கும் அதி நவீன ஏவுகணை சோதனையையும் வெற்றிகரமாக நடத்தியது.

இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. வடகொரியா மீது மிகக் கடுமையான தடைகளை விதிக்கவேண்டும் எனவும் வற்புறுத்தின.

இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்புச் சபை நேற்று வடகொரியா மீது புதியதொரு தடையை விதித்தது. அந்த நாட்டின் பெட்ரெல் 8, ஹாவோ பான் 6, டோங் சான் 2, ஜி சுன் ஆகிய 4 வர்த்தக கப்பல்களும் உலக நாடுகளின் எந்த துறைமுகத்துக்கும் செல்லக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் வடகொரியாவுக்கு மறைமுகமாக ஆதரவு அளிக்கும் சீனா மட்டும் அல்ல எந்த நாடும் தனது துறைமுகத்தில் இந்த 4 கப்பல்களையும் நிறுத்த அனுமதிக்க இயலாது.

ஐ.நா.வின் விதிமுறைகளை மீறியதற்காக குறிப்பிட்ட ஒரு நாட்டின் கப்பல்களை உலக நாடுகளின் துறைமுகங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்று ஐ.நா. பாதுகாப்புச் சபையின் ஒருங்கிணைப்பாளர் ஹூயூஜ் கிரிபித்ஸ் தெரிவித்தார்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top