பூமியை இன்று நெருங்குகிறது TC4 விண்கல்

விண்வெளியில் வலம்வந்துகொண்டிருக்கும் TC4 என்ற விண்கல், பூமியை இன்று வியாழக்கிழமை (அக் 12) கடந்து செல்லவிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியிலிருந்து சுமார் 42,000 கி.மீ. தொலைவு வரை வந்து செல்லவிருக்கும் இந்த விண்கல்லால் பூமிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

சுமார் 15 - 30 மீற்றர் வரை அகலம் கொண்ட விண்கல் ஒன்று விண்வெளியில் சுற்றிவருவதை அவதானித்த விஞ்ஞானிகள் அதற்கு TC4 என்று பெயரிட்டனர்.

இந்த விண்கல், 2012 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் திகதி அண்டார்டிகா கண்டத்திற்கு மிக நெருக்கத்தில் கடந்து சென்றது. மீண்டும் 2017 ஆம் ஆண்டு விண்கல் பூமியை நெருங்கும் என்று விண்வெளி ஆய்வாளர்கள் கணித்துக் கூறியிருந்தனர்.

அதன்படி டிசி விண்கல் பூமியை இன்று மிக நெருக்கத்தில் கடந்து செல்கின்றது. எனினும் 42,000 கி.மீ. தொலைவிலேயே கடந்துவிடுவதால், அது பூமியுடன் மோதும் ஆபத்து இல்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

விண்கற்களால் பூமிக்கு ஆபத்து நேரிடும் சூழலில், அதனைத் தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்புக் கருவிகள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதைத் தெரிந்துகொள்வதற்கு இந்த TC4 விண்கல்லின் வருகை உதவும் என்று கூறப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி இன்னும் 100 ஆண்டுகளுக்கு விண்கற்களால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top