1150 x 80 px

 

வட-தென் கொரிய நாடுகளிடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை ஆரம்பம்

கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல்முறையாக வட கொரியா - தென் கொரியா இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளன.

பன்முன்ஜோமில் 'சமாதான கிராமம்' என அழைக்கப்படும் பகுதியில் உள்ள 'அமைதி மாளிகையில்' இந்த சந்திப்பு நடக்கிறது.

பெப்ரவரி மாதம் தென் கொரியாவில் நடக்க உள்ள 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வடகொரியா கலந்துகொள்வதற்கான சாத்தியங்கள் குறித்து இந்த பேச்சுவார்த்தையில் பேசப்படும்.

இரு கொரிய நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் இதன்போது பேசவுள்ளதாகத் தென்கொரியா கூறியுள்ளது.

வடகொரியா ஏவுகணை ஏவிய பிறகு, கேசோங் தொழில் மண்டலத்தின் கூட்டு பொருளாதார திட்டத்தை தென்கொரியா இடைநிறுத்தியது. அப்போது முதல் இரு நாடுகள் இடையிலான உறவு மோசமடைந்தது. இந்த சம்பவம், தென்கொரியாவுடனான தனது தொடர்புகளை வடகொரியா துண்டிக்க வழிவகுத்தது.

இவ்விரு நாடுகளுக்கும் இடையே கடைசியாக உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள், 2015 ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்தது.

தடை செய்யப்பட்ட ஆயுத திட்டங்களை வடகொரியா தொடர்ந்து மேம்படுத்தி வந்ததால், பதற்றங்கள் அதிகரித்தன.

பேச்சுவார்த்தையின் கவனம் ஒலிம்பிக் போட்டிகள் குறித்து இருக்கும். ஆனால், மற்ற விஷயங்களும் பேசப்படும் தென்கொரியாவின் நல்லிணக்கதுறை அமைச்சர் சோ மியூங் -கியான் திங்கட்கிழமையன்று கூறினார்.

''இருநாட்டு உறவுகள் குறித்து பேசுகையில், போரில் பிரிந்த குடும்பங்கள் மற்றும் ராணுவ பதட்டங்களை எளிதாக்கும் வழிகள் போன்றவற்றை குறித்தும் அரசு பேசும்'' என்றும் அவர் கூறினார்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top