Tuesday, December 6, 2022

Latest Posts

பெருந்தோட்ட மக்களை அரசு ஏமாற்றிவிட்டது – வே.இராதகிருஸ்னன்

கொரோனா காலத்திலும் நம் நாட்டுக்காக உழைத்த பெருந்தோட்ட மக்களுக்கு நாளொன்றுக்கு அரை கிலோ மாவை காசுக்கு கொடுத்து நிவாரணம் என்று கூறி மக்களை மேலும் ஏமாற்றி விட்டது அரசாங்கம் என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணயின் பிரதி தலைவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி வே.இராதகிருஸ்னன் குறிப்பிட்டபர்.

அரசாங்கம் வழங்கியுள்ள சலுகைகள் தொடர்பாக கொத்மலை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பாராளுமன்ற பன்முகபடுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்கள் மற்றும் சமூக சேவை நிறுவனங்களுக்கு பொருட்களை வழங்கும் நிகழ்விற்கு அதிதியாக கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கின்ற பொழுதே இவ்வாறு குறிப்பிட்டபர்.

இது தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்..

அரசாங்கம் என்ன செய்கின்றது என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றது. அரசாங்கத்திற்கு சுமையாக இருப்பவர்கள் இந்த அரசாங்க உத்தியோகஸ்தர்கள் என கூறியவரே அவர்களுக்கு மாதாந்தம் 5000 ரூபா பெற்றுக் கொடுப்பதாக கூறுகின்றார்.

அரசாங்க உத்தியோகஸ்தர்களை இந்த நாட்டு மக்கள் மத்தியில் அவமானப்படுத்திவிட்டு இன்று அவர்களை சமாளிப்பதற்காக பணத்தை அச்சடித்து மேலதிக கொடுப்பனவாக 5000 ரூபா வழங்குவது எந்தவிதத்தில் நியாயமானது என்பது புரியவில்லை.

எங்களுடைய பெருந்தோட்ட தொழிலாளர்கள் கொரோனா ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்து வருகின்றார்கள். ஆனால் அவர்களுக்கு இந்த அரசாங்கம் நாளொன்றுக்கு அரை கிலோ மாவை குறைந்த விலைக்கே வழங்குவதாக அறிவித்துள்ளனர். அது இந்த மக்களுக்கு நிவாரணம் அல்ல, வியாபாரம்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000ரூபா சம்பளம் பெற்றுத் தருவதாக கூறி அவர்களை ஏமாற்றியிருக்கின்றது. இன்று பெருந்தோட்ட கம்பனிகள் 1000ரூபாவை வழங்க மறுத்து வருகின்றது. அதற்காக அவர்கள் பல நிபந்தனைகளை போடுகின்றார்கள்.அதனை தட்டிக் கேட்க முடியாமல் இருக்கின்றது இந்த அரசாங்கம்.

இன்று விலைவாசி உயர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் எங்களுடைய பெருந்தோட்ட தொழிலாளர்களே. சரியான சம்பளம் இல்லை. சரியான வேலை இல்லை. சரியான மாதாந்த வருமானம் இல்லை. பிள்ளைகளுக்கு முறையான கல்வியை வழங்க முடியவில்லை. சரியான உணவுகளை வழங்க முடியவில்லை. இது ஒரு புறம் இருக்க பஸ் கட்டண அதிகரிப்பு. கேஸ் தட்டுப்பாடு. பால்மா தட்டுப்பாடு. இப்படி பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்.

பெருந்தோட்டங்களில் காலையில் தொழிலாளர்கள் அனைவரையும் ஒரு இடத்திற்கு வரவழைத்து பெரட்டு கலைப்பார்கள். அதாவது யார் எந்த இடத்திற்கு வேலைக்கு செல்வது என்பதை கூறுவார்கள்.ஆனால் இன்று இலங்கையில் இருக்கின்ற அநேகமான வீடுகளிலேயே பெரட்டு கலைக்கின்றார்கள்.வீட்டின் தலைவர் காலையில் எழுந்தவுடன் யார் யார் எந்தெந்த பொருட்களை கொள்வனவு செய்வதற்கு எந்த வரிசைக்கு செல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டிய ஒரு துர்பாக்கியமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

மக்களை ஏமாற்றுவதற்காக பணத்தை அச்சடித்து வழங்குவதால் பிரச்சினையை தீர்க்க முடியாது. இதனால் பிரச்சினை கூடுமே தவிர குறைவதற்கு வாய்ப்பில்லை. கையில் பணம் இருந்து பிரயோசனம் இல்லை. கொள்வனவு செய்வதற்கு பொருட்கள் இல்லாவிட்டால். எனவே இனியாவது சிறுபிள்ளைகளுக்கு இனிப்பை கொடுத்து ஏமாற்றுவது போல செயற்படாமல் முறையாக திட்டமிட்டு செயற்படுங்கள் என்று கூறினார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.