யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் டயலொக் நிறுவனம் அமைக்கும் விளம்பரம் தொடர்பில் சபை உறுப்பினர்களின் அனுமதி இன்றி ஒப்பந்தம் செய்தமை தொடர்பில் ஆளுநரின் கவனத்திற்கு உடன் கொண்டு செல்ல மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டிற்கான ஜனவரி மாத கூட்டம் இன்று சபை மண்டபத்தில் மாநகர முதல்வர் இ.ஆனல்ட் தலைமையில் இடம்பெற்றபோதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கமைய மாநகர சபை எல்லைப் பரப்பிற்குள் 10 இடங்களில் விளம்பரம் அமைக்க 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற மாதக் கூட்டத்தின்போதும் 2022 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி இடம்பெற்ற விசேட கூட்டங்களின் அடிப்படையிலாக டயலொக் நிறுவனம் அமைக்கும் விளம்பரப் பணங்களில் மேற்கொள்ளும் திட்டம் தொடர்பாக தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறான தீர்மானங்களிற்கு முரணாக பல விடயங்கள் உட் புகுத்தப்பட்டு சபைக்கு பாதகமாக தனியார் நிறுவனத்தின் நன்மையை மட்டும் முதன்மைப்படுத்தி இரகசியமாக தயாரிக்கப்பட்ட ஒப்பந்தம் ஒன்றில் சபையின் பார்வைக்கோ அனுமதிக்கோ தெரியாமல் தயாரித்த ஒப்பந்தம் தொடர்பில் சபை அனுமதியும் இன்றி முன்னாள் முதல்வரும் ஆணையாளரும் ஒப்பமிட்டுள்ளனரா என உறுப்பினர் ந.லோகதயாளன் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த முதல்வர் இ.ஆனல்ட் இது தொடர்பில் நான் ஒப்பமிடவில்லை என்பதோடு என்னிடமோ அல்லது எமது அலுவலகத்திலோ அதன் பிரதிகள் எவையும் இல்லையெனப் பதிலளித்தார். இதனால் இதற்கு ஆணையாளர் பதிலளிக்க வேண்டும் என சபையில் கோரப்பட்டபோது அதில் முன்னாள் முதல்வர் ஒப்பமிட்டு நானும் ஒப்பமிட்டேன் என ஆணையாளர் ஜெயசீலன் பதிலளித்தார். அவ்வாறானால் அதன் பிரதி ஒன்றை வழங்குமாறு பல தடவை கோரியபோதும் சபைக்கு சமர்ப்பிக்கவில்லை.
இதனையடுத்து சபைத் தீர்மானங்களிற்கு முரணாகவும், நிதி நடவடிக்கைக்கு முரணாகவும் தயாரிக்கப்பட்ட ஒப்பந்தம் ஒன்றில் சபைக்கு சமர்ப்பிக்காது இரகசியமாக மேற்கொண்ட ஒப்பந்த்த்திற்கு ஒப்பமிட்ட இருவரும் மட்டுமே பொறுப்பு எனவும் சபையில் பேசப்பட்டதற்கு மேலதிகமாக துரையப்பா விளையாட்டரங்கையும் தாரை வார்த்து அவர்களின் விளம்பரங்களில் சேதம் ஏற்படுவது முதல் அத்தனை பராமரிப்பும் சபைக்குரியது. அத்தோடு ஏனைய இடங்களிலும் நாம் விளம்பரம் வழங்க முடியாது என்பதோடு இந்த ஒப்பந்த்த்தில் இருந்து மாநகர சபை விலகுவதானால் இரட்டிப்பு பணம் வழங்க வேண்டும் என எழுதியுள்ளபோதும் நிறுவனம் விலகினால் எந்த நட்டஈடும் கிடையாது போன்ற இன்னு பல மோசமான விடயங்கள் உண்டு.
எனவே இந்த அடிமை சாசனத்திற்கு நிகரான ஒப்பந்தம் தொடர்பில் இன்று சபையில் தற்போது பிரசண்ணமாகியுள்ள எவருமே பொறுப்பு அல்ல என்பதோடு இந்த தீர்மானத்தையும் ஒப்பந்த பி்ரதியினையும் உடனடியாக உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் மாகாண ஆளுநருக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க கோருவதோடு அதுவரை இதுதொடர்பில் எந்தவொரு நடவடிக்கையினையும் சபை மேற்கொள்ள கூடாது. இன்றைய திகதிக்கு இந்த ஒப்பந்தம் சார்பில் நிதி ஏதும் அந்த நிறுவனத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளவும் கூடாது என உறுப்பினர் ந.லோகதயாளன் தீர்மானமாக முன்மொழிய இதனை எம்.என்.பாலச்சந்திரன் வழிமொழிந்ததோடு இதனை உடனடியாக மொழி பெயர்த்து அத்தனை உறுப்பினர்களிற்கும் அனுப்பி வைப்பதோடு இந்த தீர்மானம் இன்றே நடைமுறைப்படுத்தப்படும் என முதல்வர் தெரிவித்தார்.
TL