யாழ்ப்பாணத்திலிருந்து தர்மபுரம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ’ஹைஏஎஸ்’ ரக வேன் வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதியது.
சம்பவத்தில் வாகன சாரதி உயிரிழந்தார்.
முல்லைத்தீவு, விசுவமடு மேற்கைச் சேர்ந்த கு.கஜிபரன் (வயது= 27) என்பவரே மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றத்துக்கு அண்மையாக நேற்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார்.
வாடகைக்கு அமர்த்தப்பட்ட ’ஹைஏஎஸ்’ வாகனத்தில் சாரதியாக வேலை செய்யும் கஜிபரன் நேற்றுமுன்தினம் 26ஆம் திகதி தர்மபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுள்ளார்.
அங்கிருந்து உறவினர்களை ஏற்றிக்கொண்டு கண்டிக்குச் சென்றுள்ளார். அன்றைய தினமே கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி மீண்டும் பயணித்துள்ளார். உறவினர்களை யாழ்ப்பாணத்தில் இறக்கிய பின்னர் வாகனத்தை மீள ஒப்படைப்பதற்காக நேற்று அதிகாலை தர்மபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றத்தை அண்மித்த பகுதியில் வாகனம் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்துடன் மோதியது. அந்தப் பகுதியால் வந்தவர்கள் சாரதியை மீட்டு சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்ப்பித்தனர். அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
TL