நெடுங்கேணியில் 500. ஏக்கரில் மேற்கொள்ளவுள்ள சீனித் தொழிற்சாலைக்கான நிலத்தை உடன் வழங்குமாறு வவுனியா மாவட்ட அரச அதிபருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
18ஆம் திகதி காலை 11.30 மணிக்கு சூம் வழியாக இடம்பெற்ற கலந்துரையாடலில் இணைந்துகொண்டபோதே ஜனாதிபதி வவுனியா மாவட்ட அரச அதிபர் மற்றும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் ஆகியோருக்கு இந்த உத்தரவினை வழங்கியுள்ளார்.
நெடுங்கேணி நைனாமடுவில் ஓர் சீனித் தொழிற்சாலையினை அமைக்கும் அதேநேரம் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் கரும்புத் தோட்டங்கள் அமைத்து அவற்றை தொழிற்சாலைக்கு வழங்கத் திட்டமிடப்படுகின்றது.
இவ்வாறு 18ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி, ஜனாதிபதியின் செயலாளர், சிறு ஏற்றுமதி முதலீட்டு அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர்கள், வவுனியா மாவட்ட அரச அதிபர் மற்றும் வவனியா வடக்கு பிரதேச செயலாளர் உள்ளிட்ட 15 பேர் கலந்துகொண்டுள்ளனர். இவ்வாறு இடம்பெற்ற கூட்டத்தில் தமிழ் அரசியல் கட்சி ஒன்றின் ஓர் அரசியல்வாதியும் கலந்துகொண்டுள்ளார்.
இதேநேரம் குறித்த விடயம் தொடர்பில் நேற்றுக் காலையும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் சிறு ஏற்றுமதி பயிர்கள் அபிவிருத்திப் பிரிவின் மேலதிக செயலாளர் கே.எஸ்.விஜயகீர்த்தியின் 16ஆம் திகதிய கடிதத்தின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்டத்தின் சகல பிரதேச செயலாளர்கள், முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் தவிர்ந்த ஏனைய பிரதேச செயலாளர்களுடன் மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச செயலாளர்களிடையே கூட்டம் இடம்பெற்றுள்ளது. நேற்றைய கூட்டத்தில் கரும்புச் செய்கைக்கு ஏற்ற அதிக இடங்கள் வனவளத் திணைக்களத்தின் பிடியிலேயே உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதனால் வனவளத் திணைக்களத்துடன் பேச முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் 18 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டம. தொடர்பிலே அல்லது அதன் முடிவுகளோ நேற்றைய கூட்டத்தில் தெரிவிக்கப்படவில்லை.