Thursday, June 1, 2023

Latest Posts

இந்தியா ஆயுதம் வழங்குகின்றதா? – ஜனநாயகப் போராளிகள்
கட்சியிடம் ரி.ஐ.டி. விசாரணை

இந்தியா விடுதலைப் புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயற்சிக்கின்றதா? ஆயுதம் பணம் என்பவற்றை வழங்கி மீள் உருவாக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபடுகின்றார்களா? என்று பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் தன்னிடம் விசாரணை மேற்கொண்டார்கள் என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த 11ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவிலிருந்து வீட்டுக்கு வந்து என்னை விசாரித்தார்கள். 16 ஆம் திகதி மீண்டும் வீட்டுக்கு வந்து என்னிடம் நான்கு மணித்தியாலமும் 50 நிமிடங்களும் விசாரணைகளை மேற்கொண்டார்கள்.
கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 10ஆம் திகதி டில்லியில் இடம்பெற்ற மாநாட்டில் நான் கலந்து கொண்டமை தொடர்பாக விசாரித்தார்கள்.
ஜனநாயகப் போராளிகள் கட்சிக்கு இந்தியா எவ்வாறான ஆலோசனைகளை வழங்குகின்றது? இந்தியா பணம் வழங்குகின்றதா? போன்றவற்றை இவர்கள் விசாரணைகளின் போது கேட்டிருந்தார்கள். இந்தியா இங்கு என்ன செய்யுமாறு தங்களை பணித்துள்ளார்கள் போன்ற கேள்விகளையும் அவர்கள் கேட்டார்கள்.
இந்திய அதிகாரிகளைச் சந்தித்தால் அவர்கள் இலங்கை நாட்டு மக்களின் சுதந்திரமான வாழ்வை விரும்புவதாக கூறுவார்களேயொழிய தமிழ் மக்கள் தொடர்பாக எந்த விதமான கருத்துக்களை அவர்கள் கூறுவதில்லை என்று பதிலளித்தேன்.
இந்தியா பணத்தை வழங்கி இலங்கை அரசுக்கு எதிராகச் செயற்படச் சொல்கின்றதா என்ற தொனியிலும் விசாரணைகளை மேற்கொண்டனர்.
முள்ளிவாய்க்கால் நினைவு தினம், தியாகி திலீபன் நினைவு தினம், மாவீரர் நாள் நினைவு தினங்களை நீங்கள் எவ்வாறு செய்கின்றீர்கள்? பணம் யார் வழங்குகிறார்கள்? போன்ற கேள்விகளையும் அவர்கள் எழுப்பியிருந்தார்கள். இதற்கு புலம்பெயர் உறவுகளின் பங்களிப்பின் மூலமே இத்தகைய விடயங்களை செய்கின்றோமேயொழிய எந்த ஒரு நாட்டினுடைய நிதி பங்களிப்பில் இத்தகைய நிகழ்வுகளை செய்வதில்லை என்பது தொடர்பில் அவர்களுக்கு தெளிவுபடுத்தினேன். நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு இந்தியா உங்களுக்கு பணம் வழங்குகின்றதா? என்றும் கேட்டார்கள்.
இந்தியா விடுதலைப் புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயற்சிக்கின்றதா? ஆயுதம் பணம் என்பவற்றை வழங்கி மீள் உருவாக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபடுகின்றார்களா? என்றும் அவர்கள் கேட்டார்கள்.
தமிழ் அரசியல்வாதிகள், போராளிகள் மீது இவ்வாறு கட்டவிழ்த்து விடப்படும் விசாரணைகள் தொடர்பில் மௌனம் காக்காது அதற்கு குரல் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.