மகாவிகாரைப் பல்கலைக்கழகத்தை ஆரம்பிப்பதற்கு ஜப்பானின் உதவியை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தேரவாத பௌத்தம் தொடர்பிலான கற்கை செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடியதாக மேற்படி பல்கலைக்கழகத்தை நிறுவ எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, ஜப்பானுக்கான தனது பயணத்தின் போது அதற்கான உதவிகளைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இதற்காக தாய்லாந்து, பூட்டான் போன்ற பௌத்த நாடுகளின் உதவிகளையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை நேற்றுச் சந்தித்து ஆசிபெற்றுக் கொண்டதன் பின்னரே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கண்டி நகரத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி அதி நவீன நகரமாக மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, கண்டி மாநகர அபிவிருத்தி வேலைத்திட்டங்களை இவ்வருடத்தில் ஆரம்பிக்க உள்ளதாகவும், நாட்டின் அனைத்து மகாணங்களினதும் அபிவிருத்தி திட்டங்களை விரையில் பூர்த்தி செய்ய எதிர்பார்த்துள்ளத்தாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கண்டி பழைய சிறைச்சாலை மற்றும் தபால் நிலைய கட்டடத் தொகுதிகளின் சிறப்பம்சங்களை பாதுகாக்கும் வகையில் அப்பகுதிகளை சுற்றுலாப் பிரயாணிகளின் அவதானத்தை ஈர்க்கத்தக்க இடங்களாக மாற்றியமைப்பதற்கான திட்டமிடல்களை முன்னெடுக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில், கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் வெற்றியடைந்ததன் பின்னர் எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்துக்குள் நாட்டின் பொருளாதாரத்தை உறுதிப்பாடான நிலைக்கு கொண்டு வர முடியும் என நான் நம்புகிறேன். அதிகளவான சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு அழைத்து வர வேண்டும். திருகோணமலை புதிய நகரத் திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கண்டிப் பெருநகர அபிவிருத்தி திட்டத்தை இவ்வருடத்தில் ஆரம்பிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அதன் பின்னர் யாழ்ப்பாண பெருநகர அபிவிருத்தி ஆரம்பமாகும் என்றார்.