Saturday, October 1, 2022
spot_img

Latest Posts

தமிழக உதவியில் கால்வாசி மட்டுமே தமிழர்களுக்கு !

  • – நடராசா லோகதயாளன்

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து மக்களுக்கு சொல்லொனா துன்பங்களை ஏற்படுத்துகிறது. பொருட்களின் விலைவாசி கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை காலையில் ஒன்றாகவும் மாலையில் ஒன்றாகவும் உள்ளது.
அத்தியாவசியப் பொருட்களில் முக்கியமானதாகவுள்ள பெட்ரோல் மற்றும் டீசலின் தாறுமாறான விலையேற்றம் காரணமாக அதைச் சார்ந்துள்ள அனைத்தும் விலையேறியுள்ளன. பணம் கொடுத்தாவது வாகனங்களுக்கான எரிபொருளை வாங்கலாம் என்றால் அதற்கும் வழியில்லை.

மோட்டுவளையைப் பார்த்து உட்கார்ந்திருந்த மக்கள் மனதில் “காலம் ஒருநாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும்” என்ற பாடல் போன்று இந்தியக் கப்பல் வரும், அது வந்தவுடன் நாடு முழுவதும் பெட்ரோலும் டீசலும் ஓடும், அனைத்திற்கும் விடிவு பிறக்கும் என்று மக்கள் நம்பவைக்கப்பட்டிருந்தனர். அடிப்படையில், இந்திய அரசும், தமிழக அரசும் நல்லெண்ண அடிப்படையில் தம்மாலான உதவிகளை இந்த தீவில் வாழும் மக்களுக்குச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே செய்து வந்தாலும் இலங்கை அரசோ நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை இந்தியா, அமெரிக்கா, மேற்குலக நாடுகள், சர்வதேச கொடையாளர்கள் ஆகியோர் தீர்த்துவைக்க வேண்டுமென்றே  எதிர்பார்க்கிறது.

இனப்பிரச்சனைகான தீர்வை தவிர அனைத்து பிரச்சனைகளையும் சர்வதேசம் தீர்க்க வேண்டும் என்று தொடர்ச்சியாகவந்த அரசுகள் எண்ணுகின்றன.
தமிழ் மக்களை இலக்கு வைத்து இந்திய அரசு மூலம் அளிக்கப்பட்ட உதவியில் கால்வாசிக்கும் குறைவாகவே தமிழ் மக்களுக்கும் கிடைக்கவுள்ளது. இலங்கை அரசு வெளியிட்டுள்ள பங்கீடு இதனை நிரூபணம்  செய்கிறது.  நிதி அமைச்சின் அத்தியாவசிய சேவைகளுக்கான ஆணையர்நாயகம், நாட்டின் உணவுத்துறை நாயகத்திற்கு எழுதிய கடிம் மற்றும் அத்துடன் இணைக்கப்பட்டுள்ள பகிர்ந்தளிக்கும் பட்டியல் இதை தெளிவாக்குகிறது.

தமிழ நாட்டில் உள்ள ஓர் சிறுமி தனது உண்டியலில் சேர்த்த பணத்தையும் இரத்து வாழ்பவர் தனது பங்களிப்பையும் செய்தது தமிழர்களிற்கே அன்றி இலங்கைக்கு அல்ல அதனால் அடுத்தவன் வழங்குவதனைக்கூட நந்தி வழிவிடாத நிலமை அவலத்திலேயே காணப்படுப்போது எமது இனப்பிரச்சணை தீர்வில் எவ்வளவு இருக்கும் என்பதனை தமிழ்நாடும் உலகமும் புரிந்துகொள்ள வேண்டும் என யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

இதேநேரம் இனம் சார்ந்த விடயத்தில் எம்மை ஒதுக்கும் இலங்கை அரசு உதவிகள் தேவைப்படும்போது மட்டுமே எமது இனத்தவர்களிடமும் எமது புலம்பெயர்ந்தவர்களிடமும் கையேந்துவதோடு தமிழ்நாட்டையும் திரும்பிப் பார்க்கின்றது என  யாழ்ப்பாணம் கல்வயலைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் த.மாசிலாமணி தெரிவிக்கின்றார்.

இதேவேளை, இலங்கையில் நிலவும் அதிகரித்த பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் முழுமையாக தவித்தாலும்  போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் உச்சகட்ட பாதிப்பினை எதிர்நோக்குவதனால்
தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கிய உதவிப் பொருட்கள் இலங்கையை வந்தடைந்தவரைக்கும் நன்றி தெரிவிக்கும் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தமது அன்பளிப்பில் கூடுதலான அளவில் தமிழ் மக்களுக்கு அளிக்கப்பட இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும்  கோருகின்றனர்.
இந்தியாவின்  மத்திய அரசு அனுமதி வழங்க தாமதம் செய்தபோது இலங்கைக்கான உதவி என தமிழ்நாடு முதலமைச்சர் தனது முடிவை மாற்றி  அறிவித்தார். இதன்போதே தமிழ்நாடு மக்களின் உதவி தமிழர்களிற்கு அரைப்பங்குகூட கிட்டாது என தமிழர் தாயகப் பகுதியிலும் மலையகத்திலும் வாழும் மக்களும் எதிர்வு கூறினார்கள். அது இந்த சுற்று நிரூபம் மூலம் உண்மை என்பது புலப்பட்டுள்ளது. யதார்த்தமாக நோக்கினால், இந்திய உதவி அல்லது இந்திய அரசின் மூலமான உதவி என்பது அடிப்படையில் தமிழ் மக்களுக்கான உதவியாக பார்க்கப்படுகிறது. தமிழக அரசு சார்பில் அளிக்கப்படும் உதவி, சிங்கள மக்களுக்கு பெருவாரியாக பகிர்ந்தளிக்கப்படும் என்கிற செய்தி தமிழக மக்கள் மற்றும் தமிழ்நாடு அரசிற்கு தெரிந்தால் அதற்கான எதிர்வினை பாரதூரமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
இந்தியாவின் உதவியை சற்றே பின்னோக்கிப் பார்ப்பது இந்த சமயத்தில் அவசியமாகிறது. கடந்த1987 ஆம் ஆண்டு ஈழத் தமிழர்களிற்கு உதவ தமிழ்நாட்டின் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரன் இந்திய, இலங்கை அரசுகளிடம்  அனுமதி கோரியபோது இலங்கை அரசு மறுத்தும் பொருட்களை  கப்பலில் ஏற்றி  அனுப்பினார். இதனால் நடுக்கடலில் கப்பல் மறிக்கப்பட்டது. இதன் பின்பு இந்திய விமானப்படை  விமானங்களில் அந்தப் பொருட்கள் ஏற்றி யாழ்ப்பாணத்தில் “ஒப்பரேசன் பூமாலை ” என்ற பெயரில் விமானம் மூலம் போடப்பட்டது. அது எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது வரலாறு.
தமிழ்நாட்டு மக்களிடமிருந்து கிடைக்கபெற்ற உதவிகளைப் போன்றே இலங்கை அரசு அதன் நெருக்கமான கூட்டாளியன சீனாவிடமும் கோரி அரிசி, பெட்ரோல், டீசல் போன்றவற்றை வேண்டி அதையும் நாட்டு மக்களுக்கு பகிர்ந்தளித்திருக்க வேண்டும் என்ற கருத்தும் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளது. இலங்கையில் அபிவிருத்தி என்ற போர்வையில் சீனா செய்த முன்னெடுப்புகள், அதன் மூலம் பலனடைந்தவர்கள், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை தமது வர்த்தக இலாபத்திற்காக பெற்றுக் கொண்டது, சீனாவை நம்பி பல வெள்ளை யானை திட்டங்களை ராஜபக்ச அரசாங்கம் முன்னெடுத்து நாட்டை பெரும் பொருளாதார இக்கட்டில் தள்ளியமை போன்றன  வரலாற்றுப் பதிவுகளாகவே உள்ளன.

இந்தக் காலத்தில்  தீவக  மீனவர்களின் நன்மை கருதி இந்தியா 15 ஆயிரம் லீற்றர் மண்ணெண்னையை தற்போது அனுப்பி வைத்துள்ள செயல் அந்த மீனவர்களிற்கு ஆறுதல் அளித்தாலும் ஏனைய மீனவர்களை ஏக்கத்திலேயே வைத்துள்ளது.

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியினால் எரிபொருள் தட்டுப்பாடும் உச்சமாகவே உள்ளது. இதனால் இந்திய மீனவர்களின் ஊடுருவல் காரணமாக தொழில் பாதிப்பினை எதிர்கொண்ட தீவக மக்கள் விடுத்த கோரிக்கையின் பயனாக முதல் கட்டமாக 15 ஆயிரம் லீற்றர் மண்ணெண்னை கொழும்பை அடைந்துள்ளதோடு விரைவில் யாழ்ப்பாணம் எடுத்து வரப்படவுள்ளது.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ”யாழ்.தீவக மீனவர்களின் கோரிக்கைக்கு அமைவாக  15 ஆயிரம் லீற்றர் மண்ணெண்ணை இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.  யாழ்.தீவக மீனவர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாகவே இந்த  15 ஆயிரம் லீற்றர் மண்ணெண்ணை இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது. அவை கொழும்பை வந்தடைந்துள்ளது. மிக விரையில் யாழ்ப்பாணம் எடுத்துவரப்பட்டு தீவக மீனவர்களுக்கு மட்டும் வழங்கப்படும்.  நயினாதீவு, எழுவைதீவு, நெடுந்தீவு, அனலைதீவு உள்ளிட்ட தீவு பகுதி மீனவர்கள் 750  பேருக்கு  அது பகிரப்படும். அந்த பணியை மீன்பிடி திணைக்களம், பிரதேச செயலகம் மற்றும் மீன்பிடி சங்கங்கள் மேற்கொள்ளவுள்ளன” என்று  தெரிவித்தார்.

இலங்கையில் நிலவும் அதிகரித்த பொருளாதார நெருக்கடி காரணமாகவும. இந்திய மீனவர்களின் ஊடுருவல் காரணமாக பாதிக்கப்படும் மீனவர்களில் தீவக மீனவர்களும் அடங்குவதனால் அந்த மீனவர்களின் வாழ்வாதார மேம்பாடு கருதி உதவுமாறு யாழில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் கோரிக்கை விடப்பட்டது. இந்தக் கோரிக்கையின் அடிப்படையிலேயே இந்திய அரசினால் அன்பளிப்பாக இந்த மண்ணெண்னை வழங்கப்படுகின்றது.

இந்த படிப்பனைகளின் அடிப்படையில் இந்திய அரசு வழங்கும் உதவிகள் இலங்கைக்கான உதவிகளாக அமைந்து கொழும்பு ஊடாகக்கிட்டினாலும் தமிழ்நாடு மக்களின் உதவி ஈழத் தமிழர்களிற்கும் மலையக உறவுகளிற்கும் நேரடியாக கிட்ட வேண்டிய செயலையே தமிழ்நாடு முதல்வர் கூடுதல் கரிசனை கொள்ள வேண்டும் என்ற  கோரிக்கை எழுகின்றது.
அல்லலுறும் இலங்கை மக்களுக்கு இந்தியா மற்றும் தமிழக அரசிடமிருந்து மேலும் ஒரு தொகுதி நிவாரணப் பொருட்கள் விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதன் போது அந்தக் கப்பல்கள் கொழும்புக்கு வராமல் யாழ் காங்கேசன்துறைக்கு வந்து அங்கிருந்து நாட்டின் இதர பகுதிகளுக்கு பகிர்ந்தளிக்கபப்ட வேண்டும் என்ற  கோரிக்கையும் முன்வைக்கப்படுகின்றது.

இதேவேளை, தற்போது வந்துள்ள பொருட்களை பகிர்ந்தளிக்க விடுக்கப்பட்டுள்ள சுற்று நிரூபத்தில் மாவட்டந்தோறுமுள்ள மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் அது பகிர்ந்தளிக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. அதிலும் குறிப்பாக பால்மா விநியோகத்தில் இந்தப் பங்கீடு சரியில்லை என்கிற கடும்  விமர்சனமும் கவலையும் எழுந்துள்ளது.

எந்த தரவுகள் அல்லது கணக்கீடுகளின் அடிப்படையில் இந்த நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்றது  என்பது குறித்து எவ்வித தகவலோ அல்லது விளக்கமோ கொழும்பில் இருந்து வெளியாகவில்லை.
தமிழ்நாட்டிலிருந்து இந்திய அரசின் மூலம் வந்துள்ள உதவி ஓரளவிற்கு உதவியாக இருக்குமென்றாலும், நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்ய இயலாது. புலம்பெயர் தமிழ் மக்கள் செறிந்து வாழும் கனடா, பிரித்தானியா, ஆஸ்திரேலியா, சுவிஸ், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளும் மிகவும் நெருக்கடியான சூழலில் நாடு இருக்கும் நிலையில் உடனடியாக தமது மக்களிற்கு நிவாரண உதவிகளை வழங்கி உதவ வேண்டும் என்ற கோரிக்கை தமிழர் தாயகப் பகுதிகளிருந்து எழுந்துள்ளது. இந்த நாடுகளில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் அந்தந்த நாடுகளுக்கு அளப்பரிய பங்களிப்பை தொடர்ந்து செய்துவரும் நிலையில், அந்த அரசுகளும் இப்படியான சூழலில் இயன்றளவின் உதவ அழுத்தக் கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை தாயக தமிழர்கள் மத்தியில் உள்ளது.

முதற்படியாக கனேடிய அரசிடமிருந்து உணவுப் பொருட்கள், பாலமா, எரிபொருள் போன்ற உதவிகளை உடனடியாக எதிர்பார்த்து தாங்கள் காத்திருப்பதாக தாயக உறவுகள்  தெரிவித்தனர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.