Tuesday, December 6, 2022

Latest Posts

நீர் வளம், நில வளம் உள்ள முல்லை மண்ணில் நிம்மதி ஏன் இல்லை?

(  சிறப்புக் கட்டுரைத் தொடர் பாகம்;- 05)

 யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன்.

கார்த்திகை மாதம் ஈழத்தமிழர்களுக்கு மிகவும் உணர்வுபூர்வமானது. சமூக சமய ரீதியாகவும்   முக்கியத்துவம் உள்ளது.

ஈழத்தில் கார்த்திகை மாதம் மாவீர்ர்கள் தினத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. தமிழர்களுக்கு தனி தேசமே தீர்வு என்ற கொள்கையை அடிப்படையாக வைத்து ஆயுதக் குழுக்கள் அரசிற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தன. இதன் முன்னணியில் இருந்து இறுதிவரை  விடுதலைப் புலிகள் அமைப்பினர் மட்டுமே  இருந்தார்கள். உள்நாட்டுப் போரின் போது உயிரிழந்தவர்களை  நினைவுகூறும் வகையில் கார்த்திகை மாதம் மூன்றாம் வாரம் மாவீரர் வாரம் அனுசரிக்கப்படுகிறது.

அதிலும் முல்லைத்தீவு மாவட்ட மண்ணே போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், அப்பாவி மக்கள் மீதான தாக்குதல்கள், கல்விச்சாலைகள் மற்றும் மருத்துவமனைகள் மீதான தாக்குதல் ஆகிய அவலங்களுக்கு இன்றளவும் மௌனமான சாட்சியாக உள்ளது.

முல்லைத்தீவு எக்காலத்திற்கும் சிவந்த மண்ணாகவே இருக்கும். அந்தளவிற்கு ரத்தக்களறி இடம்பெற்ற பூமி அது.

இறுதிப்போர் வரை வலி சுமந்த முல்லைத்தீவு  பூமியில் அந்த மாவட்ட மக்களின் அவலத்திற்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த இனத்தின் அவலத்திற்கும் சாட்சியாகவுள்ளது. அந்த மண்ணில் நாளை மறுதினம் (27) தமது உறவுகளை நினைவு கூர்ந்து அகவணக்கம் செலுத்தி நினைவுச் சுடர் ஏற்றப்படுமா என உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் ஏங்குவதுபோல் முல்லை மக்களும் ஏங்கி நிற்கின்றனர்.

ஏனெனில் வடக்கு கிழக்கில் அதிக துயிலும் இல்லங்களை கொண்ட மாவட்டமாகவும் முல்லைத்தீவு மாவட்டமே காணப்படுகின்றது. முள்ளியவளை, விசுவமடு, வன்னிவிளாங்குளம், ஆலங்குளம் எனபன ஆரம்பகாலம் முதல் பகிரங்கமாக  இருந்தாலும் இறுதிப் போரின் போதும் இந்திய இராணுவத்தின் காலத்து துயிலுமில்லங்கள் எனவும் அதிக துயிலுமில்லங்கள் கொண்ட அந்த மாவட்டம் மாவீரர் நாளன்று விளக்கேற்ற காத்திருக்கின்ற நிலையில் இதிலும் என்ன அவலம் ஏற்படுமோ என்று கவலைப்படுகின்றனர்.  

முல்லைத்தீவு மாவட்டமானது அவலங்கள் இடம்பெற்ற, அவலங்கள் இடம்பெறுகின்ற மாவட்டங்களில் ஒன்றாகவே இருப்பதனால் அவலங்கள் இடம்பெறும் மாவட்டமாகவே வைத்திருக்க விரும்புகின்றனரோ என்ற சந்தேகம் அந்த மாவட்டத்தவர்கள் மத்தியில் நிலவுகின்றது என்பதை இந்தத் தொடருக்காக அங்கு பயணித்த போது அவதானிக்க முடிந்தது.

ஒடுக்கப்பட்ட தமிழ்  மக்களுக்கு ஓர் விடிவை வேண்டி இந்த மண்ணில், அந்த மண்ணிற்கு தன்னையே அர்ப்பணித்து வீரவித்தாக விதைக்கப்பட்ட ஆயிரமாயிரம் வீரர்களின் வரிசையிலே எனது உடன் பிறந்த சகோதரனான லெப்ரிணன் கேணல் இனியவனையும் சுமந்து நிற்கும் மண்ணும் இதுதான் என்ற வகையில் எனக்கும் அதிக ஆர்வம் உண்டு.

தாய் நாட்டின் விடுதலைக்காக தம்மையே உயிர்க்கொடையாக அளித்த ஏராளமானவர்களில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் வாழ்ந்த கடற்தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். முல்லைத்தீவு கடற்பிரதேசத்தில் இடம்பெற்ற பல சமர்களில் அவர்களின் பங்களிப்பு பாரியளவில் இருந்துள்ளது.

போரின் போது காக்கப்பட்ட பல பிரதேசங்களை நம்பி அதனை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்த கடற்தொழிலாளர்கள் இன்று தமது தொழில் பிரதேசத்தை இழந்து தவிக்கின்றனர். யுத்த காலத்தில் போது வடக்கே இருந்த பொருளாதார தடையின் மத்தியிலும் அந்த மக்களை காத்த ஜீவனோபாயமாக விவசாயமும் மீன்பிடியும் இருந்தன. விவசாய திணைக்களங்களின் நில அபகரிப்பில் அந்த தொழில் நலிவடைய கடற்றொழில் எவ்வாறு அழவடைகின்றது. அதற்கு காரணம் என்ன ?

இதனால்  இந்த மாவட்டத்தின் அவலங்களிற்கு  காரணிகத்தாக்களாக இருப்பவை  என்ன என்று  முல்லைத்தீவைச் சேர்ந்த வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் கடற்றொழில் சங்கங்களில் நீண்டகால அனுபவமும் கொண்டவருமான  து.ரவிகரனை நீர் வளம், நில வளம் உள்ள முல்லை மண்ணில் நிம்மதி ஏன் இல்லை என்று இந்தச் சிறப்பு என்ற சிறப்பு தொடருக்காக கேட்டேன்.

”முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் கிராமத்தில் 1983ஆம் ஆண்டுவரையில் 12 கரைவலைப்பாடுகள் இருந்தபோது  ஒரேயொரு பாடுமட்டும் தென்னிலங்கையரிடம் இருந்தது. மற்றவை தமிழர்கள் கையில் இருந்தன.  இன்று 12 பாடுகளுமே தென்னிலங்கையர்களிற்கு தாரைவார்க்கப்பட்டு விட்டது. முல்லைத்தீவு நகரின் மத்தியிலே  உள்ள கோட்டபாய கடற்படை முகாமானது கரைவலைப்பாடுகளிற்கு வாகனம் மற்றும் தொழிலாளர் சென்று வந்த இடம். இரு அரிச்சல்ப்பாடுகள் இருந்த இடங்களுடன் 617 ஏக்கர் காணிகளையும் ஆக்கிரமித்தே இந்த கடற்படை முகாம் காணப்படுகின்றது”.

காரணங்களை தொடர்ந்து அடுக்கிய அவர், “முல்லைத்தீவு மாவட்டத்தில் போரின் பின்பு மட்டும் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர்களை மாற்றுமாறிகோரி 3 முறை  போராடினோம். இதே சமயம் நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட தொழில் முறைமை முல்லைத்தீவில் தென்னிலங்கையர்கள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகின்றது” என்றார்.

கடற்றொழில் அமைச்சும் திணைக்களமும் பரிந்துரைக்கும் தென்னிலங்கையர்களிற்கு அனுமதி வழங்கப்படுகின்றது என்றும் நாயாற்றிலே அனுமதி இன்றி தென்னிலங்கையர்கள் 350 படகில் இன்றும் தொழில் புரிகின்றனர் என்றார் ரவிகரன்.

”கரைவலைப்பாடு என்பது மீனைப் பெற்றுக்கொள்வதற்காக மட்டும் நோக்கம் கொண்டதல்ல.  அது அதிக தொழிலாளர்களிற்கு வேலை வாய்ப்பை வழங்க்கூடிய முறைமைகளில் ஒன்று. ஆனால் முல்லைத்தீவில்  தென்னிலங்கையர்கள் மேற்கொள்ளும் கரைவலைப்பாடுகள் இன்றுவரை கையால் இழுக்காது உழவு இயந்திரங்கள் மூலமே இழுக்கின்றனர்.  அதற்கு எவருமே நடவடிக்கை எடுக்க  முதுகெலும்பு  இல்லை”.

சுருக்கு வலைத் தொழிலை விஜயமுனி சொய்சா அமைச்சராக இருந்த காலத்தில் இந்த மாவட்டத்தில் தடை செய்திருந்தார். ஆனால் இப்போதுள்ள அமைச்சரின் காலத்தில் நாடு முழுவதும் தடை செய்யப்பட்டுள்ள தொழிலை  கொக்குளாயில் 3 சங்கங்கள் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் 75 கிலோ மீற்றர் நீளமான கடல் இருந்தாலும் அதிலும் சுமார் 20 கிலோ மீற்றர் நீளமான கடல்பகுதிகள் இந்த மாவட்ட தொழிலாளர்கள் செல்ல முடியாத பகுதியாகவே காணப்படுகின்றது. தடை செய்யப்பட்ட தொழிலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் 600 வரையான படகுகள் ஈடுபடுகின்றன.

தமிழர்களின் பீர்வீக பூமியான கொக்குளாய் கடற்றொழில்  பிரதேசம் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது. இங்கே வாழ்ந்த தமிழ் மக்கள் தற்போது புளியமுனை என்னும் கிராமத்தில் வாழ்கின்றனர்.

இவ்வாறெல்லாம், மீன்பிடி, விவசாயம், வீதி, வனப் பகுதிகளில் உள்ள அவலம் பட்டியலிடப்படும் முல்லைத்தீவு மாவட்டத்திலே படையினரின் பிரசன்னமே இல்லையா அல்லது அந்த அவலம் மறைக்கப்பட்டு அல்லது மறக்கப்பட்டு விட்டதோ என வாசகர்கள் எண்ணக் கூடும்.  அந்த தரவுகளை உறுதிப்படுத்துவதில் ஏற்பட்ட கால தாமதமே முதல் 04 பாகத்திற்குள் அதனை கொண்டு வர முடியவில்லை.

முல்லைத்தீவு மாவட்டத்திலே தற்போதும் படையினர் வசம் உள்ள நிலங்கள் தொடர்பாக மாவட்டச் செயலகம் உறுதிப்படுத்தும் 2022 ஆம் ஆண்டின் தகவலின்படி அரச காணிகளில்  தனியாருக்கு காணி அனுமதிப் பத்திரம் வழங்கிய நிலத்தில் 143 பேருக்கு சொந்தமான 1,569 ஏக்கர் நிலமும் தனியார் காணிகளில் 114 பேருக்குச் சொந்தமான 528 ஏக்கர் நிலமுமாக மொத்தம் 257 பேருக்குரிய 2096 ஏக்கர் நிலமே படையினர் வசம் உள்ளது.  உண்மையில் படையினரிடம் இதைவிட பல மடங்கு உள்ளது. பல திணைக்களங்களிற்கு சொந்தமான நிலங்களில் படையினர் நிலைகொண்டுள்ள அளவோ அல்லது மாற்று நிலம் வழங்கியதாக கூறப்படும் பகுதிகள் எவையும் இதில் உள்ளடக்கப்படவில்லை. இப்பட்டியலில் கேப்பாபுலவு விமானப்படைத் தளம் தொடர்பான எந்த தகவலும் கிடையாது. இதேபோன்று அம்பகாமத்தில் இருக்கும் பல ஆயிரம் ஏக்கர் விமானப்படைத் தளம் தொடர்பான தகவலும் இல்லை. உண்மையான அளவுகளெனில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் தற்போதும் 20,000 ஏக்கருக்கும் மேற்பட்ட அளவு நிலத்தில் படையினர் நிலைகொண்டுள்ளனர் என்பதே உண்மை. அதில் பல நிலங்கள் பாதுகாப்பு அமைச்சிற்கே கையளிக்கப்பட்டிருக்கலாம் என்பதனால் மாவட்டச் செயலகம் இவற்றை உள்ளடக்காது.

இந்த நிலமையிலேயே 2022-11-19 அன்று வவுனியாவிற்கு வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு முல்லைத்தீவு மாவட்டத்தின் தேவைகள், உடனடிப் பிரச்சணைகள் அடங்கிய பெரும்  பட்டியலை மாவட்ட அதிகாரிகள் முன் வைத்தனர்.

இதில் மாவட்ட மக்களின் அபிவிருத்தி மற்றும் கால் நடைகளின் மேச்சல்த்தரை  பயன்பாட்டிற்காக வனவளத்  திணைக்களத்தின்  பிடியில் உள்ள நிலங்களில்  43 ஆயிரத்து 501 ஏக்கர் நிலத்தை மாவட்ட நிர்வாகத்திற்கு விடுவிக்குமாறு  கோரப்பட்டது.  அதேபோன்று  ஒதுக்கக்காடுகள் என விரைவில்  வர்த்தமானி அறிவிக்கவுள்ளதாக கூறப்படும்  17 ஆயிரத்து 260 ஹெக்டேயர் நிலத்தின் பெரும் பகுதி நிலம்  தனியாருக்குச் சொந்தமான  நிலம் என்பதனால் அந்த நிலத்தை  வனவளத் திணைக்கள ஆளுகையில் செல்லாது தடுக்க  வேண்டும். குறுந்தூர்மலைப் பகுதியில் விகாரை உள்ள தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டு பகுதியாக  78 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த 78 ஏக்கருடன்அருகில் இருக்கும்  300 ஏக்கர் நிலத்தையும் தொல்லியல்த் திணைக்களம்  கேட்கின்றது. இது  தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் கடும் ஆட்சேபனையில்   அப்பகுதி மக்களின் வாழ்விடம் வயல் உள்ளிட்ட நிலத்தையே தொல்லியல்த் திணைக்களம் கோருகின்றது. அதனால்  இந்த நிலங்களை தொல்லியல்த் திணைக்களம் மக்களிடம்  விடுவித்தே ஆக வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இதன்போது விகாரை  அருகே பாவனைக்கு உரிய இடம் வேண்டும் அதனால் அந்த 300 ஏக்கரும் தமக்கு வேண்டும்  என தொல்லியல்த் திணைக்களம் சார்பிலும் ஜனாதிபதியிடம்  கோரிக்கை விட்ட நிலையில் அங்கே எத்தனை விகாரை அமைக்கப் போகின்றீர்கள் தற்போதுள்ள  78 ஏக்கர் நிலமே  போதுமானது இருப்பினும் ஒரு திசையில் அருகே வருவதனால் அந்த திசையில் 6 ஏக்ரை மட்டும் தொல்லியல்த் திணைக்களத்திற்கு வழங்குங்கள் எஞ்சிய நிலத்தை அதன் உரிமையாளர்களிடமே விடுவியுங்கள் என ஜனாதிபதி பணிப்புரை விடுத்த அதே நேரம் எஞ்சிய நில விவகாரங்கள் எவற்றிற்குமே தீர்வு முன் வைக்கப்படவில்லை. வழமை போன்று குழு அமைத்து காலம் கடத்தும் செயல்பாடே முன்னெடுக்கப்பட்டது.

( அவலத்தின் பட்டியல் நீளும் )

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.