யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் உள்ளே அமைக்கப்படும் விமான நிலைய விற்பனை அங்காடிகள், விமான நிலைய ரக்சி சேவைகளை அப்பகுதி நில உரிமையாளர்களிற்கு வழங்க வேண்டும் என நில உரிமையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மீண்டும் எதிர்வரும் 12ஆம் திகதி திறக்கப்படவுள்ள நிலமையில் விமான நிலையத்தில் வரி விலக்கு விற்பனை நிலையங்கள் , சர்வதேச பொருள் விற்பனைக் கூடங்களுடன் உட்பட பல விற்பனைக் கூடங்களும் விமான நிலைய போக்குவரத்து ரக்சி சேவை மற்றும் முச்சக்கர வண்டிச் சேவைகள் அமைக்கப்படும்.
இவ்வாறு அமைக்கப்படும் சேவைகளை ஏற்கனவே உள்ள வர்த்தகர்களை மேலும் வளர்த்து விடும் செயல்பாடுகளோ அல்லது அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் அன்றி விமான நிலையத்துடன் கூடிய நிலங்களின் உரிமையாளர்கள், விமான நிலையப் பாதைக்காக நிலத்தை அபகரித்தவர்களை இனம்கண்டு அவர்களிற்கு இச் சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். மாறாக இவற்றையும் தென்பகுதியினரிற்கு வழங்குவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக தற்போது கூறப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் 2019ஆம் ஆண்டும் அப்போதைய மாவட்டச் செயலாளரிடம் நில உரிமையாளர்கள் தமது சம்மதம் இன்றி ஏனைய பணிகளிற்காக தமது நிலங்களை விடுவிப்பதனை விரும்பவில்லை. நில உரிமையாளர்கள் இன்றும் வீடு வாசல் இன்றி வாடகை வீடுகளிலும் போதிய தொழில் இன்றியும் அலையும் நேரம் படையினர் அப் பகுதியினை பாதுகாப்பு வலயம் என்னும் பெயரில் அபகரித்து வைத்துள்ள சமயம் குடாநாட்டின் சில பண முதலைகளும் தென்பகுதியினரும் செல்வாக்கின் அடிப்படையில் இவற்றை அமைக்க முயல்கின்றனர்.
எனவே இவற்றினை தடுத்து விமான நிலையம் ஆரம்பிக்கும்போது பலாலிப் பிரதேசத்தில் உள்ள நில உரிமையாளர்களை இனம் கண்டு பிரதேச சபையின் ஊடாக உரிமையாளர்களே வர்த்தக நிலையத் தொகுதியினை அமைப்பதற்கும் பிரதேச சபையும் ஆவண செய்ய வேண்டும். அதேபோன்று வாகன சேவை அனுமதிய்யிலும் நிலங்களை இழந்தவர்களிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
TL