1150 x 80 px
2017 பாதீடு வரவும் செலவும்!

அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டத்தின் முதலாம் வாசிப்புக்கான வாக்களிப்புக்கள் நிறைவடைந்திருக்கின்றன. இந்நிலையில், வரவு செலவுத்திட்டம் தொடர்பாக அரசியல் தலைமைகளால் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்திருக்கின்றது.

நல்லாட்சி அரசாங்கத்தின் பங்காளிகளில் முக்கியமானவர்களான ஜே.வி.யினர், இந்த வரவு செலவுத்திட்டமானது தண்டப்பணத்தையும், வரிகளையும் நம்பி நாட்டை பரிபாலனம் செய்வதான சுரண்டல் கொள்கையுடைய வரவு செலவுத்திட்டம் என்று கூறியிருப்பதுடன், வரவு செலவுத்திட்டத்தை எதிர்த்து வாக்களித்திருக்கின்றது.

அரசின் மற்றுமொரு பங்காளியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டு வகையான கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கின்றது. எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், இந்த வரவு செலவுத் திட்டத்தை அபிவிருத்தியை இலக்காக் கொண்ட வரவு செலவுத்திட்டம் என்று கூறியிருக்கின்றார்.

அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான சுமந்திரன், இந்த வரவு செலவுத்திட்டமானது, அபிவிருத்தியுடனான வளர்ச்சிக்கு தூர நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும், வடக்கின் மீள் குடியேற்றத்திற்கு போதுமான ஒதுக்கீடுகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறியிருக்கின்றார். அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா வரவு செலவுத் திட்டம் தொடர்பில் தன்னுடைய ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது தவிர கல்விக்கான ஒதுக்கீடுகள் இந்த வரவு செலவுத்திட்டத்தில் குறைப்புச் செய்யப்பட்டுள்ளது என்று ஆளுங்கட்சி அமைச்சர்கள் விமர்சித்துள்ளார்கள். பொது எதிர்க்கட்சியினரோ, இந்த வரவு செலவுத்திட்டமானது, மக்களை ஏமாற்றும் பரிந்துரைகளைக் கொண்டது என்று விமர்சித்திருக்கின்றார்கள்.

ஆனால் ஆராய்ந்து பார்த்தால் ஜே.வி.பி கூறியிருப்பதுபோலவே இந்த வரவு செலவுத்திட்டம் இருக்கின்றது. குறிப்பாக வாகன சாரதிகள் தவறு விடுகின்றபோது இதுவரை 500 ரூபாவாக இருந்த ஆகக் குறைந்த தண்டப்பணம் 2000 ரூபாவால் அதிகரிப்புச் செய்யப்படுகின்றது.

நாட்டில் நடக்கின்ற விபத்துக்களையும், சிறிய சம்பவங்களையும் கணக்கிட்டால் தினந்தோறும் சுமார் 2000 வாகன விபத்துச் சம்பவங்கள் நடைபெறுகின்றன என்று தெரியவருகின்றது.

அவ்வாறெனின் 2500 ரூபா வீதம், 2000 சம்பவங்களுக்கு பெருமளவு தண்டப்பணம் அரசாங்கத்தால் அறவிடப்படும். ஆனால் வீதியில் வாகனங்கள் ஏற்படுத்தும் தவறுகளில் அத்தனையும் தண்டனைக்குரிய குற்றங்களாக இருப்பதில்லை. இது தவிரவும் பொலிஸார் தவறு என்று பதிவிடுகின்ற ஒரு சம்பவத்தை வாகன சாரதியால் வாதிடக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. எனவே தண்டப்பணம் அறவீடு என்பது சட்ட ரீதியாக அரசு மேற்கொள்ளும் மோசடி என்று போக்குவரத்து சங்கப் பிரதிநிதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சிலவேளை இவ்விடயம் தொடர்பில் அவர்கள் தமது எதிர்ப்பையும் அரசுக்கு எதிராக விரைவில் வெளிப்படுத்தலாம். அடுத்ததாக சிகரட் மற்றும் மதுவுக்கான விலைகளையும் இந்த அரசாங்கம் உயர்த்தியுள்ளது.

பொதுவாகவே எந்த அரசாங்கமும் வரவு செலவுத்திட்டத்தில் முதலில் கை வைப்பது சிகரட் மற்றும் மதுவில்தான். ஆனால் இம்முறை இவைகளுக்கான விலையேற்றமானது பாவனையாளர்களை விசனமடையச் செய்துள்ளது. இதனால் சந்தையில் போலியான சிகரட்டுக்கள் தயாரிக்கப்படவும், சட்டவிரோத மது தயாரிக்கப்படவும் வழி ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்திருக்கின்றார்கள்.

அடுத்தபடியாக இந்த வரவு செயலவுத்திட்டத்தில் சுய தொழிலையும், சிறு தொழில் முயற்சிகளையும் ஊக்குவிப்பதற்காகவும் கடன் மற்றும் வரிச்சலுகை தொடர்பாக உறுதியான பரிந்துரைகள் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த விடயம் தொழில் முயற்சியாளர்களுக்கு மகிழ்ச்சியளித்தாலும், கடன் சுமையால் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை கடந்த ஒரு வருடத்திற்குள் அதிகரித்திருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கடன் சுமை மற்றும் குடும்ப பொருளாதார வறுமை காரணமாக குடும்பமாகவும், தனி நபர்களாகவும் தற்கொலை செய்து கொண்டவர்களில் குறிப்பாக முல்லைத்தீவு, கிளிநொச்சியை உள்ளடக்கிய வன்னி பெருநிலப்பரப்பிலேயே அதிகமானவர்கள் பலியாகியிருக்கின்றார்கள் என்பதையும் நாம் மறந்துவிடலாகாது.

இந்த வரவு செலவுத்திட்டம் மீன் வளர்ப்பு, விவசாயம், உள்ளுர் உற்பத்திகளுக்கு ஊக்கமளிக்கும் அறிவிப்பைக் கொண்டிருக்கின்றது. அதற்காக வங்கிகளில் இலகு கடன்களையும் குறைந்த வட்டியில் பெற்றுக் கொள்ள முடியும் என்று குறிப்பிடுகின்றது.

ஆனாலும் வங்கிகளில் கடன் பெறுவதற்கு செல்லும் ஒருவர், அங்கு தன்னை நிரூபிப்பதற்கும், தனது நிகழ்கால வருமானத்தை அதிகமாக காட்டுவதற்கும் திண்டாடுகின்ற நிலைமை இருப்பதால், தொழில் முயற்சிக்கான ஆர்வம் இருந்தும் கடன் பெறுவதில் இருக்கும் நெருக்கடிகள் காரணமாக தொழிலில் ஈடுபட முடியாமல் பலர் கூலிகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

எனவே தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் கொடுக்கும் திட்டமானது, பயனாளிகளின் நிலைமையையும், அவரது திட்டங்களின் தன்மையையும் விஷேடமாக ஆராய்ந்து உதவுகின்ற வகையில் வடிவமைக்கப்பட வேண்டும்.

அந்த நெருக்கடிகள் காரணமாகவே ஏழைகள் வங்கிகளில் கடன் பெறுவதைவிடவும், பணம் படைத்தவர்களும், ஏற்கெனவே தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தனது அந்தஸ்த்தை நிரூபிக்கக்கூடியவர்களுக்குமே வங்கிகளில் கடன் பெறுவது இலகுவானதாக அமைகின்றது. பின்னர் அவர்களே வங்கிகளை ஏமாற்றியும் விடுகின்றனர். எனவே எந்தவொரு உதவித்திட்ட அறிவிப்பும் உரிய பயனாளிகளை சென்றடைவதற்கான வழிமுறைகளை கொண்டதாக அமைய வேண்டும் என்ற வற்புறுத்தலை அரசாங்கத்திற்கு யாரேனும் சுட்டிக்காட்டினால் அதை வரவேற்கலாம்.

எது எப்படியாக இருந்தாலும், இந்த வரவு செலவுத்திட்டத்தின் விவாதங்கள் மார்கழி மாதம் 10ஆம் திகதிவரை நடைபெறும், இறுதியில் வரவு செலவுத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும்.

வரவு செலவுத்திட்ட குழு நிலை விவாதங்களிலும்,உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றங்களிலும், மக்கள் நலன் சார்ந்தும்,நாட்டின் நலன் சார்ந்தும், அரசியல் சுய இலாபங்களுக்கு அப்பால் யார் கருத்துக்களை முன்வைக்கப் போகின்றார்கள் என்பதையும், அதன் விளைவுகள் பயனுள்ள பிரதிபலிப்பைத் தருமா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

-ஈழத்துக்கதிரவன்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top