1150 x 80 px
ஊழல் பேர்வழிகளிடம் அதிகாரத்தை மீளளிக்க மக்கள் தயாராக இல்லை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பத்தாண்டு கால ஊழல் நிர்வாகத்தில் அவருடைய அமைச்சர்களும்,

அரச துறை அதிகாரிகளும் மக்களின் வரிப்பணத்தை சூறையாடியது மட்டுமல்லாமல் இன்னும் பல்வேறு முறைகேடான செயல்களிலும் ஈடுபட்டதாக ஏற்கனவே எவ்வளவோ செய்திகள் வெளிவந்து விட்டன.

நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்து ஓராண்டு கடந்து விட்டாலும் இலஞ்சம், ஊழல் என பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பிரபலங்களில் ஒருவர் கூட இதுவரை தண்டிக்கப்படாமல் சுதந்திரமாக நடமாடுகின்ற அதேவேளை, மற்றும் சிலருக்கு எதிரான விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டும் இருப்பதனால் அரசாங்கம் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இருந்தாலும், மீண்டுமோர் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி ஊழல் பேர்வழிகளிடம் அதிகாரத்தை ஒப்படைக்கவும் மக்கள் தயாராக இல்லை.

இந்த நிலையில், மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற முறைகேடான சம்பவங்கள் வெளிவந்த வண்ணமாகவே இருப்பதையும் இங்கு குறிப்பிடத்தான் வேண்டும். இப்போது அம்பலமாகியிருப்பது எமது இராஜதந்திர சேவையாகும். உலகிலேயே மிகச் சிறந்ததென பாராட்டப்பட்ட எமது இராஜதந்திர சேவையையும் தனது ஆட்சிக் காலத்தின் போது மஹிந்த இஷ்டப்படி ஆட்டி வைத்த இரகசியமும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மஹிந்தவின் இரண்டாவது பதவிக் காலத்தின் போது எமது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தனவின் கண்காணிப்பின் கீழ் தான் இருந்தது. வெளிநாட்டமைச்சராக பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் இருந்த போதும் அவருக்கு வெறும் இறப்பர் ஸ்டாம்புக்குரிய அதிகாரம் தான் கொடுக்கப்பட்டிருந்தது. குணவர்தனவுக்கு இராஜதந்திர விவகாரங்களில் எந்த அனுபவமும் இல்லை. அவருக்கிருந்த ஒரே தகுதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவர் காட்டிய உறுதியான விசுவாசம் தான்.

முன்னாள் அதிகார வம்சத்தைச் சேர்ந்த இருவர் வெளிநாட்டு சேவையின் முக்கிய பகுதிகளுக்கு நியமிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் தான் ரஷ்யாவுக்கான இலங்கையின் தூதுவர் உதயங்க வீரதுங்க. இவர் மஹிந்த ராஜபக்ஷவின் உறவினராவார்.

இவர் ரஷ்யாவில ஒன்பது வருடங்கள் தூதுவராகப் பணியாற்றிய ராஜதந்திரி ஆவார். ஆனால் இவர் தொழில்முறை தூதுவர் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராஜபக்ஷ குடும்பத்துடன் நெருக்கம் தவிர சஜின் வாஸ் குணவர்தனவைப் போல இவருக்கும் இராஜதந்திர, சர்வதேச விவகாரங்களில் கொஞ்சம்கூட அனுபவமில்லை. இலங்கையின் இராஜதந்திர சேவையின் உயர்மட்டப் பதவிக்குரிய கல்வித் தகுதியும் இல்லாதவர் தான் உதயங்க. இப்படிப்பட்ட ஒருவரை வைத்து மஹிந்த ஆடிய நாடகம் ஒருபுறமிருக்க, நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பிற்பாடு இவருக்கெதிராகவும் தற்போது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

அடிப்படையில் ஒரு வர்த்தகரான உதயங்கவின் நியமனமும் உறவுமுறை சார்ந்தது தான் என்பது முதல் குற்றச்சாட்டு. மஹிந்த ராஜபக்ஷ இவருடைய மாமனாவார். சர்ச்சைக்குரிய தூதுவர் பதவிக்கு நியமிக்கப்பட்ட ராஜபக்ஷவின் மற்றொரு உறவினர் தான் ஜாலிய விக்கிரமசூரிய. வர்த்தகரான இவரும் 1999ம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து பின்னர் தேயிலை வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தார்.

விக்கிரமசூரியவுக்கு எதிரான மிகப் பெரிய குற்றச்சாட்டு இவர் பதவியிலிருந்தபோது இரண்டு இலட்சத்து நாற்பத்தையாயிரம் (2,45,000) அமெரிக்க டொலர்களை தரகுப் பணமான பெற்றார் என்பது தான். அமெரிக்காவில் இலங்கைத் தூதரகம் அமைந்திருந்த இடத்தை புனரமைப்பு செய்வதற்கு ஒப்பந்தம் செய்தபோது குறிப்பிட்ட தொகையை இவர் தரகுப்பணமாகப் பெற்றதாக விசாரணைகளில் தெரியவந்திருக்கிறது.

விக்கிரமசூரியவைக் கைதுசெய்ய பொலிஸார் ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்க, தனக்கு எதிராக விடுவிக்கப்பட்ட கைது ஆணைக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவு கோரி உதயங்க நீதிமன்றத்தில் அடிப்படை மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

 இலங்கை விமானப்படைக்கு மிக் 27 ரக தாக்குதல் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் நிதி மோசடி செய்ததாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால், இன்டர்போல் ஊடாக இவரைக் கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் ஒக்டோபர் 20ம் திகதி கைது ஆணை ஒன்றை விடுத்திருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.

இந்த நிலையில் தான், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எஸ். பீரிஸின் புதிய கட்சி பற்றிய அறிவிப்பும், அதில் முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ இணைந்துகொண்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகியது. மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக்காலத்தின்போது பல அமைச்சர்களின் விவகாரங்களையும், அரச நிறுவனங்களின் செயற்பாடுகளையும் இவர்தான் கவனித்தார்.

இப்போது பீரிஸின் கட்சியில் இணைந்திருப்பதன் மூலம் தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகிவிட்டதாக வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டார். இந்த நடவடிக்கையானது தனது சகோதரரான மஹிந்த ராஜபக்ஷவையும் ஸ்ரீல.சு. க விலிருந்து பிரிந்து செல்ல ஒருபடி முன்னோக்கி நகர்த்தியிருப்பதாகத்தான் அவதானிகள் கருதுகின்றனர்.

மஹிந்தவும் தற்போதைக்கு புதிய கட்சி ஆரம்பிப்பதாக இல்லை. அரசாங்கம் உள்ளூராட்சி தேர்தலுக்கு திகதி குறிக்காதவரை புதுக்கட்சி ஆரம்பிப்பதால் தனக்கு இலாபமில்லை என அவர் நினைக்கிறார். மஹிந்தவுக்கு இன்னும் பெருமளவு ஆதரவாளர்கள் இருக்கின்றனர். அவர்கள் மஹிந்த என்றாவது ஒரு நாள் ஸ்ரீல.சு. க தலைமைப் பீடத்துடன் சமரசம் செய்துகொள்வார் என நம்புகின்றனர்.

ஆனால், பீரிஸின் புதுக்கட்சியும், அதில் பசில் ராஜபக்ஷ இணைந்திருப்பதும் மஹிந்த ஆதரவாளர்களின் எதிர்பார்ப்புகளை சிதறடித்திருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இந்த நிலையில், அவர்கள் ஸ்ரீல.சு. க வில் தொடர்ந்திருப்பது தான் அவர்களுக்கு இலகுவான, பாதுகாப்பான வழியாகும். அவ்வாறில்லையென்றால், அது ஸ்ரீல.சு. க வை இரண்டாகப் பிரிதது அடுத்த உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் கையை ஓங்கச் செய்யும்.

ரசிக ஜயகொடி

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top