1150 x 80 px
தமிழர்கள் சமஷ்டியைக் கேட்கவில்லை - கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண

தெற்கிலுள்ள கடும்போக்காளர்களும் தீர்வை விரும்பவில்லை. வடக்கிலும் புலம்பெயர் நாடுகளிலுமுள்ள கடும்போக்காளர்களும் தீர்வை விரும்பவில்லை. இருதரப்பினரும் மறைமுகமாக ஒருவருக்கு ஒருவர் துணைபோய்க்கொண்டிருக்கின்றனர் என புதிய அரசியலமைப்பு வழிகாட்டுதல் குழுவின் அங்கத்தவரும் அரசியல் யாப்பு நிபுணருமான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண தெரிவிக்கின்றார்.

தமிழர்கள் சமஷ்டியைக் கேட்கவில்லை​.​ சமஷ்டி மற்றும் ஒற்றையாட்சி என்ற வார்த்தைகளில் சிக்குண்டு கிடப்பதே​​ மக்களிடமுள்ள பிரச்சனை​. அந்த வார்த்தைகளில் சிக்கிக்கொள்ளத் தேவையில்லை. தெற்கில் உள்ள மக்கள் சமஷ்டி என்றால் நாட்டைப் பிரிப்பது என எண்ணுகின்றார்கள். ஒரே நாட்டிற்குள் அதிகாரங்களைப் பகிர்வதே தற்போதைய தேவை எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பு யோசனை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள உப குழுக்களின் அறிக்கைகள் தொடர்பாக இவ்வாரத்தில் நடத்தப்படவிருந்த விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சபையாக அறிவிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் நாளை ஒன்பதாம் திகதியும் பத்தாம், பதினொராம் திகதிகளிலும் உப குழுக்களின் அறிக்கைகள் மீது விவாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் கடந்த வாரம் நடந்த புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில், இந்த விவாதத்தை பிற்போடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையுடன் இணைத்து உபகுழுக்களின் அறிக்கைகள் மீதான விவாதத்தை நடத்துவதென கடந்தவாரம் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புதிய அரசியல்யாப்பு உருவாக்க பணிகளில் முக்கிய பாத்திரத்தை வகிக்கின்றவரும் அரசியல்யாப்பு வழிகாட்டுதல் குழுவின் உறுப்பினரும் லங்கா சமசமாஜ கட்சியின் அங்கத்தவரும் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான அரசியல்யாப்பு நிபுணர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ணவுடனான நேர்காணல்

கேள்வி –

புதிய அரசியல்யாப்பை தயாரிப்பது தொடர்பில் உண்மையான நோக்கத்தை அரசாங்கம் கொண்டிருக்கவில்லை எனவும் ஜெனிவா தீர்மானத்தை அடுத்து சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் விதமாகவே இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சில தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர். இதனை உங்களுடைய குழு​ ​எங்ஙனம் நோக்குகின்றது​?

​பதில் –

அங்கே அப்படியொரு குழு கிடையாது. என்னுடைய குழுவென்று எதுவும் இல்லை. வழிகாட்டுதல் குழுவின் தனிப்பட்ட அங்கத்தவராகவே நான் இருக்கின்றேன். இதனை முன்னெடுப்பதற்காக அரசியல் யாப்பு சபையில் அரசாங்கம் தீர்மானத்தை முன்வைத்தது. அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இது மிகவும் எளிதான விடயமாக அமைந்துவிடாது​. அனைவரும் ஒற்றுமையுடன் தமது கவனத்தைக் குவித்து இதனை நிறைவேற்றவேண்டும். ஆனால் நீங்கள் இதனை (ஏமாற்றுவேலையாக) அனுமானிக்க முடியாது. இருதரப்பிலுமுள்ள கடும்போக்காளர்கள் தீர்வை விரும்பவில்லை. தெற்கிலுள்ள கடும்போக்காளர்களும் தீர்வைவிரும்பவில்லை. வடக்கிலும் புலம்பெயர் நாடுகளிலுமுள்ள கடும்போக்காளர்களும் தீர்வை விரும்பவில்லை. இருதரப்பினரும் மறைமுகமாக ஒருவருக்கு ஒருவர் துணைபோய்க்கொண்டிருக்கின்றனர்.

கேள்வி –

மத்திக்கும் மாகாணங்களுக்குமான உறவுநிலை தொடர்பான உபகுழுவின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் நாட்டைத் தூண்டாடக்கூடிய சரத்துக்களைக் கொண்டுள்ளதென தெற்கில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் புதிய அரசியல் யாப்பு சாத்தியமா என்ற சந்தேகம் தமிழர் தரப்பில் எழுந்துள்ளது?

பதில் – ​

​நாட்டைப் பிரிக்கப்போகின்றார்கள் என்பது புதிய கதையல்ல, அதிகாரங்களை பகிர்வதற்கு விருப்பமில்லாத சிலர் பல்வேறு கதைகளை பரப்பி வருகின்றர். அது தொடர்பில் தமிழ் மக்கள் அச்சமடையத் தேவையில்லை. தனிநாட்டை கோருபவர்கள் தமிழர்கள் மத்தியிலும் இருக்கின்றார்கள். சமஷ்டி அல்லது கூட்டாட்சியைக் கோருபவர்களும் இருக்கின்றார்கள். அவ்வாறு கருத்துக்கள் வெளியாகும் போது தெற்கில் உள்ள மக்கள் குழப்பமடைவார்கள். இவ்வாறான இனவாதிகள் தெற்கிலும் இருக்கின்றார்கள். வடக்கு, கிழக்கு, வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடையே பிரிவினைவாதிகள் இருக்கின்றார்கள். அவர்கள் கூறுவதை கேட்டு தெற்கில் உள்ளவர்கள் அச்சமடைவார்கள் எனினும் அது தொடர்பில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. எனினும் மத்திக்கும் மாகாணத்திற்கும் உள்ள உறவுநிலைதொடர்பான குழுவிடமிருந்து சிறப்பான அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது. சிலர் தமக்கு அளிக்கப்படாத பொறுப்புக்குறித்தும் பேசியுள்ளனர். வழிகாட்டுதல் குழுவில் கூறிய விடயங்களை அவர்கள் கூறியுள்ளனர் என்பது உண்மை. அது பரவாயில்லை. வழிகாட்டுதல் குழு முக்கிய விடயங்களைத் தீர்மானிக்கும். வழிகாட்டுதல் குழுவினால் எதிர்காலத்தில் முன்வைக்கப்படவுள்ள இடைக்கால அறிக்கைக்கு அமையவே மத்திக்கும் மாகாணத்திற்கும் இடையிலான உறவுகள் குறித்த அறிக்கையைப் படிக்கவேண்டும். இது தொடர்பில் உணர்ச்சிவசப்படக்கூடாது. இதனை எதிர்பார்க்கவேண்டும். தமிழ்த்தரப்பு கடும்போக்காளர்கள் விடயங்களைத் கூறும்போது சிங்களத்தரப்பினர் உணர்ச்சிவசப்படுகின்றனர். அதுபோன்று சிங்களத்தரப்பு கடும்போக்காளர்கள் கூறும்போது தமிழ்த்தரப்பினர் உணர்ச்சிவசப்படுகின்றனர். தமிழ் மற்றும் சிங்கள இனவாதிகள் இருவரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவர்கள். ஒருவருக்கொருவர் தங்களை போசித்துக்கொள்கிறார்கள்.

கேள்வி –

புதிய அரசியல் யாப்பு தொடர்பாக தெற்கிலுள்ள அரசியல் தலைவர்கள் பலரும் தற்போது மேடைகளில் உறுதிகளை வழங்கிவருகின்றனர். ஒற்றையாட்சி கட்டமைப்பு பேணப்படும். பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் கூறுகின்றனர். அண்மையில் ஜனாதிபதி கூட பௌத்த பீடங்களுக்கு சென்று இந்த வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். மறுமுனையில் சமஷ்டித் தீர்வு வேண்டும் பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கக்கூடாது போன்ற விடயங்களைத் தமிழ்த்தரப்பு வலியுறுத்துகின்றது. இதனை எவ்வாறு உங்கள் குழு கையாளப்போகின்றது?

பதில் –

​இல்லை இல்லை தமிழர்கள் சமஷ்டியைக் கேட்கவில்லை​.​ ஒருவேளை அவர்கள் சமஷ்டி எண்ணக்கருவை மனதில் கொண்டிருக்கக்கூடும். சமஷ்டி மற்றும் ஒற்றையாட்சி என்ற வார்த்தைகளில் சிக்குண்டு கிடப்பதே​​ மக்களிடமுள்ள பிரச்சனை​. ​ நீங்களும் அதே தவறையே​ ​செய்கின்றீர்கள் என நினைக்கின்றேன். அந்த வார்த்தைகளில் சிக்கிக்கொள்ளத் தேவையில்லை. தெற்கில் உள்ள மக்கள் சமஷ்டி என்றால் நாட்டைப் பிரிப்பது என எண்ணுகின்றார்கள். ஒரே நாட்டிற்குள் அதிகாரங்களை பகிர்வதே தற்போதைய தேவை. சமஷ்டி அல்லது ஒற்றையாட்சி என்ற வார்த்தைகளை விடுத்து மக்களுக்கு வித்தியாசமான விடயங்களைச் செய்ய வேண்டும். பெரும்பாலான சிங்கள மக்கள் ஒற்றையாட்சியையே கோருகின்றார்கள் அவர்களிடம் அதன் பிறகு ஒற்றையாட்சி என்றால் என்னவென அடுத்து ஒரு கேள்வியை எழுப்பினால் பிரிக்கப்பாடாத நாட்டிற்குள் தீர்வு என்றே அவர்கள் கூறுவார்கள். பெரும்பாலான சிங்கள மக்களைப் பொறுத்தவரை ஒற்றையாட்சி என்பது பிரிக்கப்படாத நாடு. மேலும் தெற்கில் பலர் சமஷ்டி என்றால் நாட்டைப் பிரிப்பது என நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவே யாப்பில் உள்ள லேபல்கள் (தலைப்புகள்) முக்கியமல்ல, அதன் உள்ளடக்கமே முக்கியமானது.

கேள்வி –

பௌத்தத்திற்கு அரசியல்யாப்பில் முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்பது தெற்கிலுள்ள தரப்பினரால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சரத்து புதிய அரசியல் யாப்பில் உள்ளடக்கப்படுமிடத்து ஏனைய மதங்களும் இனங்களும் பாதிக்கப்படாதவாறு எவ்வாறு உறுதிசெய்யமுடியும்?

பதில் –

​அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே சரத்திலேயே ஏனைய மதங்களும் அடிப்படை உரிமையின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தவிடயம் சமநிலைப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு உச்சநீதிமன்ற தீர்ப்புக்களுக்கு அமைய இலங்கை ஒரு மத சார்பற்ற நாடு என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென யாப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான் ஒரு இடதுசாரி என்ற அடிப்படையில் இலங்கை மதச்சார்பற்ற ஒரு நாடாக இருப்பதையே விரும்புகின்றேன். அதனை வெளிப்படுத்த வேண்டும். உச்சநீதிமன்றம் பௌத்த மதத்திற்கான முன்னுரிமை தொடர்பிலும் குறிப்பிட்டுள்ளது. தற்போதைய பிரச்சினை அதுவல்ல. அதனை மாற்றியமைக்க முற்பட்டால் சிக்கல் ஏற்படும். பெரும்பாலான மக்கள் அதனை புரிந்துகொள்ளமாட்டார்கள். பிரச்சினைகளை ஏன் உருவாக்க வேண்டும். பதிய யாப்பு ஒன்று தேவையென்றால் விட்டுக்கொடுப்புகள் இரண்டு பக்கத்திலும் அவசியம். அனைவரும் விட்டுக்கொடுப்புடன் இருக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் தரப்பு பௌத்த மதத்திற்கான முன்னுரிமை தொடர்பில் தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். ஆகவே பிரச்சினை அதுவல்ல தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதே அவசியம்.

கேள்வி –

அண்மையில் வெளிநாட்டு செய்தியாளர் சங்கத்தின் ஊடகவியலாளர்களுடன் நடத்திய சந்திப்பின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்த நாட்டிற்கு புதிய அரசியல் சாசனம் அவசியமற்றதெனவும் தற்போதுள்ள அரசியல் யாப்பில் ஒருசில திருத்தங்களை மேற்கொண்டாலே போதும் எனவும் கூறியிருந்தார். அதிகாரப்பகிர்வு அவசியமல்ல எனவும் அவர் கருத்து வெளியிட்டிருந்தார். உங்களுடைய குழு போதுமான அதிகாரப்பகிர்வை முன்வைத்துள்ளதா?

பதில் –

ஆம். ​நாம் சிறப்பானதொரு அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். அதிகாரப்பகிர்வானது போதுமானதாகவும் அர்த்தபூர்வமானதாகவும் அமைய வேண்டும். மத்தியிலும் அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகள் இருக்கவேண்டியது அவசியமாகும். அதன் காரணமாக முன்னோக்கி நகரவேண்டிய கடப்பாடுள்ளது. இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு பிரிக்கப்படமுடியாத பிளவுபடாத நாட்டிற்குள் அதிகாரப் பகிர்வு ஏற்பாடு இடம்பெற்றாகவேண்டும். அதிகாரப்பகிர்வு அந்த நோக்கத்தை அடைவதற்காக மட்டுமல்ல. அதிகாரப்பகிர்வானது முன்னேற்றம் காணாத ஏனைய விடயங்களுக்கு தீர்வுகளைக் காண்பதற்கு அவசியமாகும். ஏனைய மாகாணங்களுக்கும் அதிகாரப்பகிர்வு தேவையாகும்.

கேள்வி –

சமூக பொருளாதார விடயங்களை முன்னெடுக்கும் போது தீர்மானங்களை எடுப்பதற்கான அதிகாரம் மத்தியிலே இருக்கவேண்டும் என்று வாதிடும் தரப்பினரும் உள்ளனர். மாகாணங்களுக்கு போதுமான அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்ற நிலையில் இந்த விடயத்தை எப்படிக் கையாள்கின்றீர்கள்? இந்த விடயத்தில் எத்தகைய ஏற்பாடுகள் உங்கள் குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ளது​?

பதில் –

​உதாரணமாக நோக்குமிடத்து நீர்ப்பாசனத்திட்டங்களைப் பொறுத்தவரையில் பாரிய திட்டங்கள் மத்திய அரசின் கீழ் இருந்தாகவேண்டும் என்பதில் எவ்வித கேள்விக்கும் இடமில்லை. அதேவேளை சிறியளவிலான திட்டங்கள் மாகாண நிர்வாகத்தின் கீழ் இருக்க முடியும். இருந்தாகவேண்டும். அதேபோன்று விவசாயத்துறையை பொறுத்தவரையில் பிரதானமான கொள்கைகளும் திட்டங்களும் மத்திய அரசினால் வகுக்கப்படமுடியும். ஆனால் நாளாந்த விவசாய நடவடிக்கைகள் மாகாணத்திற்குட்பட்டதாக இருக்கவேண்டும். சுற்றாடலை எடுத்து நோக்கினால் அதில் மாகாணத்திற்குரிய சுற்றாடல் என்றோ மத்திக்குரிய சுற்றாடலென்றோ கிடையாது. தற்போது பூகோளத்திற்குரிய சுற்றாடல் பற்றியதாகவே இன்று காணப்படுகின்றது. இவ்வாறான உப விடயதானங்களில் மத்தியும் மாகாணமும் இணைந்து பணியாற்ற முடியும். தேசிய ரீதியான தராதரத்தைக் கொண்டிருப்பதானால் உதாரணமாக பாடசாலைகளை எடுத்து நோக்குமிடத்து பாடசாலைகளை மாகாணங்களை நிர்வகிக்க முடியும். ஆனால் பரீட்சைகள் பாடவிதானங்கள் போன்றவற்றை நடத்துகின்ற உருவாக்குகின்ற விடயத்தை மத்திய அரசு கையாளமுடியும். ​இதனை மத்திய அரசு மேற்கொள்ளும் போது அது மாகாணங்களுடன் கலந்துரையாடவேண்டும். இதுவொரு பங்கேற்புப் பொறிமுறையாக இருக்கவேண்டும். மாகாணங்களுடன் கலந்துரையாடும் போது அவர்கள் தேசிய கொள்கைவகுப்பில் தாமும் பங்காளர்கள் என்பதை உணர்ந்துகொள்வதற்கும் குறித்த விடயத்தில் உரிமைப்பாத்திரத்தை எடுத்துச்செயற்படுவதற்கும் வித்திடும். மத்திய அரசாங்கம் ஒரு விடயத்தை மாகாணங்கள் மீது திணிக்க முற்படும் போதே அவை அதிருப்திகொள்கின்றன.

கேள்வி –

கடந்த காலங்களிலும் அரசாங்கங்கள் புதிய அரசியல் யாப்பைக் கொண்டுவருவதற்கு முயற்சித்தன. இம்முறை முயற்சி வெற்றியளிக்கும் என நினைக்கின்றீர்களா?

பதில் –

இம்முறை எனக்கு அதிகமான நம்பிக்கையுள்ளது. ஏனெனில் நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையோ சாதாரண பெரும்பான்மையோ கிடையாது. ஆனால் கூட்டாக அவர்களுக்கு தெளிவான பெரும்பான்மைப் பலமுள்ளது. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் ஆதரவோடு அவர்கள் வரவுசெலவுத் திட்டத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றினர். அந்தவகையில் சாத்தியமான ஏதுநிலை காணப்படுகின்றது. ஆனால் அவர்கள் நெகிழ்வுப் போக்கை கொண்டிருக்க வேண்டும். அனைவரும் நெகிழ்வுப் போக்குடன் நடந்துகொள்ளவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எடுத்துக்கொண்டால் அவர்கள் நெகிழ்வுப் போக்குடன் நடந்துகொண்டுள்ளார்கள். வடக்கிலும் புலம்பெயர் நாடுகளிலுமுள்ளவர்கள் நெகிழ்வுப்போக்கை கொண்டிருப்பார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் ஒருபோதும் நெகிழ்வுப்போக்கை கொண்டிருக்கவில்லை. ஏனெனில் அவர்கள் தீர்வு கிட்டுவதை விரும்பவில்லை. அதேபோன்று தெற்கிலுள்ள கடும்போக்காளர்களும் ஒருபோதும் நெகிழ்வுப்போக்கை கொண்டிருக்கப்போவதில்லை. ஆனால் இடைநடுவிலுள்ள மக்கள் நெகிழ்வுப்போக்கை கொண்டிருக்க வேண்டும். அப்போது இதிலிருந்து உச்சபட்சமானதை எடுத்துக்கொள்ளமுடியும்.

கேள்வி –

உருவாகும் அரசியல் யாப்பு தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை. நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையே போதுமானதென சிலதரப்பினர் கூறுகின்றனர். இது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு?

பதில் –

புதிய அரசியல்யாப்பு எமக்கு தேவையென்றால் நாம் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. அதுவே தற்போதைய அரசியல்யாப்பிற்கு அமைவாக அவசியமானது. எந்தக்கட்டத்திலும் புதிய அரசியல்யாப்பென்று வரும்போது அது மக்களால் அங்கீரிக்கப்படுவது சிறப்பானதாகும். அப்போதுதான் மக்களின் பெரும்பான்மையானவர்களின் ஆதரவு கிடைக்கும். அப்போது அதற்கு அதிகமான சட்டஅங்கீகாரம்​ இருக்கும்.

கேள்வி –

வார்த்தைகளில் தொங்கிக்கொண்டிருக்கக்கூடாது என நீங்கள் குறிப்பிட்டீர்கள். ஆனால் சமஷ்டி போன்ற வார்த்தைகள் அரசியல் யாப்பில் இல்லாவிட்டால் நீதிபதிகள் எந்தக்கட்டத்திலும் மாகாணங்களுக்கு அதிகாரமில்லை​ ​இது ஒற்றையாட்சி கட்டமைப்பைக் கொண்ட நாடு என அர்த்தம் தர முடியும் என அண்மையில் ஒரு வாதத்தை நான் செவிமடுத்திருந்தேன். இவ்வாறான பொருள் கோடல் ஏற்பாடாமல் இருக்க என்ன செய்யவேண்டும்?

பதில் –

அதிகாரப் பகிர்வை அளித்து அரசியல் யாப்பில் அதனை மிகவும் தெளிவாக சுட்டிக்காட்டுமிடத்து நீதிபதிகளால் அவ்விடயத்தில் பேய்க்காட்டமுடியாது. விடயங்களை மிகவும் தெளிவாக குறிப்பிடவேண்டும். விடயங்களில் தெளிவிருக்கவேண்டும் என்றே நான் கூறுகின்றேன். 13ஆவது திருத்திலுள்ள சில சரத்துக்கள் தெளிவாக இல்லை. ஆகவே அவற்றை மிகவும் தெளிவாக குறிப்பிடவேண்டும். எமக்கு தேவையானது என்ன என்பதை நீதிபதிகளுக்கு தெளிவாக விளங்கிக்கொள்ளக்கூடியதாக அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டால் இவ்வாறான நிலை ஏற்பாடாது. புதிய அரசியல் யாப்பை உருவாக்கும் போது நாம் அதனை தெளிவுபடுத்தவேண்டும்.

கேள்வி –

புதிய அரசியல் யாப்பு வரைவை உருவாக்கும் பணி இறுதிசெய்யப்பட்டுவிட்டதா?

பதில் –

எந்த வரைபும் இன்னமும் இறுதிசெய்யப்படவில்லை. இன்னமும் நாம் அரசியல்யாப்பை வரையும் பணியை ஆரம்பிக்கக்கூட இல்லை. ஏனெனில் பிரதானமான விடயங்களில் வழிகாட்டுதல் குழு தீர்மானங்களை எடுப்பதற்காக நாம் காத்திருக்கின்றோம்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top