1150 x 80 px
சதி செய்து எமது பயணத்தை தடுக்க முடியாது - திகாவுடன் சிறப்பு நேர்காணல்

நல்லாட்சி அரசு மலையகத்தில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவில்லை என்று எவர் கூறினாலும் அது முட்டாள்தனமான கருத்துகள். தற்போதைய அரசே காணி உறுதிப் பத்திரங்களுடன் மலையக மக்களுக்குச் சொந்தக் காணிகளை வழங்குகின்றது.

மலையகத்தை கடந்த காலத்தில் ஆட்சிசெய்தவர்கள் எதனைச் செய்தனர் என்று மக்களுக்கு நன்கு தெரியும். தற்போது நாம் எந்தத் திட்டத்தை முன்னெடுத்தாலும் அதனை அவர்களின் திட்டம் என்று தம்பட்டம் அடிக்கின்றனர். ஏன் அப்போது அதனை செய்யவில்லை? பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு அபிவிருத்தித் திட்டங்களைத் தடைசெய்யவும் முடியாது. நான் மக்களுக்கு செய்ய முன்னெடுக்கும் பணிகளையும் எமது பயணத்தையும் அவர்களால் தடுத்த நிறுத்த முடியாது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாரம்பரம் தெரிவித்தார்.

மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சில் அவருடன் இடம்பெற்ற விசேட நேர்காணலின் போது இவ்வாறு கூறினார்.

அவரின் முழுமையான நேர்காணல் பின்வருமாறு:

கேள்வி: தமிழ் முற்போக்குக் கூட்டணியை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவுசெய்யத் தீர்மானித்துள்ளீர்கள். இதற்கான காரணம் என்ன?

பதில்: சிறுபான்மைக் கட்சிகள் தனித்தனியாக இயங்குவதால் எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை. ஒன்றாகச் சேர்ந்து இயங்கினால் பல வெற்றிகளை அடைய முடியும். இதனை இன்று தமிழ் முற்போக்குக் கூட்டணி சாதித்துக் காட்டியுள்ளது. ஒன்றாகச் சேர்ந்து தேர்தலை சந்தித்ததாலேயே ஆறுபேர் நாடாளுமன்றத்திற்கும் தெரிவாகினோம்.

மக்களுக்கு காணிகளைப் பெற்றுக்கொடுத்துள்ளோம்; தனி வீடுகளைப் பெற்றுக்கொடுத்துள்ளோம்; காணி உறுதிப்பத்திரமும் பெற்றுக்கொடுத்துள்ளோம். இதுவே, நீண்டகாலமாக கவனிப்பாற்று கிடந்த சமூகத்திற்கு கிடைத்த வெற்றியாகும். எனவே, தனித்தனியாக இயங்குவதால் வெற்றிகளைப் பெற முடியாது. பெயரளவில் மாத்திரமே இயங்க முடியும். மக்களுக்கும் எதனையும் பெற்றுக்கொடுக்க முடியாது.

கே: தமிழ் முற்போக்குக் கூட்டணியை அரசியல் கட்சியாகப் பதிவுசெய்வதால் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தனித்துவம் பாதிக்கப்படாதா?

அது ஒரு பிரச்சினை இல்லை. இம்முறை மே தினத்தை நாங்கள் தனித்தனியாகத்தான் செய்யவுள்ளோம். கூட்டணியாக இருந்தாலும் நாங்கள் தனித்தனியாக இயங்க முடியும்.

கே: நல்லாட்சி அரசு மலையக மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளதா?

ப: உண்மையில் நல்லாட்சி அரசு அமையப் பெற்றதால்தான் மலையக மக்களுக்கு விமோசனம் கிடைத்துள்ளது. 200 வருடகாலமாக லயத்தில் வாழ்ந்தவர்களுக்கு 7 பேர்சர்ஸ் காணி உறுதிப்பத்திரத்துடன் கூடிய வீடு கிடைக்க வழி வகுக்கப்பட்டுள்ளது. 200 வருடகாலப் பிரச்சினையை ஒரே இரவில் தீர்த்துவிட முடியாது. கட்டங்கட்டமாகத்தான் அதனைச் செய்துமுடிக்க வேண்டும். 2020இல் 50ஆயிரம் வீடுகளைக் கட்டிமுடிப்பதே எமது இலக்கு. இந்த அரசு மாத்திரமே 7 பேர்சர்ஸ் காணியுடன் அதற்கான உறுதியையும் கொடுக்கிறது.

கே: மலையக மக்களின் பிரச்சினை தொடர்பில் இந்த அரசு கண்டுகொள்வதில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதே?

ப: அவை பொய்யான குற்றச்சாட்டுகளாகும். சிறு சிறு குற்றச்சாட்டுகளை மட்டும் சுட்டிக்காட்டுபவர்கள் ஏன் அரசு முன்னெடுக்கும் நல்ல விடயங்களை சுட்டிக்காட்ட மறுக்கின்றனர்? சம்பள விடயத்தில் அரசு தலையிட முடியாது. அது கம்பனிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்குமிடையில் செய்துகொள்ளப்படும் ஒப்பந்தமாகும்.
பிரதேச சபைகள் ஊடக பெருந்தோட்ட மக்களுக்கு அபிவிருத்திகளை முன்னெடுக்கத் தடையாகவிருந்த சில சட்டங்களும் திருத்தப்பட்டு வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவை விரைவில் நாடாளுமன்றில் அங்கீகரிக்கப்படும். இந்த அரசை குறைசொல்ல முடியாது. அரசின் மூலம் சிறந்த வேலைத்திட்டங்கள் மலையகத்தில் முன்னெடுக்கப்படுகின்றன என்பதே நிதர்சனம்.

கே: மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சை உங்களால் சுதந்திரமாக இயக்க முடிகிறதா?

ப: சிறந்த முறையில் முன்னெடுக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதனை மக்களிடம் சென்று கேட்டால் கூறுவார்கள்.

கே: இந்த வருடத்திற்குள் எத்தனை வீடுகளைக் கட்டுவதற்கு எதிர்பார்த்துள்ளீர்கள்?

ப: 2 ஆயிரம் வீடுகளைக் கட்டுவதற்கு அரசு பணம் ஒதுக்கியுள்ளது. 10இலட்சம் ரூபா வீதம் ஒரு வீட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் 5இலட்சத்து 50ஆயிரம் ரூபாவே ஒரு வீட்டுக்காக ஒதுக்கப்பட்டது. இதில் 2 இலட்சம் மாத்திரமே அரசு கொடுக்கும் பணமாகும். நான் தற்போது அதனை 10இலட்சமாக மாற்றினேன். அதன் அடிப்படையில் வீடுகள் கட்டப்படவுள்ளன

கே: இ.தொ.கா. 10இலட்சம் ரூபாவில் வீடுகளைக் கட்டிக்கொடுப்பது மாத்திரமின்றி, அந்தப் பணத்தை அறவிடப் போவதில்லை என்றும் கூறியிருந்தது. ஆனால், நீங்கள் 10ரூபாவில் வீடுகள் கட்டிக்கொடுத்தாலும் அதில் குறிப்பிட்டளவு பணம் அறவிடப்படவுள்ளதே?

ப: இ.தொ.கா. எந்தக்காலத்தில் இலவசமாக மக்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுத்தது? ஒரு வீட்டையாவது சொந்தமாகக் கொடுத்துள்ளதா? நான் அமைச்சின் பொறுப்பை ஏற்றபின்னர்தான் மக்களுக்கு வீடுகளை சொந்தமாகக் கொடுத்துள்ளேன். அவர்கள் வாய்ப்பேச்சு வீரர்களேயன்றி மக்களுக்கு எதையும் செய்யவில்லை.
நான் எந்தவொரு திட்டத்தை முன்னெடுத்தாலும் அது தாங்கள் செய்ததாகக் கூறி தங்களுடைய திட்டம் என்று தம்பட்டம் அடிக்கின்றனர். அவர்களின் திட்டமாயின் ஏன் அப்போது செய்யவில்லை? நான் வந்தபின்னர் செய்கின்றேனே. ஆடத் தெரியாதவர்களுக்கு மேடை கோணலாம். என்பதுதான் இ.தொ.காவின் கதை. அபிவிருத்தித் திட்டங்களை யார் முன்னெடுக்கின்றார்கள் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். இந்தப் பயணத்தை எவராலும் தடுக்க முடியாது.

கே: கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மலையக மக்கள் செறிந்து வாழுகின்றனர். ஆனால், உங்களுடைய வேலைத்திட்டங்கள் எதுவும் குறித்த மக்களை சார்ந்து முன்னெடுக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறதே?

ப: நாங்கள் சனத்தொகையின் அடிப்படையிலேயே வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றோம். நுவரெலியா மாவட்டத்திலேயே மலையக மக்கள் பெரும்பான்மையாக வாழுகின்றனர். அதன் அடிப்படையில் கட்டம் கட்டமாக பிரித்தே வேலைத்திட்டங்களும், அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்படுகின்றன. கேகாலை மாவட்டத்திலும் சில வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கபடவுள்ளன.

கே: இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 4,000ஆயிரம் வீடுகள் கட்டப்படவுள்ளன. அதேவேளை, மேலதிக வீடுகளுக்கும் நீங்கள் கோரிக்கை விடுத்துள்ளீர்கள. அத்துடன், இந்திய அரசு வேறு வேலைத்திட்டங்கள் எதனையும் முன்னெடுக்கவுள்ளதா?

ப: இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 4ஆயிரம் வீடுகள் கட்டப்படவுள்ளன. ஒரு வீட்டுக்கு 9இலட்சம் என்ற அடிப்படையில் செலவிடப்படவுள்ளது. ஆனால், ஒரு வீட்டைக் கட்டுவதற்காக ஒரு இலட்சத்து 10ஆயிரம் ரூபாவை காணி விடுவிப்புக்காக எனது அமைச்சின் மூலம் வழங்கப்படுகிறது. மலையக மக்களுக்காக எவர் சேவை செய்ய வந்தாலும் அவர்களுக்கு நேசக்கரம் நீட்டி நான் ஆதரவு கொடுப்பேன். நான் பிறந்த மண் மலையகம். அந்த உணர்வின் அடிப்படையிலேயே முழு மூச்சுடன் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றேன். ஆனால், சிலர் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதுமில்லை; அதனைச் செய்வதுமில்லை; செய்யவும் விடுவதில்லை. அதனை சீர்க்குலைக்கவே பார்க்கின்றனர். இந்திய அரசு எமக்கு முழு ஒத்துழைப்பை வழங்கிய வண்ணம்தான் உள்ளது.

கே: மலையக மக்களின் அபிவிருத்திக்காக ஐ.நா. வகுத்த பத்தாண்டு திட்டத்தை ஐந்தாண்டு திட்டமாக நடைமுறைப்படுத்த முயற்சிகளை முன்னெடுத்தீர்கள். இத்திட்டத்தின் தற்போதைய நடைமுறைத் தன்மை என்ன?

ப: ஐ.நா. திட்டத்தை விட இது மக்களுக்கான திட்டம். இத்திட்டத்தில் 80வீதமானவை வீடுகள் கட்டப்படுவது. அத்துடன், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல இதர காரணிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் கட்டங்கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கான நிதி உலக வங்கி உள்ளிட்ட பல இடங்களில் பெறப்படுகிறது. நுவரெலியா மாவட்டத்தின் குடிதண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வுகாண 40மில்லியன் அமெரிக்க டொலர்களை உலக வங்கி கொடுத்துள்ளது. சிறுவர் பராமரிப்பு நிலையங்களை அமைக்க 10 மில்லியன் டொலர் கொடுத்துள்ளனர். இவ்வாறுதான் ஐ.நாவின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

கே: அண்மைய காலமாக மலையகத்தில் பல போராட்டங்கள் வெடித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, இரண்டு ஏக்கர் காணி தொடர்பிலான கோரிக்கை வலுப்பெற்று வருகின்றது. இந்த விடயத்தை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
ப: இது வேலை வெட்டி இல்லாதவர்கள் செய்யும் கூத்து என்றே சொல்ல வேண்டும். நாங்கள் ஜனாதிபதியிடம் பேசாமல் ஒன்றும் நடைபெறாது. நுவரெலியாவில் தேயிலைத் தோட்டங்கள் காணப்படுவதால் 7 பேர்சர்ஸ் காணி என்பது அங்கு போதும். அதற்கு மேல் காணிகளை வழங்குவதானால் தேயிலைத் தோட்டங்களை அழிக்கவேண்டிய சூழல் ஏற்படும். தேயிலைத் தோட்டங்களை அழித்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும். கண்டியில் தேயிலை இல்லாத காணிகளைப் பிரித்துக்கொடுக்கும் போது எமது மக்களுக்கு இரண்டு ஏக்கர் வீதம் கொடுத்துவிட்டு ஏனையவற்றை எவருக்கும் கொடுங்கள் என்று கூறியுள்ளோம். எனவே, இதனைக் கருத்தில் கொண்டுதான் பேச வேண்டும். 20 பேர்சர்ஸ் காணி வாங்கிக் கொடுப்பதற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்லர். ஆனால், தேயிலைத் தோட்டங்கள் அழிக்கப்பட்டால் அந்த மக்களின் வாழ்வாதாரத்தை எங்கே போய்த் தேடுவது?

கே: அப்போது அண்மையில் எயாபார்க் தோட்டத் தொழிலாளர்கள் மேற்கொண்ட போராட்டம் தேவையற்றதா?

ப: அந்தப் போராட்டம் சொல்லிக்கொடுத்து முன்னெடுக்கப்பட்ட ஒரு போராட்டம். அந்த மக்களுக்கும் எதுவும் பிரச்சினை என்றால் நாங்கள் எவ்வாறு விட்டுக்கொடுப்போம். அதற்காகத்தான் நாங்கள் உள்ளோம். எங்களை நம்பி வாக்களித்த மக்களை நாங்கள் காப்பாற்றுவோம். சிலரின் தேவைக்காகவே அந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கே: மலையகத் தலைமைகள் மற்றும் மலையகக் கட்சிகளின் ஒற்றுமையின்மை காரணமாகத்தான் அபிவிருத்திகள் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக அண்மையில் ஜனாதிபதி கூறியிருந்தார். இந்தக் கருத்துத் தொடர்பில்

ப: நாங்கள் ஒற்றுமையாகவே செயற்படுகின்றோம். இ.தொ.கா. என்று தற்போது ஒரு கட்சியுள்ளதா? மக்களின் நலன் கருதிச் செயற்படுவோரே ஒன்றிணைந்து பணியாற்றுகின்றோம்.

கே: கூட்டு ஒப்பந்தத்தை மீள் பரிசோதனை செய்யப் பாவதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கூறியுள்ளது. இந்த விடயம் தொடர்பில்?

ப: கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. கம்பனிகள் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பற்றத் தவறியுள்ளன. ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்போதே 18, 20 தொடர்பில் எதுவும் கூறவில்லை. சாதாரண சம்பள அதிகரிப்பே வழங்கப்பட்டது. அதனையாவது கம்பனிகள் முறையாக வழங்கவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

கே: தேர்தலின் போது கூட்டு ஒப்பந்தத்திற்குப் பதிலாக மாற்று முறையொன்று பரிசீலிக்கப்படும் என்று கூறினீர்கள். அது தொடர்பில் ஏதும் பரிசீலிக்கப்பட்டதா?

ப: கூட்டு ஒப்பந்த முறை மாற்றப்பட வேண்டும் என்பதே எமது வாதமாக இருந்தது. எந்தவிடம் தொடர்பில் நாங்கள் பல தரப்பினருடனும் பேசியுள்ளோம். ஆனால், ஆழமான கருத்தாடல்கள் எதவும் இதுவரை இடம்பெறவில்லை. அடுத்தமுறை ஒப்பந்தக் காலம் வரும்போது நிலையான தீர்வுகள் எட்டப்படும்.

கே: புதிய அரசமைப்புக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மலையக மக்களுக்கான தீர்வுத் திட்டம் தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?

ப: என்னுடைய தனிப்பட்ட கருத்தானது மாகாணங்களுக்கு முழுமையான அதிகாரப் பகிர்வு அளிக்கப்படக் கூடாது என்பதேயாகும். வடக்கு, கிழக்கு பிரச்சினையையும் மலையக மக்களின் பிரச்சினையையும் ஒப்பிட முடியாது. அவர்களின் பிரச்சினை வேறு. அது தொடர்பில் நாம் கருத்துக்கூற முடியாது. மலையக மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் முழுமையான அதிகாரம் மாகாணங்களுக்கு அளிக்கப்பட்டால் அது பிரச்சினைக்குரிய ஒன்றாகும்.
மாகாண முதலமைச்சராக வருபவர் ஓர் இனவாதியாகவோ அல்லது எதிர்ப்பாலாராகவோ வரும் பட்சத்தில் பெரும் பிரச்சினைகள் தோற்றம் பெறும். மலையகத்தைப் பொறுத்தமட்டில் தமிழ், சிங்கள மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்கின்றனர். இங்கு எமக்கான தனி அலகு எனக் கேட்க முடியாது. தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் வழி நடத்தல் குழுவில் உள்ளார். அவர் எமது மக்களின் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்ளும் முறையிலான தீர்வுத் திட்டத்தை முன்மொழிந்து நடவடிக்கைகளை செய்து வருகின்றார். ஆனால், பிரதேச சபைகள், பிரதேச செயலகங்களில் எமக்கான அதிகாரத்தையும் சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தித்தருமாறு கோரிக்கை விட பின்நிற்க மாட்டோம். மலையக மக்கள் செறிந்து வாழ்வதால் நுவரெலியா மாவட்டத்தை மாத்திரம் முன்நிறுத்திப் பேசுவது பொருத்தமானதாக அமையாது.

கே: எல்லை நிர்ணயத்திற்கு சிறுபான்மைக் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இதன் அடுத்தகட்டம் என்ன?

ப: கடந்த அரசின் காலத்தில் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் தேவைக்கே எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள எல்லை நிர்ணயத்திலும் பாரிய குறைப்பாடுகள் உள்ளன. குறிப்பாக, சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதித்துவம் வெகுவாகப் பாதிப்படையும்.
எனவே, உடனடியாக தேர்தலுக்குச் செல்லவேண்டும் என்றால் பழைய தேர்தல் முறையின் கீழே செல்ல வேண்டும். சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவங்கள் பாதிக்காத வண்ணம் எல்லை நிர்ணயம் மேற்கொண்டே புதிய முறையின் கீழ் தேர்தலுக்குச் செல்ல முடியும்.

நேர்காணல்- சு. கிஷாந்தன்

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top