1150 x 80 px
இலங்கைப் பொப் இசையின் தூண்களில் ஒன்று சரிந்துவிட்டது

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தின் பொப் இசையில் தனக்கென ஓர் தனி முத்திரையைப் பதித்திருந்த பொப் இசைச் சக்கரவர்த்தி ஏ.இ.மனோகரன் நேற்றைய தினம் தமிழ் நாட்டில் காலமான செய்தி ஈழத்து இசை ரசிகர்களை மட்டுமல்ல சிங்கள மற்றும் இந்திய இசை ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஏ.இ.மனோகரன் அல்லது சிலோன் மனோகரன் ஒரு சிறந்த ஆளுமை; ஈழத் தமிழ் இசைத்துறையில் புகழ்பாடி அழைக்கத்தக்க இசை மேதை; தனது பொப் இசையால் இசை ரசிகப்பெருமக்களை மிக நுணுக்கமாகக் கவர்ந்தவர்.

எழுபது எண்பதுகளில் பொப் இசை மிகப் பிரபலமாக இருந்தபோது சிங்களவரும் தமிழரும் அதற்கு புது வடிவம் கொடுத்து பாடல்களை ஆக்கத்தொடங்கினர். பொப் இசையும் பைலாவும் இலங்கையில் மிக மூச்சுப்பெற்ற தனித்துவக் கலை வடிவங்களாகும்.

இசைக்கு பொப் என்றால் நாட்டியத்திற்கு பைலாவைச் சொல்லலாம். ஆனால் மறந்தும்கூட பொப் இசையையோ அல்லது பைலா பாட்டையோ இலங்கைக்குரிய தொன்றுதொட்ட தனித்துவக் கலை வடிவங்கள் என்று சொல்லிவிடமுடியாது.

இவை இரண்டும் சிங்களவருக்கு உரியவையுமல்ல தமிழருக்கு உரியவையுமல்ல. அவற்றின் உருவாகம் என்பது வெளி நாட்டவர்களின் வருகையின் பின்னரான காலப்பகுதியாகும்.

பொப் இசையையும் பைலா பாட்டையும் இலங்கையில் முதன்முதல் மெருகேற்றியவர்கள் ஈழத் தமிழர்கள் தான். ஆனால் எம்மவரிடையே ஆவணப்படுத்தவேண்டும் என்ற எந்தவித முற்சிந்தனையும் இல்லாமையினால் அது ஏனோ சிங்களவருக்குரியதாக பார்க்கப்படும் ஒரு கண்ணோட்டம் இருக்கின்றது. ஆனால் அது சிங்களவருடையதும் இல்லை.

இலங்கையில் பொப் இசை அறிமுகமானது போர்த்துக்கேயர் வருகையின் பின்பே. தமது மதப் பிரசாரங்களைக் கையிலெடுத்த அவர்கள் தேவாலய பிரார்த்தனைக் கூடங்களில் பொப் இசையினைப் பயன்படுத்தினர்.

இதுவே நாட்டின் சுதேசிகளாயிருந்த சிங்களவர்கள் மத்தியிலும் தமிழர்கள் மத்தியிலும் பரவத்தொடங்கியது. ஆங்கிலேயர் வருகையின் பின்னர் அவர்கள் அறிமுகப்படுத்திய மேலைத்தேய இசை வாத்தியங்களோடு சங்கமித்து பொப் இசை புதிய வடிவம் ஒன்றினைப் பெற்றது.

சுதேசிகளிடத்தே பொப் பிசை வளர்ந்ததென்றால் அது இலங்கைத் தமிழரிடத்தே என்றுதான் சொல்லமுடியும். குறிப்பாக இலங்கையின் யாழ்ப்பாணத் தமிழரிடையே பொப் இசைக் குழுக்கள் முதன்முதலில் தோன்ற ஆரம்பித்து பட்டிதொட்டியெங்கும் பரவத்தொடங்கியது. இதன்பின்னர் சிங்கள மக்கள் மத்தியிலும் பரவத்தொடங்கி ஏராளமான பொப் பாடல்கள் வெளிவரத் தொடங்கின.

“சின்னத்தம்பி சீமானாம் சிப்பிலி சந்தைக்கு போனாராம்

அங்கே ஒருத்தியைக் கண்டாராம் கும்மாட்டம் தம்பட்டம் போட்டானாம்” என்பது இலங்கையின் ஆரம்பகால பொப் பாடலாகும்.

பைலாவின் நிலைமையும் இதுவே. இலங்கையில் பைலாவின் அறிமுகம் போர்த்துக்கேயர் வருகையுடனே வந்தது. ஆபிரிக்க-போர்துக்கேய கலப்பினைக் கொண்ட பைலா ஆடலும் பாடலுமானது இலங்கையிலுள்ள ஆபிரிக்க வம்சாவழி மக்களான காப்பிரி இன மக்கள் பாரம்பரியமாக பயன்படுத்தும் இசை வடிவத்தைத் தழுவியதாகும். பைலா பாடல்களின் சொந்தக்காரர்கள் அவர்களே.

இலங்கையில் தோற்றம்பெற்ற பொப் மற்றும் பைலா பாடல்களின் முதன்மையான முன்னோடிப் பாடல்களானவை, ’சுறாங்கனி’ பாடலும் ‘சின்ன மாமியே’ பாடலுமாகும். இவை இரண்டினதும் உருவாக்க கர்த்தாக்கள் தமிழர்களான ஏ.இ மனோகரன் மற்றும் நித்தி கனகரத்தினம் ஆகியோராவர்.

மனோகரன் சிங்களத்தில் பாடிய சுறாங்கனி பாடல் இலங்கையில் தமிழர்கள் சிங்களவர்கள் மட்டுமன்றி இந்தியாவில் தென்னிந்திய வட இந்திய மக்களையும் ஈர்த்துப்போட்ட கனவுப் பாடலாகியது. இந்தியாவின் ஏழு மொழிகளில் இது மீளுருவாக்கம்பெற்றதாகும்.

நித்தி கனகரத்தினத்தின் சின்ன மாமியே பாடலைத் தழுவியதாக பொப் இசைச் சக்கரவர்த்தியால் பட்டு மாமியே உன் சிட்டு மகளெங்கே பாடல் மீழுருவாக்கம்பெற்றது. ஆனாலும் நித்தி கனகரத்தினத்தின் சின்ன மாமியே பாடல் அளவுக்கு பட்டு மாமியே பாடல் புகழ்பெறவில்லை.

அமரர் மனோகரன் தனியே பொப் இசையோடு மட்டும் நின்றுவிடவில்லை. ஈழத்தில் வெளிவந்த சில திரைப் படங்களிலும் தமிழகத்தில் வெளிவந்த சில திரைப் படங்களிலும் தனது நடிப்பாற்றலினை வெளிப்படுத்தியிருந்தார்.

ஈழத்தில் எழுபதுகளின் இறுதியில் வெளிவந்த வாடைக்காற்று திரைப்படம் மனோகரனின் நடிப்பாற்றலினை புடம்போட்டுக் காட்டியது. செங்கை ஆழியானின் புகழ்பெற்ற நாவலான ‘வாடைக்காற்று’ கதையே இவ்வாறு திரைப்படமாக்கப்பட்டது. இதுதவிர பாச நிலா புதிய காற்று போன்ற படங்களிலும் நடித்திருந்தார்.

மனோகரனின் தலை முடி அலங்கரிப்பானது அக்காலத்தில் பிரபலம்பெற்ற ஒன்றாகும். கொள்ளைக்காரன், வில்லன் போன்ற கதாப்பாத்திரங்களுக்கு அன்னாரது முடி அலங்கரிப்பு மிகவும் பொருத்தமாக அமைந்திருந்தது.

இலங்கைத் தமிழர்களால் பெரிதும் வளர்த்தெடுக்கப்பட்ட பொப் இசையும் பைலாவும் இன்று சிங்கள மக்களுக்குரியதாகப் பார்க்கப்படும் பின்னணியில் நாட்டில் நிகழ்ந்த யுத்தம் ஒரு காரணகாக இருப்பது மட்டுமன்றி எழுபதுகளில் ஈழத்திரைப்பட உருவாக்கங்களில் காட்டிய அதீத ஆர்வமும் முக்கிய காரணகாக இருக்கின்றது. இந்தியாவில் என்னதான் சினிமா வளர்ச்சியடைந்த துறையாகக் காணப்பட்டாலும் அதனையும் தாண்டி இந்திய மக்களால் விரும்பப்பட்ட துறைகளாக இலங்கை பைலாவும் பொப் இசையும் காணப்பட்டன என்றுதான் சொல்லமுடியும்.

அத்தகைய பொப் இசையின்-பைலா கலையின் முன்னோடிகளுள் ஒருவரான பொப் இசைச் சக்கரவ்ர்த்தி ஏ.இ மனோகரனின் இழப்பென்பது உண்மையிலேயே ஈடு செய்யமுடியாத ஒன்று தான். அவருக்கு பின்னரான காலத்தில் அவரது இடத்தினை இன்றுவரை சிங்கள மக்கள் மத்தியிலிருந்தும்சரி தமிழ் மக்கள் மத்தியிலிருந்தும்சரி யாருமே நிரப்பவில்லை என்பதுதான் உண்மை. பொப் இசைத் துறை எனும் சாம்ராஜ்ஜியத்தில் யாராலும் வெல்ல முடியாத ஒரு மகாராசாவாகத்தான் அமரர் ஏ.இ.மனோகரன் இவ்வுலகை வீட்டு அகலும்வரை இருந்துள்ளார்.

அன்னாரின் இழப்பிற்கு ஐ.பி.சி தமிழ் தனது ஆழ்ந்த இரங்கலினைத் தெரிவித்துக்கொள்கிறது!

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top