1150 x 80 px
CID இன் நாடகமும் சிரசவின் ஊடக தர்மமும்

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படும் வேளையில், பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டனர். பேர்பச்சுவல் ட்ரசரீஸ் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ், அந்த நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் கைதுசெய்யப்பட்ட சம்பவத்தை சிரச தொலைக்காட்சி நேரலையாக ஒளிபரப்பு செய்திருந்தது. இதன்மூலம் குறித்த நிறுவனத்தின் ஊடக தர்மம் மீண்டும் ஒருமுறை கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது. இதனால் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி, கடந்த இரண்டாம் திகதி கொழும்பு கோட்டை நீதிமன்றில் முன்வைத்த கருத்துக்களின்படி, இன்று இவர்கள் கைதுசெய்யப்பட்டாலும், சட்டம் சார்ந்த ஒரு முக்கிய விடயத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மறந்துபோனமை ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

அதாவது அர்ஜூன் மகேந்திரன், அர்ஜூன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோர் இன்னும் சந்தேக நபர்கள் மட்டுமே உள்ளனர்.

கடந்த இரண்டாம் திகதி நடந்த வழக்கு விசாரணைகளின் போது, அவர்களை சந்தேக நபர்களாக  அடையாளப்படுத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரியே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தமது கருத்துக்களை நீதிமன்றில் முன்வைத்திருந்தனர்.

 

இதற்கமைய நீதிமன்றில் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்ட மூவரில் இருவரை இன்று (04) காலை சீ.ஐ.டி.யினர் கைதுசெய்தனர். எனினும், எந்த அடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்பது கேள்வியாக இருக்கிறது. அவர்கள் சந்தேக நபர்களாக கைதுசெய்யப்பட்டனரா? அல்லது குற்றவாளிகளாக கைதுசெய்யப்பட்டனரா? என்ற கேள்விக்கு சீ.ஐ.டி.யினர் பதில் சொல்ல வேண்டும்.

சரணடைய வேண்டுமென அறிவிக்கவில்லை

இவர்கள் சந்தேக நபர்களாகவே மேலதிக விசாரணைகளுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் குற்றவாளியாக கைதுசெய்யப்படவில்லை என்ற சாதாரண விடயம் கூட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குத் தெரியாதா?

கொழும்பு கோட்டை நீதிமன்றில் சந்தேக நபர்களாக மூவரும் அறிவிக்கப்பட்ட பின்னர், குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சந்தேக நபர்களை சரணடையுமாறு எந்தவொரு அழைப்பையோ, அறிவிப்பையோ விடுக்கவில்லை.

இந்த நிலையிலேயே, கெமராவைத் தூக்கிக் கொண்டு அவ்விடத்திற்குச் சென்றிருந்த சிரச ஊடகக் குழுவினர் முன்னிலையில், திடீரென இன்று காலை இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது.

மூன்று சந்தேக நபர்களில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன், கடந்த 02ஆம் திகதி நீதிமன்றில் வழக்கு விசாரிக்கப்பட்ட போது, நாட்டில் இருக்கவில்லை. எனினும், அர்ஜூன் அலொசியஸ், கசுன் பலிசேன ஆகியோர் இலங்கையில் இருந்தனர்.

சீ.ஐ.டியினர் நீதிமன்றில் முன்வைத்த தகவல்களுக்கமைய சந்தேக நபர்களை எவ்வித பிடியாணையும் இன்றி கைதுசெய்யக்கூடிய அதிகாரம் இருக்கிறது என்பதை அனைவரும் அறிந்திருந்தனர்.

உரிய கௌரவமும், அபிமானமும்?

எனினும், பிடியாணை இன்றி சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டாலும், எந்தவொரு சந்தேக நபருக்கும் சட்டத்தில் உள்ள கௌரவமும், அபிமானமும் காக்கப்படும் வகையில் நடத்தப்பட வேண்டும். இந்த மூன்று சந்தேக நபர்களும் 7ஆம் திகதிக்கு முன்னர் கைதுசெய்யப்படுவர் என ஊடகங்களில் செய்திகள் வந்துகொண்டிருந்தன. கடந்த 02ஆம் திகதி சந்தேக நபர்களாக குறித்த மூவரும் பெயரிடப்பட்டு, இதுகுறித்தும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. நிலைமை இவ்வாறிருக்கையில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குறித்த சந்தேக நபர்கள் தப்பிச் செல்ல முயற்சிக்கவில்லை.  சரணடையுமாறு அவர்களுக்கு அறிவித்திருந்தால், அவர்கள் சரணடைந்திருக்கக்கூடும். எனினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சீ.ஐ.டி.யினர் அவர்களுக்கு இவ்வாறு அறிவிக்கவில்லை. இதனாலேயே இன்று நடத்தப்பட்டது ஒரு நாடகம் என்பதை நாம் திடமாகக் கூறுகிறோம்.

சிரச எவ்வாறு அறிந்துகொண்டது?

அர்ஜூன் அலோசியஸ் கூட அறிந்திராத சந்தர்ப்பத்தில் சீ.ஐ.டி.யினர் கைதுசெய்ய செல்கின்றனர் என்பதை சிரச ஊடகம் மட்டும் எவ்வாறு அறிந்திருந்தது என்பது குறித்து தனியாக தேடி அறிய வேண்டும்.

அது ஊடகவியலாளர்களின் திறமை என்று சிலர் வர்ணிக்க வாய்ப்புக்களும் உள்ளன. எனினும், இதுவல்ல இங்கு பிரச்சினை. இங்கு மிகப் பெரிய கேள்வியாக இருப்பது சிரச வலையமைப்பின் ஊடக தர்மம். இந்தச் சம்பவத்தில் சிரச ஊடக நிறுவனத்திற்கு சந்தேக நபர்களுடன் பிரத்தியேக கோபம் ஏதாவது இருக்கிறதா? இதன்மூலம் சீ.ஐ.டி.யினரின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதே. வரி செலுத்தும் மக்கள் வசிக்கும் நாட்டில் ஒளிபரப்பு அனுமதியைப் பெற்றுள்ள ஒரு பிரதான தொலைக்காட்சியின் பொறுப்பு இதுவா? இவர்கள் பொறுப்பற்று செயலாற்றியுள்ளமை மீண்டும் ஒருமுறை பதிவாகியுள்ளது.

''நீதிமன்றில் உரிய முறையில், அதாவது வழக்கு விசாரணைகள் முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்படும் வரை, சந்தேக நபரை குற்றவாளியாக நடத்தக்கூடாது'' என்பது குற்றவியல் சட்டத்தின் மிக முக்கிய விடயங்களில் ஒன்றாகும். எனவே, குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை, அனைவரும் நிரபராதிகளாகவே கருதப்படுவர். இது சாதாரண பொதுமக்கள் கூட அறிந்திருக்கும் விடயம். சட்டத்தின் இறையாண்மை என்பது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தல் மேடைகளில் பேசிவரும் ''நல்லாட்சியின்'' மிக முக்கிய காரணியாகும். 

ஜனாதிபதியின் சுதந்திரன தின உரைக்கு ஜல்ராவா?

இந்த கைதுகள் நடத்தப்பட்ட போது அல்லது அதற்கு அண்மித்த நேரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய சுதந்திர தின நிகழ்வில் உரையாற்றும்போது, ''இன்று தேசப்பற்றாளர் என்ற அடிப்படை ஒழுக்கத்துடன் செயலாற்ற வேண்டும்'' என்று தெரிவித்தார்.

இதன்படி, சீ.ஐ.டி. அதிகாரிகள் இன்று காலை, சிரச ஊடக வலைமைப்பின் நேரலையுடன், நாட்டில் நடத்தப்பட்ட பாரிய நிதி மோசடி என்று கருதப்படும் பிணை முறி மோசடி சம்பவம் தொடர்பாக இவ்வாறு நடந்துகொண்டனர். சீ.ஐ.டி.யினர் இவ்வாறு நடந்துகொள்ள காரணம் ஜனாதிபதியை அல்லது வேறு அரசியல்வாதிகளைத் திருப்திப்படுத்தவா என்ற பாரிய சந்தேகமும் எழுகிறது.

 

 

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top