1150 x 80 px
வெலிகடை கொலையாளி ரங்கஜீவவிற்கும் உயர்நீதிமன்றப் பாதுகாப்பா?

வெலிகடை சிறைக் கைதிகளை கொலை செய்ததாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவவிற்கு உயர் நீதிமன்றத்தின் விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரங்கஜீவ கைதுசெய்யப்படுவதைத் தடுப்பதற்காகவே இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கைதுசெய்யப்படுவதைத் தடுப்பதற்காக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்து சட்டரீதியாக இதனைத் தடுப்பதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அத்துடன், வெலிகடை சிறைக் கைதிகள் கொல்லப்பட்டமை உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புள்ளதாக பெயர் அடிப்படும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்சவையும், பொலிசார் கைதுசெய்வதை உயர் நீதிமன்றத்தின் ஊடாக தடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தில் பல குறற்ச்சாட்டுக்கள் குறித்து விசாரணை ஸ்தம்பிதமடைந்திருந்தது. அத்துடன், சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளும் உரிய முறையில் இவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. இதுவும் உயர் நீதிமன்றம் உரிய முறையில் நடவடிக்கை எடுக்க முடியாமைக்கு காரணமாக அமைந்தது.

பொலிஸ் அத்தியட்சகர் ரங்கஜீவ, தன்னைக் கைதுசெய்வதைத் தடுக்க உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். பொலிஸ் அத்தியட்சகர் கைதுசெய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு இருக்க அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக பிரபல சட்டத் தரணியொருவர் எமக்குத் தெரிவித்தார்.

சிறைச்சாலை சம்பவத்தின் போது கைதிகள் மூவரை வெளியே இழுத்துவந்ததாக ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. விசாரணைகளிலும் இது உறுதிசெய்யப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் மூவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இதனால் குறித்த மூவரையும் கொலை செய்த குற்றவாளியாக ரங்கஜீவவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும்.

இந்தச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூட சாட்சியமளித்துள்ளனர். இவ்வாறான நிலையில், ரங்கஜீவவை கைதுசெய்வதைத் தொடர்ந்தும் தாமதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் ஊடாகவும் அவருக்கு பாதுகாப்பளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சட்டத்துறையைச் சார்ந்தவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவரைக் கைதுசெய்வதற்கு பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதியைக் கோரியுள்ளார். எனினும், இந்த அனுமதியை சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் வழங்க மறுத்துள்ளதுடன், ரங்கஜீவவை கைதுசெய்வதற்கான தேவை இன்னமும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். அத்துடன், ரங்கஜீவ வெளிநாடு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும், இது தற்போதுக்கு போதுமானது எனவும் குறித்த அதிகாரிகள் பொலிஸ்மா அதிபருக்குத் தெரிவித்துள்ளனர்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top