1150 x 80 px
பொலிஸ் ஆணைக்குழுவை மீண்டும் விஞ்சிய பொலிஸ்மா அதிபர்

கடந்த மார்ச் மாத இறுதியில் ஐந்து பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு வழங்குமாறு பொலிஸ்மா அதிபர் பரிந்துரை செய்துள்ளார்.

சிரேஸ்ட் பொலிஸ் அத்தியட்ச்கர் பாலித சிறிவர்தன, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காமினி பெரேரா, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஈ.ஜயசூரிய, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மெவன் சில்வா, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அநுர அபேவிக்ரம ஆகியோருக்கு பிரதி பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு வழங்குமாறு பொலிஸ் ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்தது. எனினும், இந்தப் பரிந்துரைகளை பொலிஸ்மா அதிபர் கண்டுகொள்ளவில்லை.

பொலிஸ்துறையின் அனைத்து பதவி உயர்வுகள், இடமாற்றங்கள் ஆகியவற்றை பொலிஸ் ஆணைக்குழுவே மேற்கொள்கிறது. எனினும், மேலே பரிந்துரைக்கப்பட்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பதவி உயர்வு வழங்காது, பல்வேறு காரணங்களைக் கூறி, இந்தப் பதவி உயர்வு வழங்குவதை பொலிஸ்மா அதிபர் தாமதித்து வந்துள்ளார்.

பாலித்த சிறிவர்தன என்பது ராஜபக்சவின் கைபொம்மை எனவும், காமினி பெரேராவிற்கு யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் வழங்கிய போது, இதனை மேன்முறையீடு செய்து அதனைத் தவிர்த்துக் கொண்டதாகவும் பொலிஸ்மா அதிபர் ஆங்காங்கே தெரிவித்து வருகிறார்.

மேலே குறிப்பிட்ட ஐந்து பொலிஸ் அத்தியட்சகர்களும் இன்னும் சில மாதங்களில் ஓய்வுபெறவுள்ளனர். இவர்களுக்குக் கிடைக்கும் வரப்பிரசாதங்களை இல்லாமல் செய்வதற்கே பொலிஸ்மா அதிபர் தற்போது முயற்சியெடுத்து வருகிறார்.

இதனிடையே நேற்று (23) பொலிஸ் ஆணைக்குழு கூடியுள்ளது. இதன்போது குறித்த பதவி உயர்வுகள் குறித்து பொலிஸ் ஆணைக்குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளது. பொலிஸ் ஆணைக்குழு உத்தரவிட்டு ஒருமாதம் கடந்துள்ள நிலையிலும், அவர்களுக்கு திட்டமிட்டு அந்த பதவி உயர்வுகளை வழங்காது பொலிஸ்மா அதிபர் இழுத்தடித்து வருவது குறித்தும் இதன்போது பேசப்பட்டுள்ளது.

இதன்படி, தற்போது பொலிஸ் ஆணைக்குழு செயலிழந்துள்ள நிலையே ஏற்பட்டுள்ளது. பொலிஸ் ஆணைக்கழுவின் பரிந்துரைகளை கவனத்தில் கொள்ளாது, தமது தனிப்பட்ட விருப்பத்திற்கு பொலிஸ்மா அதிபர் செயற்பட்டு வருகிறார். பொலிஸ்மா அதிபரின் தீர்மானங்களை அங்கீகரிப்பதற்காகவே பொலிஸ் ஆணைக்குழுவை அவர் பயன்படுத்துவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன்படி பொலிஸ்மா அதிபர் திட்டமிட்டு, பொலிஸ் ஆணைக்குழுவை மதிக்காது செயற்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

எனினும், பொலிஸ்மா அதிபரின் இந்த நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் எந்தவொரு தீர்க்கமான நடவடிக்கையும் எடுக்காது செயற்பட்டு வருகின்றனர்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top