1150 x 80 px
கீத் நோயர் கடத்தல் மஹிந்தவுக்கு தொடர்பு? சபாநாயகர் CID பிரிவுக்கு வாக்குமூலம்!

'தி நேசன்' பத்திரிகையின் முன்னாள் பிரதி ஆசிரியர் கீத் நோயர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் குறித்து குற்றத் தடுப்புப் பிரிவிற்கு வாக்குமூலம் வழங்க சபாநாயகர் கரு ஜயசூரிய விருப்பம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் குற்றத் தடுப்புப் பிரிவின் பிரதானி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன சபாநாயகரிடம் கேட்டுள்ளார். ராஜபக்ஷ காலத்தில் கீத் நோயர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தான் அறிந்த அனைத்து விடயங்களையும் வாக்குமூலம் அளிக்க சபாநாயகர் விருப்பம் தெரிவித்து அதற்கான திகதியும் ஒதுக்கியதாக தெரிவியவந்துள்ளது.

2008 மே மாதம் 22ம் திகதி அலுவலகத்தில் தொழில் முடித்துவிட்டு அன்றைய ரிவிர ஊடக உரிமையாளர் கிரிஷாந்த குரே, தி நேசன் பிரதம ஆசிரியர் லலித் அலககோன் ஆகியோருடன் பம்பலபிட்டி உணவகம் ஒன்றில் இரவு உணவு உண்டு பின் தெஹிவளையில் உள்ள வீடு நோக்கி கீத் நோயர் சென்றுள்ளார்.

வீட்டை அண்மிக்கும் போது மனைவிக்கு அழைப்பெடுத்து கதவை திறந்து வைக்க கோருவதை கீத் வழக்கமாகக் கொண்டுள்ளார். அதன்படி அன்றைய நாளிலும் அவ்வாறே கூறியிருந்தார். வீட்டுக்கு முன் வந்து வாயிலை கீத் நோயர் திறக்கும் போது மறைந்திருந்த சிலர் அவரை தாக்க முயற்சித்துள்ளனர். அப்போது கீத் நோயரும் பதில் தாக்குதல் நடத்தவே துப்பாக்கி முனையில் அவரை வௌ்ளை வேனில் கடத்திச் சென்றுள்ளனர்.

வீட்டுக்கு வருவதாகக் கூறிய கணவரை காணவில்லை என கீத் நோயரின் மனைவி வெளியில் வந்து பார்த்தபோது அவரின் கார் மாத்திரம் இயங்கிக் கொண்டிருந்ததுடன் கதவுகளும் திறந்திருந்தன.

உடனே கீத் நோயரின் தொலைபேசிக்கு அழைப்பெடுத்த போது அது இயங்கவில்லை. ரிவிர ஊடக உரிமையாளர் கிரிஷாந்த குரே, தி நேசன் பிரதம ஆசிரியர் லலித் அலககோன் ஆகியோருக்கு தொலைபேசி அழைப்பெடுத்து கீத் நோயருக்கு ஆபத்து என்று மனைவி கூறியுள்ளார். உடனே கீத் நோயரை தேடிய அவர்கள் தமக்கு தெரிவித்த அனைத்து ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகளுக்கு அறிவித்துள்ளனர்.

இப்படியான அரசாங்கத்தில் இருப்பது வெட்கம் ஜனாதிபதி அவர்களே!

அப்போது கரு ஜயசூரிய அந்த அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்ததுடன் கிரிஷாந்த குரே கருவுடன் நெருங்கியவராக இருந்தார். கீத் குறித்த கருவுக்கு தகவல் வழங்கியதும் கிரிஷாந்த குரே ஆவார்.

அப்போது உடனே அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அழைப்பெடுத்த கரு ஜயசூரிய அரசாங்கத்தின் தலையீட்டில் கீத் நோயருக்கு இந்த ஆபத்து நேர்ந்திருக்குமானால் அரசாங்கத்தில் இருப்பதையிட்டு வெட்கிப்பதாக கரு ஜயசூரிய கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரு ஜயசூரியவின் இந்த கருத்தின் பின்னர் கீத் நோயர் விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் கீத் நோயர் உயிர் தப்பினார். கரு இல்லாவிடின் இன்று கீத் நோயர் உயிருடன் இல்லை என்றே கூற வேண்டும்.

இதன் பின்னணியிலேயே கரு ஜயசூரிய குற்ற விசாரணை பிரிவிற்கு வாக்குமூலம் அளிக்க விருப்பம் தெரிவித்துள்ளதுடன் சம்பவம் குறித்து நாட்டு மக்கள் தகவல் அறிந்திருக்க வேண்டியது அவசியம் என்றும் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top