1150 x 80 px
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சினையை அதிகாரத்தில் உள்ளவர்கள் தீர்த்து வைக்க வேண்டும் !

காணாமலர் போனவர்களின் உறவினர்கள் வவுனியாவில் பல நாட்களாக தமது சொந்தங்களை கண்டறிந்து தருமாறு கோரி அமைதியான முறையிலே தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். இப்பொழுது கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதரங்களுக்கும் மகஜர்களை கையளித்துள்ளனர். எனவே இவர்களது பிரச்சினையை அதிகாரத்திலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் தலையிட்டு முடிவு காணப்பட வேண்டும் என முன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினரும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான கலாநிதி என்.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.


மேலும்,  காணாமல் போனவர்கள் சம்பந்தமாக ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் இருக்குமு; அமைச்சர்கள் பல்வேறு வித்தியாசமான கருத்துகளை தெரிவித்து வருகின்றார்கள். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது வேறு நாட்டிற்கு அடைக்களம் பெற்றுச் சென்றிருக்கலாம் என்ற கருத்தை முன்வைத்திருக்கின்றார். இப்படியான கருத்தினை அவர் முன்வைத்திருப்பதினால் வெளிநாடுகளுக்கு அடைக்களம் தேடிச் சென்றவர்களின் பட்டியலை அவர் வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் பொறுப்பற்ற விதத்தில் பதில் கூறுவதை நிறுத்த வேண்டும்.

இன்று காணாமல் போனவர்களின் உறவினர்களின் அவலம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. நல்லாட்சியை ஏற்படுத்தித் தாருங்கள், ஜனநாயக ரீதியான செயல்பாடுகளை உறுவாக்கி தருகின்றோம், இராணுவத்திடமிருந்து நிலங்களை மீட்டுத் தருகின்றோம், காணாமல் போனவர்களை கண்டறிந்து தருகின்றோம், வடக்கிலுள்ள இராணுவ பிரசன்னத்தை குறைத்து தருகின்றோம், புதிய அரசியலமைப்பை உருவாக்கித் தருகின்றோம் என்று பல விடயங்களை கூறி பொதுத் தேர்தலிலே வாக்குகளை பெற்றுக் கொண்ட தமிழ் அரசியல்வாதிகள் இன்று மௌனித்து போயுள்ளார்கள். இதற்கு சற்று மேல் சென்று கூட்டமைப்பின் தலைமைத்துவம் அரசாங்கத்திற்கு மேலும் கால அவகாசத்தை வழங்க பரிந்துரைத்திருக்கின்றது. புதிய அரசாங்கம் உருவாகி இரண்டரை வருட காலத்தில் எவ்விதமான வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை.


காணாமல் போனவர்களின் பிரச்சினையை மையமாகக் கொண்டு நான் முன்னால் அங்கம் வகித்திருந்த கட்சித் தலைமை 2007-2008ம் ஆண்டுகளில் தலைநகரில் காணாமல் போனவர்களை வரவழைத்து அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அழைத்து வந்து பாரிய ஆர்ப்பாட்டங்களை செய்து தமக்கு தனிப்பட்ட விளம்பரத்தை பெற்றுக் கொண்டது. இன்று கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு காணாமல் போனவர்களின் உறவினர்கள் மகஜர் அளிக்கச் செல்லும் பொழுது அவர்களைப் பற்றி எவ்வித அக்கறையும் இன்றி அமைச்சுப் பதவிகளை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றார்கள். அப்படியாயின் அன்று ஏன் இப்படியான ஆர்ப்பாட்டங்களை இவர்கள் செய்தார்கள் என்று கேட்க விரும்புகின்றேன். வெறுமனே வாக்குகளுக்காக அரசியல் செய்த இவர்கள் இன்று பதவியில் இருந்தும் காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளை ஏனும் கூறவில்லை என்பது வேடிக்கையாக இருக்கின்றது.

எது எப்படியிருப்பினும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கததின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அவரை அழைத்து செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தினை ஞாபகமாவது காட்டியுள்ளார்களா? எனவே சம்பந்தப்பட்டவர்கள் மனசாட்சியைத் தொட்டுப்பார்த்து காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு ஏதாவது ஒரு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top