1150 x 80 px
மீதொட்டமுல்ல குப்பை மேடும் உண்மையும்!

குப்பைக்குள் புதைந்து போன மனித உயிர்கள் தொடர்பிலேயே இன்று அதிக விமர்சனம் எழுகின்றது. இங்கு கொட்டியவன் மீதே குற்றம் என்றாலும் வீடுகளைக் கட்டியவனையும் கை நீட்டுபவர்கள் இல்லாமல் இல்லை.

மீதொட்டமுல்ல குப்பை மேடு நேற்று சரிந்து வீழ்ந்த அனர்த்தம் தொடர்பில் இப்போது கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி சுமார் 180 குடும்பங்களும் 625 பொதுமக்களும் பாதிப்படைந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு 20 மனித உயிர்களையும் கொன்று கொலைகாரனாகிவிட்டது குப்பைமேடு. இப்படி குப்பை மேடு கூட கொலை களமாக மாறிப்போனதற்கு காரணம் யார்? அதனை பட்டியலாகவே பார்க்கலாம் கடந்த அரசு, நல்லாட்சி அரசு, மத குருமார்கள், பொதுமக்கள் இவர்கள் அனைவரும் சேர்ந்தே இந்த அனர்த்தத்திற்கு பதில் கூறியாக வேண்டும்.

2016 ஆகஸ்ட் 31 அன்று “கொலன்னாவை - மீதொட்டமுல்ல குப்பை மேடு 100 நாட்களுக்குள் முற்றாக அகற்றப்படும், அதற்கான நிதி கிடைத்து விட்டது” என பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் வாக்குறுதி அளித்தார்.

மேடைச் சொல் வீரனாகி விட்டார் இந்த இடத்தில் வழங்கிய வாக்குறுதி இன்று 227 நாட்களை கடந்து விட்டது. அதே போல் மற்றுமொரு ஊடக சந்திப்பிலும் இதனை உறுதிப் படுத்தியதோடு, ஜனாதிபதி பிரதமருக்கும் இந்த விடயம் தொடர்பில் கொண்டு செல்லப்பட்டுள்ளதாவும் மரிக்கார் தெரிவித்திருந்தார்.

ஆனால் இன்று வரை தீர்ப்புகள் இல்லை. அதே சமயம் ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்ட நிதி எங்கே போனது என்பதும் தெரியவில்லை. குப்பைக்கு வந்த பணம் பொக்கிஷ அறைக்கு சென்றதா என்பதும் தெரியவில்லை.

அதே போன்று பல சந்தர்ப்பங்களில் மக்கள் பிரதிநிதிகள் குறித்த குப்பை மேட்டை அகற்ற அல்லது குப்பை கொட்டுவதை நிறுத்த முயற்சிகள் வெறும் பேச்சளவில் முடிந்து போனது.

அதற்கடுத்து கொலன்னாவை - மீதொட்டுமுல்ல பிரதேசத்தில் குப்பை கொட்டுவதை நிறுத்தி அதனை கம்பஹா ஏகல பிரதேசத்திற்கு மாற்றுவதற்கு திட்டம் வகுக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு வெகுவாக வெளி வந்தது பௌத்த மற்றும் கிருஸ்த்தவ மத குருமார்கள் சபையை கூட்டி இந்த குப்பை விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மக்கள் நலனுக்காக செயற்பட வேண்டிய அரசு பிரதிநிதிகள் அரசியலாக இதனைப் பார்த்த போது. தெய்வ சேவை செய்யும் மத குருமார்கள் இந்த விடயத்தில் தலையிட வேண்டிய அவசியம் என்ன?

அதனைத் தொடர்ந்து ஏகல மக்கள் போராட்டங்களை செய்து எதிர்ப்பு வெளியிட்டனர். பாதை மறிப்பு என பல போராட்டங்களில் ஏகல மக்கள் ஈடுபட்டனர். இதன் போது குப்பை விவகாரத்தில் அமைச்சர் பைசர் முஸ்தபா தலையிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட போராட்டங்கள் நிறைவுக்கு வந்தது.

ஆனால் கொலன்னாவை - மீதொட்டுமுல்ல பிரதேசத்தில் குப்பை கொட்டுவது நிறுத்தப்பட வில்லை மாற்றுத் திட்டங்களும் அரங்கேற்றப்பட வில்லை. அந்த இடத்தில் வசிக்கும் பொது மக்களின் நிலையை கருத்திற் கொள்பவர் எவரும் இருக்கவில்லை. தன் வீட்டிற்கு உள்ளே குப்பை வந்தால் குற்றம் அடுத்தவர் பற்றி எனக்கென்ன என்பவர்களே அதிகம்.

மேலும் இந்த மீதொட்டுமுல்ல பிரச்சினை என்பது கடந்த மகிந்தவின் ஆட்சியின் போதும் இருந்து வந்தது. 2014 ஆம் ஆண்டு அப்போது பாராளுமன்ற பதவியில் இருந்த துமிந்த சில்வா இந்த பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறினார்.

அத்தோடு அப்போதைய ஜனாதிபதி மகிந்தவின் பார்வைக்கும் இது சென்றது. ஆனால் இப்போது மகிந்த ஆட்சி கவிழ்ந்து போனது, துமிந்த சிறையில் ஆனால் குப்பையும் அம் மக்களும் அதே இடத்தில். மேலும் 2011 ஆம் ஆண்டும் மீதொட்டுமுல்ல பிரதேச மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால் அப்போதைய அரசு கண்டு கொள்ள வில்லை.

2012ஆம் ஆண்டு இந்தப் பிரதேசத்தில் குப்பை சரியத் தொடங்கியது. அதனால் சுமார் 40 குடும்பங்கள் பாதிப்பை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து தீர்வுக்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

கொடுக்கப்பட்ட தீர்வு இல்லை இன்று 20 உயிர்களும் கொலை செய்யப்பட்டுள்ளது. ஆக இப்படியான ஓர் அனர்த்தம் ஏற்படும் என்பதனை 5 வருடங்களுக்கு முன்பே அரசு தரப்பிற்கு தெரிந்துள்ளது.

அது மட்டுமல்ல 2012ஆம் ஆண்டு இப்போது இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க இந்த குப்பை மேடுக்கு தீர்வு பெற்றுத்தருவதாக தெரிவித்திருந்தார்.

மேலும் அரசியல் சாணக்கியனான விமல் வீரசங்ச வீடமைப்பு அமைச்சராக இருந்த 2012ஆம் ஆண்டுகளில் மீதொட்டுமுல்ல பிரதேசவாசிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புது வீடுகள் அமைத்துக் கொடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அதுவும் வெறும் மேடைச் சொல் வீரப் பேச்சாகிப்போனது. அப்போதைய அமைச்சர் இன்று தனக்காக உண்ணாவிரதம் இருக்கும் நிலையும் வந்து விட்டது. இப்படியாக கடந்த கால ஆட்சியிலும் சரி இப்போதைய ஆட்சியிலும் சரி திட்டமிட்டே இந்த குப்பை பிரச்சினை இழுத்துக் கொண்டு வரப்பட்டுள்ளது.

அரசியல் வாதிகள் தங்களது இலாபத்திற்காக செயற்பட்டு கொண்டு வந்து இப்போது பாரிய அனர்த்தத்தில் நின்றுள்ளது. கடந்து வந்த சம்பவங்கள் இருக்கட்டும் நேற்றைய அனர்த்தம் இடம் பெறுவதற்கு முன்னர் குப்பை மேட்டில் பல மாற்றங்கள் அவதானிக்கப்பட்டு அது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதும் கூட நடவடிக்கைகள் எடுக்கப்பட வில்லை.

அப்படி பார்க்கும் போது அரசும், அரசு அதிகாரிகளும் இந்த விடயத்தில் பதில் கூறியே ஆகவேண்டும். சென்ற வருடமும் கூட அரநாயக்க மண் சரிவு அனர்த்தத்தில் மனித உயிர்கள் பறிபோக முக்கிய காரணம் அரசின் கவனக் குறைவே. அங்கு மண் சரிவு அபாயம் உள்ளது என அறிந்தும் மாற்று நடவடிக்கை தீவிரப்படுத்தப்படாமைக்கு கிடைத்த பரிசு நூற்றுக்கணக்கான உயிர்கள்.

அதே வகையைச் சேர்ந்தது தான் நேற்று குப்பை மேடு அனர்த்தமும். அரசில் 100 நாள் வேலைத் திட்டத்தில் கொலன்னாவை - மீதொட்டுமுல்ல குப்பைமேடு பிரச்சினையும் அடங்குவதாகவே கூறப்பட்டது.

ஆனால் நூறுநாள் வேலைத்திட்டம் இன்று வரை செயற்படுத்தப் படவில்லை என்பது நல்லாட்சியில் ஆமைப் பயணத்தையும், அக்கறையற்ற தன்மையையும் காட்டுகின்றது.

இன்று பறிபோன உயிர்களுக்கு நட்டஈடு கொடுத்தால் செய்த பிழையை அரசு மறைத்துக் கொள்ளலாம் என்று எண்ணினால் அது தவறு. இப்போது நடந்தது இயற்கை அனர்த்தத்திற்குள் வரையரை படுத்த முடியாது. அரசின் முறையற்ற செயலே அனர்த்தமானது. ஆனால் இப்போது உடனடியாக மாற்றுத் திட்டம் கட்டாயம் ஏற்படுத்தப்படும்.

நன்று இப்படி ஒவ்வொரு பிரச்சினையும் உயிர்களின் பிரிவிற்கு பின்னரே நிகழும் என்றால், எதிர்காலத்தில் ஆட்சி பீடத்தில் அமர்ந்து யாருக்கு ஆட்சி செய்ய போகின்றார்கள் என்பது கேள்விக்குறியதே.

எப்படியாயினும் இப்போது ஏற்பட்ட அனர்த்தம் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டது. இறந்து போன உயிர்களுக்கும் அழிந்து போன சொத்துகளுக்கும் பதில் கூறுகின்றவர்கள் யார்?

மகிந்தவா? மைத்திரியா? ரணிலா? அல்லது அவ்வப்போது வாக்குறுதிகளை அள்ளி வீசிய அமைச்சர்களா? பாராளுமன்ற உறுப்பினர்களா? கொலைகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளப் போகின்றவர்கள் யார்? அடுத்து ஓர் அனர்த்தம் நடக்கும் போது இதற்கு பதில் கிடைக்கும். இனியாவது திருந்துவார்களா ஆட்சியாளர்கள்?

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top