1150 x 80 px
சர்வதேசத்திற்கு முன் இலங்கை கேலிக்கூத்தாகியுள்ளது : மனோ கணேசன்

இலங்கை விவகாரம் சர்வதேசத்திற்கு முன்பாக கேலிக்கூத்தாகியுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள் சர்வதேசத்தின் பேசுபொருளாக மாறியுள்ளதுடன், இதுகுறித்து தற்போது ஜெனீவாவிலும் ஆராயத் தொடங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

எனினும், வெள்ளைக்காரர்களுக்கு இலங்கை பிரச்சினை குறித்து பேசுவதற்கு முன்னர் தாம் செய்யும் தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

சிரியா உள்ளிட்ட நாடுகளில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் மூலம் அவர்கள் மீதான மாசு வெளிப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கையில், இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கு அனைவரும் முயற்சிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர்களிடம் தொடர்ந்து பேசிய அமைச்சர்,
''சிங்கள மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தமிழரும், முஸ்லிம்களும் புரிந்துகொள்ள வேண்டும். அதேபோல தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை சிங்களவர்களும், முஸ்லிம்களும் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். முஸ்லிம்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தமிழர்களும், சிங்களவர்களும் புரிந்துகொள்ள வேண்டும். இதன்மூலமே புரிந்துணர்வை ஏற்படுத்த முடியும். நல்லிணக்கத்தையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்த அரசாங்கம் என்ற வகையில் பல வேலைத் திட்டங்களை முன்னெடுக்கின்றோம். இதனை அரசாங்கத்தால் மட்டும் செய்ய முடியாது. இதில் அனைவரும் இணைந்துகொள்ள வேண்டும். அனைவருக்கும் அந்த பொறுப்பு இருக்கிறது. அவ்வாறு செய்தால் மட்டுமே இலங்கையில் முழுமையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்'' என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top