1150 x 80 px
ஏவுகணைச் சோதனைகளைக் கைவிட கிம் அதிரடி உத்தரவு

ஏவுகணைச் சோதனைகளைக் கைவிடவும், வடகொரியாவிலுள்ள அணுவாயுதச் சோதனைத் தளத்தை மூடவும், அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜொங் உன் திடீர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பை வடகொரிய ஜனாதிபதி கிம் வெளியிட்டதுடன், இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அணுவாயுதச் சோதனைகள் மற்றும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் ஏவுவதையும் வடகொரியா நிறுத்துவதாக, கொரியாவிலுள்ள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் இந்தத் தீர்மானம் தொடர்பாக டுவீட்டர் மூலம் பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உலகின் முன்னேற்றத்துக்கும் வடகொரியாவுக்கும் இது நல்ல செய்தியெனக் கூறியுள்ளார். இதேவேளை, வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு தென்கொரியாவும் ஜப்பானும் வரவேற்புத் தெரிவித்துள்ளன.

வடகொரியா தொடர்ச்சியாக அணுவாயுதம் மற்றும் ஏவுகணைச் சோதனைகளை நடத்திவந்த நிலையில், வடகொரியாவுக்கும் தென்கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கிடையிலும் முறுகல் வலுத்திருந்தது. இந்நிலையில், தென்கொரியாவில் கடந்த பெப்ரவரியில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்போட்டியில் வடகொரியா கலந்துகொண்டதைத் தொடர்ந்து, வடகொரியாவின் நடவடிக்கைகளில் சாதகமான மாற்றம் ஏற்பட்டு வருகின்றது.

இதன் பயனாக வடகொரிய ஜனாதிபதி கிம்மும், தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்னும் எதிர்வரும் வாரம் சந்திக்கவுள்ள அதேவேளை, வடகொரிய ஜனாதிபதி கிம்மும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் எதிர்வரும் ஜுனில் சந்திக்கவுள்ளனர்.

மேலும் வடகொரியா, தென்கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையிலான சமாதானப் பேச்சு மற்றும் வடகொரியாவின் பொருளாதார வளர்ச்சியை நோக்காகக்கொண்டு வடகொரியா இந்தத் தீர்மானத்துக்கு வந்துள்ளதாகவும், வடகொரியாவிலுள்ள ஊடகமொன்று கூறியுள்ளது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top