1150 x 80 px
காதில் ஹெட்செட் மாட்டிச் சென்ற மாணவன் மீது ரயில் மோதியது : மாணவன் (17) பலி

வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவன், ரயில் மோதி பலியுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று (25) முற்பகல் 10 மணிளவில் நிகழ்ந்துள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கடுகதி ரயிலில் மோதி மாணவன் பலியானதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து தெரியவருவதாவது,
காதில் இசைக் கருவியைப் (ஹெட் செட்) போட்டுக்கொண்டு ரயில் தண்டவாளத்தில் மாணவன் நடந்து சென்றுள்ளான். அச்சமயம் மாணவனுக்கு பின்புறமாக வந்த ரயில், ஒலி எழுப்பியுள்ளது. காதில் இசைக் கருவி இருந்ததால் மாணவனுக்கு ரயில் ஒலி கேட்கவில்லை எனக் கூறப்படுகிறது. வேகத்தைக் குறைக்க முயற்சித்தபோதிலும், மாணவனுக்கும், ரயிலுக்குமான இடைவெளி சிறிதாக இருந்ததால் இந்த விபத்து நிகழ்ந்தது என சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்தார். வவுனியா ஈரட்டை பகுதியைச் சேர்ந்த அமில சந்தகெலி என்ற 17 வயது மாணவனே பலியாகியுள்ளார். மாணவனை மோதிய ரயில் நிறுத்தப்பட்ட போதிலும் மாணவன் உயிரிழந்துள்ளான்.

தனியார் வகுப்புக்குச் செல்வதற்காக மாணவன், இன்று காலை வீட்டில் இருந்து சென்றதாகவும், இதன்போதே விபத்தில் சிக்கியுள்ளதாகவும் மாணவனின் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

மாணவனின் சடலத்தை வவுனியா ரயில் நிலையத்திற்கு, குறித்த ரயிலில் ஏற்றிக் கொண்டுவரப்பட்டுள்ளது. பின்னர் விசாரணை நடத்திய பொலிசார் சடலத்தை வவுனியா அரச வைத்தியசாலையில் கையளித்துள்ளனர்.

கடந்த சில மாத காலங்களில் வடக்கிலேயே அதிகளவு ரயில் விபத்துகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

- தரன்

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top