- ஒரு மலையக மகனின் ஆதங்கம்
இந்திய வம்சாவளி மலையக தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் எத்தனையோ அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், அரசியல் கூட்டணிகள் தோன்றி இருந்தாலும் அதில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு தனி சிறப்பிடம் உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது. வெறுமனே தேர்தல் அரசியலை மாத்திரம் இலக்காகக் கொண்டு மலையகத்தில் அவ்வப்போது அரசியல் கூட்டணிகள் உருவாவதும் பின்னர் குடும்பிச் சண்டையின் பின் அவை பிளவுற்று போவதும் வரலாறு கண்ட உண்மை. அந்த வரிசையில் தேர்தல் அரசியலை மாத்திரம் இலக்காகக் கொண்டு அல்லாமல் ஒட்டுமொத்த மலையக மக்களின் உரிமை அரசியலையும் முன்னிறுத்தி ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கூட்டணியாக தமிழ் முற்போக்கு கூட்டணியை நான் பார்க்கிறேன்.
மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய முன்னணி, ராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி ஆகின இணைந்து உருவாகிய தமிழ் முற்போக்கு கூட்டணி தற்போது அரசியல் கட்சியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு தமிழ் மக்களை பிரநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இலங்கை தமிழரசு கட்சி, டெலோ, புளொட் போன்ற கட்சிகள் அங்கம் வகிக்கின்ற போதும் இதுவரையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவு செய்ய முடியவில்லை. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் என்னை பொருத்தவரையில் ஒற்றுமையின்மை கொள்கை பிரழ்வு இந்த இலக்கை அடைய முடியாமைக்கு காரணம் என்பேன்.
ஆனால் தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் இடையே அவ்வப்போது முரண்பாடுகள் வந்து சென்றாலும் கொள்கை ரீதியாக அவர்கள் ஒன்றுசேர்ந்திருப்பதால் கூட்டணி ஆரம்பித்து குறுகிய காலத்தில் கட்சியாக பதிவு செய்யும் முன்னேற்ற நிலையை அடைந்துள்ளனர்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் பங்களிப்பில் 2015ம் ஆண்டு நாட்டில் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் மலையக மக்களின் அரசியல் உரிமை விடயத்தில் பல்வேறு இலக்குகளை அடைய உறுதுணையாக இருந்துள்ளது. அதில் பிரதேச சபைகள் அதிகரிப்பு, பிரதேச செயலகங்கள் அதிகரிப்பு, காணி உரிமை, தனி வீடு, பிரதேச சபைகள் திருத்தச் சட்டம், பாடசாலைகளுக்கான காணி விடுவிப்பு, தமிழ் மொழி அமுலாக்கம், அரச ஊழியர்கள் அனைவருக்கும் தமிழ் மொழி பயிற்சி போன்ற பல்வேறு விடயங்களை முன்வைக்கலாம்.
இந்த உரிமைகளை மலையக மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க தமிழ் முற்போக்கு கூட்டணி நல்லாட்சி அரசாங்கத்துடன் சண்டை போட்டது, அதனால்தான் கிடைத்தது என்ற பாணியில் எவரேனும் கருத்து வௌியிட முனைந்தால் அது அவர்கள் அரசியல் அறியாமை மற்றும் முதிர்ச்சியின்மையை காட்டும். இலங்கை அரசியலை பொருத்தவரையில் பேரினவாத அரசாங்கங்களிடம் அடித்துபிடித்து எந்த உரிமைகளையும் பெற்றுக் கொண்டதாக வரலாறு இல்லை. மாறாக அடித்து பிடித்து பெற முயன்ற உரிமைகளுக்கு பதிலாக உயிர்கள் பலவே அநியாயமாக இழக்கப்பட்டமை வரலாற்று உண்மை.
உரிமைகளை பெற முயற்சிக்கும் போது காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றிருக்கலாம். வாக்குவாதங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனாலும் இறுதியில் இலக்கை அடைய இணக்கப்பாடு, புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு இருந்திருக்கும். பிரதேச செயலகங்கள் அதிகரிப்பு விடயத்தில் 12 பிரதேச செயலகங்கள் நுவரெலியாவில் உருவாக்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி கேட்டது. ஆனால் அரசாங்கம் 8ற்கு இணங்கியது. அப்போது தமிழ் முற்போக்கு கூட்டணியும் சற்று விட்டுக் கொடுத்து ஏற்கனவே இருந்த 5 பிரதேச செயலகங்களுக்கு மேலதிகமாக 3 பிரதேச செயலகங்கள் பெற இணங்கியது. அப்படி இணக்கம் தெரிவிக்காமல் முரண்டு பிடித்திருந்தால் இன்னும் பிரதேச செயலக அதிகரிப்பு வெறும் கனவாகவே இருந்திருக்கும்.
எனவே விட்டுக் கொடுப்பு, புரிந்துணர்வு, பொறுமை, முதிர்ச்சி, பண்பு, இணக்கப்பாடு இருந்த காரணத்தால் தமிழ் முற்போக்கு கூட்டணி சரியான தடத்தில் வெற்றிநடை போட்டது எனலாம்.
ஆனால் இன்று நிலை தலைகீழாகா மாறும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இலங்கையில் இனப்பிரச்சினை தீர்வு என்பது பலகாலம் புரையோடி போயுள்ள பிரச்சினை. குறிப்பாக இனப்பிரச்சினை தீர்வு என்பது வடக்கு கிழக்கு தமிழ் மக்களை மாத்திரமே உள்ளடக்கியதான கோரிக்கையாக ஆரம்பத்திலேயே வடிவமைக்கப்பட்டுவிட்டது. அதில் மலையக மக்களுக்கு இடமிருக்கவில்லை. பூட்டானில் இடம்பெற்ற திம்பு பேச்சுவார்த்தையிலும் மலையக மக்களின் உரிமை தொடர்பில் நேரடி கோரிக்கைகள் எதுவும் இருக்கவில்லை. அந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
வடக்கில் இடம்பெற்ற இராணுவத்தினர் மீதான தாக்குதலின் பின் வடக்கு கிழக்கில் மாத்திரம் அன்றி மலையகத்திலும் இனவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில் காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை போன்ற மாவட்டங்களில் தனித்து வாழ்ந்த இந்திய வம்சாவளி மலையக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வடக்கில் தொடங்கிய இனவாத தாக்குதல் மலையகத்திற்கு வர காரணம் வடக்கில் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதக்குழு மலையகத்தில் காலூன்றிமை என்பது வரலாற்று அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது. குறிப்பாக மலையகத்தில் ஈரோஸ் அமைப்பு செயற்படத் தொடங்கியமை சுட்டிக்காட்டத்தக்கது.
எனவே இந்த ஈரோஸ் அமைப்பினால் கவர்ந்து ஈர்க்கப்பட்ட மலையக இளைஞர் யுவதிகள் பலர் பிற்காலத்தில் ஆயுத போராட்டங்களில் கலந்து கொண்டு பலியானமை, புலம்பெயர்ந்து வெளிநாடு சென்றமை, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு அரசியல் கைதிகளாக இன்னும் சிறையில் உள்ளமை போன்ற துக்கமான வரலாறுகளே மீதமுள்ளன. ஈரோஸ் அமைப்பின் போராட்டத்தை கொச்சைப்படுத்த நான் இதனை கூறவில்லை.
ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ஊடக சந்திப்பு ஒன்றில் ‘மலையக மக்களின் பிரச்சினைகளை அவர்களது தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள்’ என்று பகிரங்கமாகவே கூறியிருந்தார்.
ஆனாலும் அமரர் பெரியசாமி சந்திரசேகரன் அவர்கள் வடக்கில் அரசியல் தொடர்பினை பேணியதன் விளைவாக மலையகத்தில் இருந்து பலர் வவுனியா கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் குடியமர்த்தப்பட்டனர். இறுதி யுத்தத்தில் உயிரிழந்த பல போராளிகளில் மலையகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் என்பதும் அரசியல் ஆய்வாளர்களின் கருத்து. சிலர் இன்னும் வடக்கில் மலையகத்தவர்கள் எனவும் சாதி ரீதியாகவும் பாகுபாடுடன் நடத்தப்படுகின்றனர். சிவி.விக்னேஸ்வரன் அவர்கள் வடக்கு முதலமைச்சராக இருந்த போது மலையக மக்களுக்கு வடக்கில் சாதி ரீதியாக பாகுபாடு காட்டப்படுவதாக பகிரங்க மேடையில் கூறியிருந்தார்.
இவ்வாறான பின்னணியில் தற்போது சிறுபான்மை தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவு என்ற விடயம் அரசியல் அரங்கத்திற்கு வந்துள்ளது. இதில் மலையக அரசியல் அரங்கமும் சூடுபிடித்துள்ளது. காரணம் சிறுபான்மை தமிழ் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. இந்த நல்லெண்ணத்தை புரிந்து கொண்டு அனைத்து சிறுபான்மை தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து பேசத் தொடங்கினர்.
இதில் ரெலோ அமைப்பு 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்ற அழுத்தத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஊடாக இலங்கை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து ஆவணம் ஒன்று தயாரிக்கப்பட்டது. இதில் கைச்சாத்திடவென சிறுபான்மை தமிழ் கட்சிகள் கொழும்பில் ஒன்றுகூடிய போது இலங்கை தமிழரசு கட்சி ஆவணத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என கோரி தற்போது புது ஆவணம் தயாரிக்கப்பட்டு அதிகார பரவலாக்கல் ‘பெடரல்’ முறையில் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தினாலும் அதில் மலையக மக்களுக்கு ஏதேனும் நிவாரணம் உண்டா? மாகாண சபை முறையின் கீழ் வடக்கில் ஒரு தமிழர் முதலமைச்சராகலாம், கிழக்கில் ஒரு தமிழர் அல்லது இஸ்லாமியர் முதலமைச்சராகலாம். மலையகத்தில் மலையக தமிழர் ஒருவர் முதலமைச்சராகக் கூடிய வாய்ப்பு உள்ளதா? இல்லை. அப்படியானால் சிறுபான்மை தமிழ் கட்சிகளின் இந்த கோரிக்கைக்கு மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, மலையக மக்கள் முன்னணி ஏன் கைச்சாத்திட வேண்டும்?
இல்லை மலையக மக்களின் பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அவர்களுக்கும் முழுமையான அரசியல் ஆட்சி அதிகார உரிமை வேண்டும் என மலையக தமிழ் கட்சிகள் நினைத்தால். மலையக மக்களுக்கு தனி மாகாணம் வேண்டும் என்று குறித்த தமிழ் கட்சிகளின் ஆவணத்தில் கோரிக்கை முன்வைக்கத் முடியுமா? அவ்வாறு கோரிக்கை முன்வைத்தால் இலங்கையில் இனவாதத்தை மாத்திரமே ஆயுதமாகக் கொண்டு ஆட்சியில் அமர்ந்துள்ள இந்த அரசாங்கத்திற்கு இனவாத தீனி போடுவதாக அமைந்துவிடாதா? சர்வதேசத்திற்கு செவிசாய்க்கும் அரசாங்கம் என்றால் தமிழ் முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து கோரிக்கை முன்வைப்பது பயன் தரும். ஆனால் இந்த அரசாங்கம் யாருக்கும் யாருடைய பேச்சையும் கேட்காமல் தான்தோன்றின்தனமாக செயற்படுகிறது. இந்தியா, சீனா, அமெரிக்காவை பணத் தேவைகளுக்காக மாத்திரமே பயன்படுத்துகிறது. அதனால் 10-15 வருடங்கள் அமைக்க முடியாது என்று நினைத்த ஆட்சியை வெறும் ஓரிரு வருடங்களில் வாக்களித்த மக்களே ஹூஹூ.. சத்தம் எழுப்பி விரட்டும் நிலை வந்துள்ளது.
இவ்வாறான சூழலில் தமிழ் முஸ்லிம் கட்சிகள் ஒன்று சேர்ந்து அதிகார பரவலாக்கல் மூலம் தீர்வு கோருவது சாகத் துடித்துக் கொண்டிருக்கும் இனவாத அரசாங்கத்திற்கு உயிர்கொடுக்கும் செயலுக்கு ஒப்பானதாக ஆகிவிடாதா?
சிறுபான்மை தமிழ் முஸ்லிம் கட்சிகளின் ஒன்றிணைவை இந்த அரசாங்கத்தில் உள்ள பெரும்பான்மை இனவாத சக்திகள் சிங்கள மக்கள் மத்தியில் தவறான வகையில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். குறிப்பாக அமைச்சர் விமல் வீரவன்ச இதனை சர்வதேச சதி என தெரிவித்துள்ளார். இந்த வரிசையில் கம்மன்பில, ஞானசார, வீரசேகர என பலரும் மீண்டும் புதிய மேடை அமைத்து இனவாதம் பேசக்கூடும். அரசாங்கத்தை வெறுத்துவரும் மக்களை வேறு விதத்தில் திசைதிருப்ப முயற்சிக்கக்கூடும். இதன் பின் விளைவாக நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு சிலவேளைகளில் மாற்றி அமைக்கப்படலாம். சஜித் பிரேமதாஸ அல்லது மற்றுமொரு பொது வேட்பாளர் நாட்டின் ஆட்சியை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு கைநழுவிப் போகலாம். காரணம் இந்த தமிழ் கட்சிகளின் கூட்டணியில் கைச்சாத்திட திட்டமிட்டுள்ள மனோ அணி, ஹக்கீம் அணி, சம்பந்தன் அணி, ராதா அணி, திகா அணி என அனைவரும் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கியவர்கள் என்பதுடன் சம்பந்தன் அணியை தவிர ஏனைய அனைவரும் நேரடியாக சஜித்துடன் கூட்டணி சேர்ந்துள்ளனர். எனவே இதன்மூலம் ஏற்படப்போகும் விளைவுகள் பற்றி சிந்திக்காமல் செயற்படுவது ஏன்?
செய்ய வேண்டியது முதலில் இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப தேவையானவற்றை செயற்படுத்தி நல்லாட்சி யுகம் போன்று புதிய ஜனாதிபதியை புதிய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவந்து அதன்பின் அரசியல் தீர்வு அபிவிருத்தி உரிமை அரசியல் குறித்து தமிழ் முஸ்லிம் கட்சிகள் காத்திரமாக செயற்பட வேண்டியதே தவிர உயிரற்றுப் போகும் இனவாத அரசாங்கத்திற்கு உயிர்பெறும் தீணி போடுவது அல்ல.
சிங்கள மக்களின் இணக்கமின்றி தமிழர்களுக்கு அரசியல் தீர்வு சாத்தியப்படாது என்று கூறும் மனோ கணேசன், சிங்களவராக பிறக்க விரும்புவதாக் கூறும் மனோ கணேசன் வடக்கு கிழக்கு அதிகார பகிர்வு கோரிக்கை ஆவணத்தில் மலையக மக்களை பிரநிதித்துவப்படுத்தி கைச்சாத்திடுவாரா? திகாம்பரம் மற்றும் ரிசாத் பதியூதின் ஆகியோர் இந்த புதிய ஆவணத்தில் கைச்சாத்திடுவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. ‘பெடரல்’ என்றால் கையொப்பம் இடுவது குறித்து சிந்திக்க நேரிடும் என ஹக்கீம் கூறியுள்ளார். ஆனால் மனோ கணேசன் மாத்திரம் கையெழுத்திட உறுதியாக இருப்பதாக அவரது அறிக்கைகள் முகநூல் பதிவுகளில் தெரிகிறது. இதன் ஊடாக தமிழ் முற்போக்கு கூட்டணி தடம் மாறி தடுமாறி போகுமா என்ற அச்சம் மலையக மகன் என்ற அடிப்படையில் எனக்குள் ஏற்பட்டுள்ளது.
மலையக மக்களாகிய நமது பிரச்சினையை நாமே பார்த்துக் கொள்வோம். முதலில் நமது பிரச்சினைக்கு தீர்வு என்ன என்பதை நாம் கூடி ஆராய்ந்து முடிவு செய்வோம். அதற்கான தீர்வு உள்நாட்டிலா? சர்வதேசத்திலா? என்பதை ஆய்வு செய்து ஆதரவு தேடி நகர்வோம்.
குறிப்பு – இந்த கட்டுரை எமக்கு மின்னஞ்சல் ஊடாக வந்துள்ளது. இதனை நாம் முழுமையாக பிரசுரித்துள்ளோம். இது குறித்து யாரேனும் பதில் தர விரும்பினால் எமக்கு மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கவும். அதனை பிரசுரிக்க நாம் தயாராக இருக்கிறோம்.