“தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயம் அரசியல் களத்தில் பேசுபொருள் மாத்திரமே. அது நடைமுறைக்குச் சாத்தியமற்ற விடயமாகும். அவ்வாறான முயற்சி இடம்பெற்றாலும் இந்தியாவின் கோரிக்கையின் பிரகாரம் அதனைக் கடைசியில் கைவிட்டு விடுவார்கள். இந்தியா விரும்பும் தெற்கு வேட்பாளரையே வடக்கு – கிழக்குத் தமிழர்கள் ஆதரிப்பார்கள்.”
- இவ்வாறு ஐக்கிய சோஷலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“அரசியல் களத்தில் நாடி பிடித்துப் பார்ப்பதற்காக அவ்வப்போது ஏதேனும் ஏற்பாடுகள் இடம்பெறும். அந்தவகையிலேயே தமிழ் பொது வேட்பாளர் விடயமும் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இது நடைமுறைச் சாத்தியமற்ற விடயம். அதைப் பற்றிப் பேசிப் பயன் இல்லை.
ஏனெனில் இலங்கையில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலானது இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான போட்டியாகவே அமையவுள்ளது.
கடைசியாக மாலைதீவில் நடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் இந்த நிலைமையே காணப்பட்டது. அந்தவகையில் மொட்டுக் கட்சி தரப்புக்குச் சீனாவும், சஜித் தரப்புக்கு இந்தியாவும் பின்புலமாக இருக்கும்.
தற்போது தமிழ் பொது வேட்பாளர் பற்றி பேசுபவர்கள், இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, அந்நாடு சார்பு தெற்கு வேட்பாளரையே ஆதரிப்பார்கள்.
அதேவேளை, தேசிய இனப்பிரச்சினைக்குச் சுய நிர்ணய உரிமையை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ள கட்சி எமது கட்சியாகும். இங்குள்ள கட்சிகளிடம் இந்தக் கொள்கை இல்லை. எனவே, தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மையப்படுத்தியதாக எமது கட்சியும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கும்.” – என்றார்.