இலங்கையில் திருமணமான தம்பதிகள் ஐந்து பிள்ளைகளை பெற்றெடுத்து வளர்க்கக்கூடிய வகையில், சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என தான் யோசனை முன்வைப்பதாக முன்னாள் அமைச்சர் பி.ஹரிசன் தெரிவிக்கின்றார்.
நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருக்கும் நிலைமை உருவாகியுள்ள பின்னணியிலேயே, அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
குழந்தைகளை வரிசையில் நிறுத்துவது தொடர்பில் கருத்துகளை வெளியிடும் தரப்பு, மோசடிகளை முன்னெடுத்து வருவதாக ஆளும் கட்சி தரப்பு கூறுகிறது.
”தற்போது அனைத்துக்கும் வரிசைகள் உருவாகியுள்ளன. ஐந்து பிள்ளைகளை வளர்த்தால், இளைய பிள்ளையை எண்ணெண் கொள்வனவு செய்யும் வரிசையில் நிறுத்த முடியும். இரண்டாவது பிள்ளையை சமையல் எரிவாயு வரிசையில் நிறுத்த முடியும். மற்றைய பிள்ளையை பால்மா வரிசையில் நிறுத்த வேண்டும். நான்காவது பிள்ளையை சீனி வரிசையில் நிறுத்த வேண்டும். இறுதியாக கஞ்சை சரி சமைத்து உண்பதற்கு ஐந்தாவது பிள்ளையை அரிசி வரிசையில் நிறுத்த வேண்டி ஏற்படும்” என பி.ஹரிசன் தெரிவித்திருந்தார்.
வெளிநாட்டவர் ஒருவரை திருமணம் செய்ய வேண்டும் என்றால், பாதுகாப்பு அமைச்சில் அனுமதி பெற வேண்டும் என பதிவாளர் நாயகம் அண்மையில் நிபந்தனைகளை வெளியிட்டிருந்தார்.
இவ்வாறு வெளியிடப்பட்ட நிபந்தனைகளில், திருமணத்திற்கு பின்னர் ஐந்து பிள்ளைகளை பெற்றெடுப்பது கட்டாயமானது என்ற சரத்தையும் உள்ளடக்க வேண்டிய நிலைமை தற்போது நாட்டில் உருவாகியுள்ளதாக அவர் கூறுகின்றார்.
ஐந்து பிள்ளைகளை வளர்க்கவில்லையென்றால், எதிர்காலத்தில் தமது அடிப்படை தேவைகளை நிறைவேற்றி, உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.
”திருமணத்திற்கு பின்னர் இரண்டு பிள்ளைகள் இருந்தால், இரண்டு வரிசைகளில் மாத்திரமே அவர்களை நிறுத்த முடியும். அப்படியென்றால், பெற்றோருக்கு தமது தொழிலை செய்ய முடியாத நிலைமை ஏற்படும். மூன்று குழந்தைகளை பெற்றெடுத்தாலும், அது போதுமானதாக அமையாது. மூன்று பொருட்களை மாத்திரமே கொள்வனவு செய்ய அவர்களை வரிசையில் நிறுத்த முடியும். எஞ்சியவற்றை செய்ய முடியாது. சமையல் எரிவாயு, சீனி, எண்ணெய் ஆகிய மூன்று பொருட்களை கொள்வனவு செய்வார்களாயினும், அரிசியை கொள்வனவு செய்ய யாரும் இல்லை. கஞ்சை குடிப்பதற்கு கூட அரிசி இருக்காது. அதனாலேயே, நாளாந்த அடிப்படை தேவைகள் மற்றும் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு ஐந்து பிள்ளைகள் கட்டாயம் தேவை என்று நான் கூறினேன்” என முன்னாள் அமைச்சர் பி.ஹரிசன், பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
பிள்ளைகளை இனிவரும் காலங்களில் பாடசாலைகளுக்கு அனுப்புவதை விடவும், பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வரிசைகளில் நிறுத்துவதற்கே அனுப்ப வேண்டிய நிலைமை உருவாகியுள்ளதாக அவர் கூறுகின்றார்.
முன்னாள் விவசாய அமைச்சராக பதவி வகித்த நீங்கள், பொறுப்பான ஓர் அரசியல்வாதி என்ற விதத்தில், நாடு வீழ்ச்சியை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில், அரசாங்கத்தை கேலி செய்வதை விடுத்து, அவர்களுக்கு உங்களின் யோசனைகளை முன்வைத்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முயற்சித்த முடியும் அல்லவா என பிபிசி தமிழ், முன்னாள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பியது.
‘எதற்காக எமது யோசனைகளை நாம் அவர்களிடம் முன்வைக்க வேண்டும். நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் என்ற கருத்துகளை வெளியிட்டு அல்லவா, அவர்கள் இந்த நாட்டை பொறுப்பேற்றார்கள். யோசனைகள் தேவையில்லை, உங்களுக்கு முடியவில்லை என்றால், அரசாங்கத்தை எம்மிடம் கையளித்து விட்டு, செல்லுங்கள். சஜித் பிரேமதாஸவிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு செல்லுங்கள். அதன் பின்னர் நாங்கள் நாட்டை செய்கின்றோம். எமது யோசனைகளை நடைமுறைப்படுத்த, அவர்கள் தேவையில்லை. எமது யோசனைகளை நாங்களே, அமுல்படுத்திக் கொள்கின்றோம். இந்த அரசாங்கத்திடம் சரியான வேலைத்திட்டம் கிடையாது” என பி.ஹரிசன் பதிலளித்தார்.
- பிபிசி தமிழ்