திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டதும் பல்வேறு தரப்பினருக்கும் திட்டங்களை அறிவித்தது. அதில் இலங்கை தமிழர்களுக்கான நலத்திட்டங்களும் அடக்கம். இலங்கை அகதிகள் முகாம் என்ற பெயரை “இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்” என பெயர் மாற்றம் செய்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். மேலும் முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழா்களின் மேம்பாட்டுக்காக ரூ.317 கோடியில் பத்து புதிய நலத் திட்டங்களை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அறிவித்தாா். மின் வசதி, கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற இதர அடிப்படை வசதிகளை மேம்படுத்திட 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
தவிர, ஆண்டுதோறும், இதுபோன்ற வசதிகளை செய்து தர ஏதுவாக, இலங்கைத் தமிழர் வாழ்க்கைத் தர மேம்பாட்டு நிதியாக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அவர் அறிவித்தார். அதேபோல இலங்கைத் தமிழர் நலன்காக்க ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் தலைமையில் 20 பேர் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவானது, இலங்கைத் தமிழர்கள் வசிக்கும் முகாம்களின் உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு உதவும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.
முகாம்களுக்கு உள்ளேயும் வெளியேயும் வாழும் இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கை நிலை மற்றும் பிற விவரங்களைக் கண்டறியவும் இக்குழு உருவாக்கப்பட்டது. தற்போது இந்திய குடியுரிமை தேவைப்படும் இலங்கை தமிழர்கள் குறித்து ஆய்வு நடத்தும் எனவும் சொல்லப்பட்டது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் நடைபெற்ற கூட்டத்தின்போது இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் கணக்கெடுப்பு தொடங்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. ஜூலை 1, 2021 நிலவரப்படி, 18,937 குடும்பங்களைச் சேர்ந்த 58,668 பேர் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட மறுவாழ்வு முகாம்களில் வசித்து வருகின்றனர்.
அதேபோல 13,553 குடும்பங்களைச் சேர்ந்த 34,123 பேர் முகாமுக்கு வெளியே வசித்து வருகின்றனர். முழுமையான கணக்கெடுப்பு முடிவுகள் கிடைத்த பிறகு, இலங்கை தமிழர்களின் நிலையைப் பரிசீலிக்குமாறும், அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தில் தேவையான விதிகளை உருவாக்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்தை மாநில வலியுறுத்தும் எனவும் ஆலோசனைக் குழு வட்டாரங்கள் IANS செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளன.
மேலும் இதுதொடர்பாக பேசியுள்ள சென்னை வடக்கு எம்பியும், ஆலோசனைக் குழு உறுப்பினருமான கலாநிதி வீராசாமி, “சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டிற்கு வந்துள்ள இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை குறித்தும் அவர்களில் இந்திய குடியுரிமை பெற்றவர்களின் எண்ணிக்கை பற்றியும் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மற்ற மாநில அரசுக்கு கடிதம் எழுதுவோம். சிறிமாவோ-சாஸ்திரி உடன்படிக்கைக்கு பின் வந்தவர்கள், சிறிமாவோ-காந்தி உடன்படிக்கைக்கு பின் வந்தவர்கள் என பல பிரிவுகளின் கீழ் இலங்கையிலிருந்து வந்துள்ள தமிழர்களை வகைப்படுத்துவது குறித்து ஆலோசித்துள்ளோம்.
அதேபோல கிளர்ச்சிப் படைகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான போரின்போது இந்தியாவிற்கு வந்தவர்கள், தமிழ்நாட்டில் பிறந்தவர்களின் குழந்தைகள் ஆகிய அனைவரையும் அணுகி, அவர்களிடம் என்னென்ன ஆவணங்கள் உள்ளன என்பதைக் கண்டறிந்து, அத உண்மைகளின் அடிப்படையில் கொள்கைகளை உருவாக்கி, பின்னர் உள்துறை அமைச்சகம் மற்றும் மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் உள்ளது” என்றார்.