பொங்கல் விழாவுடன் இந்திய நிதி அன்பளிப்பு வீடுகள் கையளிப்பு

Date:

பொங்கல் திருநாளில் இந்தியாவால் 1000 வீடுகள் கையளிப்பு உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு சதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் 2022 ஜனவரி 15 அன்று கொட்டகலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இலங்கை பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வீடுகளின் திறப்புக்களை கூட்டாக கையளித்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி. திஸாநாயக்க மற்றும் ம.ரமேஸ்வரன் மற்றும் ஏனைய
முக்கியஸ்தர்களும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய உயர் ஸ்தானிகர் தமிழ் மொழியில் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்தியாவை பூர்வீகமாகக்கொண்ட தமிழ் சமூகத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து செயற்படவும் இலங்கையுடன் இணைந்திருக்கவும் இந்தியா உறுதியுடன் உள்ளதாக அவர் இங்கு குறிப்பிட்டார்.

இச்சமூகமானது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஓர் இயல்பான பிணைப்பு என்று குறிப்பிட்ட அவர், பொங்கல் பண்டிகை இரு நாடுகளுக்கும் இடையிலான பொதுவான நாகரீக உறவுகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது எனவும் சுட்டிக்காட்டினார்.

கையளிக்கப்பட்டுள்ள இவ்வீடுகள் இந்திய வீடமைப்பு திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டன. இலங்கையில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்காக இலங்கையின் ஏழு மாவட்டங்களில் உள்ள தோட்டப் பகுதிகளில் இந்திய அரசாங்கத்தின் நன்கொடை திட்டத்தின்கீழ் 4000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை 3000 வீடுகள் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டுள்ளதுடன், 750 வீடுகளை இந்த கட்டத்தின் கீழ் கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள வீடுகள் செயலாக்கத்தின் பல்வேறு கட்டங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய வீடமைப்புத் திட்டம் இலங்கையில் பல்வேறு கட்டங்களூடாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு முன்னோடியான அபிவிருத்தி உதவித் திட்டமாகும். முதல் இரண்டு கட்டங்களில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 46,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன/புனரமைக்கப்பட்டன. அடுத்த கட்டமாக மேலும்
10,000 வீடுகள் பெருந்தோட்டப் பகுதிகளில் நிர்மாணிக்கப்படும். இதன் மூலமாக இந்திய அரசின் ஒட்டுமொத்த உறுதிப்பாடு 60,000 வீடுகளாக உயர்வடையும்.

வீடுகள் கையளிக்கும் நிகழ்வுக்கு முன்னதாக பாரம்பரிய ‘பட்டிப் பொங்கல்’ விழாவிலும் இம்முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர். இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றதுடன் கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்திய மற்றும் இலங்கை மக்களுக்கு இடையேயான நிலையான
கலாசார தொடர்புகள் மற்றும் பொதுவான பாரம்பரியத்தை இலங்கையில் நடைபெறும் பொங்கல் கொண்டாட்டம்
உறுதிப்படுத்துகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவின் முக்கிய தூணாக அபிவிருத்தி உதவித் திட்டங்கள் அமைந்துள்ளன.

ஏனைய துறைகளுடன், உட்கட்டமைப்பு மேம்பாடு முதல் கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் போன்ற அன்றாட மனித
வாழ்வின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய துறைகள் ஊடாக காணப்படும் இந்தியாவின் அபிவிருத்தி உதவியானது மொத்தமாக 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியில் காணப்படுகின்றது. பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் இத்தகைய உதவிகளின் மையப்பகுதியில் உள்ள அதேவேளை, டிக்கோயாவில் 150 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, புஸ்ஸல்லாவை சரஸ்வதி மத்திய கல்லூரியில் உள்ள பல்நோக்கு மண்டபம் உட்பட இந்திய அரசாங்கத்தின் நன்கொடை உதவியின் மூலம் செயல்படுத்தப்படும் பல திட்டங்கள் அயலுறவுக்கு முதலிடம் கொள்கையின் கீழ் இப்பிராந்தியத்தின் மீதான இந்தியாவின் கவனத்தை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...