அனுபவமில்லாத ஜனாதிபதியை நியமித்து நாட்டை மீண்டும் ஆபத்தில் தள்ள முடியாது. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பொருளாதார நெருக்கடியை தீர்த்து நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நான் கட்சியின் தீவிர உறுப்பினர். எனக்கு தெரிந்தவரையில், ஜனாதிபதி வேட்புமனு தொடர்பில் தம்மிக்க பெரேராவுடன் ஒரு கட்சி என்ற ரீதியில் உடன்பாட்டை எட்டவில்லை. அவ்வாறான கலந்துரையாடல் இடம்பெற்றதாக எமக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வியாழக்கிழமை (18) மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நிபுன ரணவக்க, தென் மாகாண ஆளுநர் கலாநிதி விலி கமகே உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதன்போது அமைச்சர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில்,
கேள்வி – இன்றைய நிகழ்ச்சி பற்றி பேசினால்?
பதில் – அரசாங்கத்தை நிறுவிய முதல் மூன்று வருடங்களில் நாம் பல நெருக்கடிகளை எதிர்கொண்டோம். கொரோனாவால் இரண்டு வருடங்கள் வேலை செய்ய முடியவில்லை. அப்போது, மக்களின் உயிரைக் காக்க பாடுபட்டோம். அதன் பிறகு போராட்டத்தால் ஆறு, ஏழு மாதங்கள் வேலை செய்ய முடியவில்லை. வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும்போது தற்போதைய ஜனாதிபதி கிராமிய மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார். அதன்படி, பிரதமர் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அந்தக் குழுவின் முடிவுகளின்படி, இந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்.
கேள்வி – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மொட்டின் வேலைத்திட்டம் எவ்வாறு உள்ளது?
பதில் – மொட்டு ஒரு கட்சி என்ற ரீதியில் வேட்பாளரை முன்வைப்பதா, இல்லையா என்பது குறித்து இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை. அது எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும். உள்ளூர் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியவர்களை நியமிக்க பொதுத் தேர்தல் நடத்தப்படுகிறது. ஆனால், நாட்டின் தேசிய பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்படுகிறார். உதாரணமாக, 2005இல், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக மகிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார். அத்துடன் நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த மக்கள் மைத்திரிபாலவுக்கு வாக்களித்தனர். ஆனால் அவர் செய்தாரா, இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்டார்.
கேள்வி – மொட்டில் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவை முன்னிறுத்த வேண்டும் என்று நீங்கள் கூறியிருந்தீர்கள். இது கட்சியின் கருத்தா?
பதில் – அது எனது தனிப்பட்ட கருத்து. இன்று நாட்டில் பெரும் நெருக்கடியாக இருப்பது பொருளாதார நெருக்கடி. இன்று பேசிக்கொண்டிருக்கும் தலைவர்கள் அனைவரும் ஓடிப்போயிருந்த நேரத்தில், பொருளாதார நெருக்கடியை தீர்க்கும் பொறுப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டுமே ஏற்றுக்கொண்டார். எனவே, பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்றி நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்னொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என என்னைப் போன்ற பலர் நம்புகின்றனர்.
அதன் பிறகு, திருடர்களைப் பிடிப்பவர்களை, வாய்ப் பேச்சு வீரர்களை நியமியுங்கள். ஆனால், தற்போதைய ஜனாதிபதிக்கு நாட்டின் தேசிய பிரச்சினையை தீர்ப்பதற்கு இன்னொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என நான் நம்புகிறேன். ஏனெனில், அனுபவமில்லாத ஜனாதிபதியை நியமித்து நாட்டை மீண்டும் ஆபத்தில் தள்ள முடியாது.
கேள்வி – அப்படியென்றால் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மொட்டின் ஆதரவைப் பெறுவாரா?
பதில் – இல்லை என் கருத்தைச் சொன்னேன். மொட்டு கட்சி என்ற ரீதியில் எதிர்காலத்தில் தீர்மானம் எடுக்கும்.
கேள்வி – ஆனால் தம்மிக்க பெரேரா ஜனாதிபதி தேர்தலில் மொட்டில் களமிறங்கப் போவதாக கூறுகிறார்?
பதில் – நான் கட்சியின் தீவிர உறுப்பினர். எனக்கு தெரிந்தவரையில், ஜனாதிபதி வேட்புமனு தொடர்பில் தம்மிக்க பெரேராவுடன் ஒரு கட்சி என்ற ரீதியில் அவ்வாறான உடன்பாட்டை எட்டவில்லை. அவ்வாறான கலந்துரையாடல் இடம்பெற்றதாக எமக்கு அறிவிக்கப்படவில்லை.
கேள்வி – ஜனாதிபதி மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா?
பதில் – அவர் கேட்பாரா, இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவர் கேட்டால் அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
கேள்வி – அரச நிறுவனங்களில் வேலை நிறுத்த போராட்டங்கள் நடைபெறுகிறது. இதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?
பதில் – தற்போது நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். சுற்றுலா பயணிகள் வருவதை தடுக்க போராட வேண்டும். அவர்கள் வேலைநிறுத்தம் செய்ய விரும்புகிறார்கள். அப்போது அந்த நாட்டுக்கு அந்நியச் செலாவணி கிடைக்காது. அப்போது பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப தொழிற்சங்கங்கள் செயல்பட்டு நாடு வீழ்ச்சியடைந்தால் மீண்டும் வரிசை யுகம் உருவாகும். இந்த நிலையை மக்கள் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். ஒரு முறை அவர்கள் போராடி அரசியல்வாதிகளின் வீடுகளை எரித்தனர். அப்படியானால், வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் மக்களுக்கு பொது மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
கேள்வி – தொழிற்சங்கங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்று சிலர் கூறுகின்றார்கள்?
பதில் – தொழிற்சங்கங்கள் நல்லது. தொழிற்சங்கங்கள் தங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும். ஆனால் இன்று தொழிற்சங்கங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரல்களின்படி செயல்படுகின்றன. அது தவறு.