“இலங்கையில் தற்போது சீரற்ற ஆட்சியே தொடர்கின்றது. மக்கள் ஆணையுடைய சீரான ஆட்சி இடம்பெற வேண்டுமெனில் தேசிய தேர்தல் ஒன்று விரைந்து நடத்தப்பட வேண்டும்.”
- இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வலியுறுத்தினார்.
இலங்கைக்கான இந்தியாவின் புதிய தூதுவர் சந்தோஷ் ஜாவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளில் அண்மையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நான் பல தடவைகள் சந்தித்துள்ளேன். அவ்வேளைகளில் இலங்கை தொடர்பில் இந்தியாவின் கரிசனைகளுக்கு நன்றி தெரிவித்துள்ளேன். இலங்கையின் முன்னேற்றத்துக்கு இந்தியாவின் உதவிகள் தொடர்ந்தும் கிடைக்க வேண்டும். இந்தியாவுக்கு இலங்கை எப்போதும் நன்றிக் கடனாக இருக்கும். இலங்கையின் உயிர் நண்பனாக இந்தியாவும், இந்தியாவின் உயிர் நண்பனாக இலங்கையும் இருக்க வேண்டும்.” – என்று மேற்படி சந்திப்பில் சந்திரிகா அம்மையார் எடுத்துரைத்தார்.