துருக்கி- சிரியா எல்லையில் நேற்று முன்தினம் அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது. மேலும் 100 ஆண்டுகளுக்கு பிறகு இப்பகுதியைத் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும். ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்க பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று பிற்பகல் நிலவரப்படி உயிரிழப்பு 11 ஆயிரத்தை தாண்டியது. துருக்கியில் 8,574 பேரின் சடலங்களும், சிரியாவில் 2530 சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. இடிபாடுகளை தோண்டத்தோண்ட சடலங்கள் தென்பட்ட வண்ணம் உள்ளன. எனவே, பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
துருக்கியில் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு பல மாதங்கள் ஆகலாம். மீட்பு பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 மாகாணங்களில் மூன்று மாதங்களுக்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சிரியாவில் ஏற்கனவே நிலைமை மோசமாக இருந்தது. உறைய வைக்கும் குளிர், காலரா தொற்று நோய், மோசமான உள்கட்டமைப்பு ஆகியவற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த சிரியா அகதிகளின் நிலைமை நிலநடுக்கத்திற்கு பிறகு பரிதாபமானதாக மாறிவிட்டது. தற்போது, நிலநடுக்கம் ஏற்பட்ட வடக்கு சிரியாவின் பகுதிகளில், உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள், அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் அகதிகளுக்கு மிக அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே துருக்கியின் தெற்கு பகுதியில் நிலநடுக்கத்தால் அதிக பாதிப்புக்கு உள்ளான பகுதியை அதிபர் எர்டோகன் இன்று நேரில் பார்வையிட்டார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை அரசாங்கம் மந்தமாக மேற்கொள்வதாக மக்களிடையே அதிருப்தியும் கோபமும் எழுந்துள்ள நிலையில், எர்டோகன் இன்று நேரில் பார்வையிட்டு மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.
N.S