இலங்கையின் சனத்தொகையில் 35 வீதமானோர் உண்ணும் உணவின் அளவைக் குறைத்துள்ளதாக உலக உணவுத் திட்டத்தின் டிசம்பர் மாத ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கிராமப்புறங்களில் 10ல் 9 குடும்பங்களும், தோட்டங்களில் 10ல் 8 குடும்பங்களும் தமக்குத் தேவையான உணவுப் பொருட்களை அன்றாடம் கொள்வனவு செய்வதில் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அறிக்கை கூறுகிறது.
இலங்கையில் 10ல் 9 குடும்பங்கள் உணவுப் பொருட்களின் விலையால் கவலையடைந்துள்ளதாக அறிக்கை காட்டுகிறது. ஆதரவு தேவைப்படும் குடும்பங்களில் 10 சதவீதத்தினரே அரசாங்கம், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஐக்கிய நாடுகளின் ஆதரவைப் பெற்றுள்ளதாக அறிக்கை காட்டுகிறது.
மேலும், டிசம்பர் மாதத்தில், இலங்கை சனத்தொகையில் 43 வீதமானோர் உண்ணும் உணவின் அளவைக் குறைத்துள்ளதோடு, 67 வீதமானோர் தங்களுக்குப் பிடித்தமான உணவுகளை கைவிட்டு தமக்கு விருப்பமில்லாத உணவிற்கு மாறியுள்ளனர்.
இலங்கைத் தோட்டக் குடும்பங்களில் 38 வீதமானவர்கள் உணவுப் பற்றாக்குறையினாலும், 34 வீதமான கிராமப்புறக் குடும்பங்களும், 28 வீதமான நகர்ப்புறக் குடும்பங்களும் உணவுப் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,
37 வீதமான குடும்பங்கள் பெண் தலைமைத்துவக் குடும்பங்களும், 32 வீதமான ஆண் தலைமை குடும்பங்களும் உணவுப் பாதுகாப்பின்மையினாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை காட்டுகிறது.
அந்த அறிக்கையின்படி, இலங்கையில் ஊவா மாகாணம் டிசம்பரில் 43 வீதமான உணவுப் பாதுகாப்பற்ற தன்மையைக் கொண்டிருந்ததுடன், வட மாகாணத்தில் மிகக் குறைந்த உணவுப் பாதுகாப்பின்மை 25 வீதமாக இருந்தது.
N.S