சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தனிப்பட்ட செயலாளர் சமீர கல்லாகே, ஒரு புகாரில் தொடர்புடைய சாட்சிகளை மறைப்பதற்கும் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் முயன்றதாகக் கூறி, அதுகுறித்து உடனடி விசாரணை நடத்துமாறு கோரி லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவில் (CIABOC) புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரை சமகி ஜன பலவேக (SJB) பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹர்ஷண ராஜகருணா, சமிந்த விஜேசிறி, சதுர கலப்பத்தி உள்ளிட்டோர் இணைந்து சமர்ப்பித்துள்ளனர்.
புகார் அளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஹர்ஷண ராஜகருணா எம்.பி., பாராளுமன்றத்தின் துணைப் பொதுச்செயலாளர் சபாநாயகருக்கு எதிராக புகார் அளித்துள்ள நிலையில், அதனை விசாரித்து வரும் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் செயல்முறைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் பாராளுமன்ற பொதுச்செயலாளருக்கு கடிதம் அனுப்பி சில தகவல்களை பெற முயன்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
புகாரில் குற்றஞ்சாட்டப்பட்ட தரப்பே இவ்வாறு தகவல்களை கோருவது, விசாரணை செயல்முறைக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் ஆணைக்குழுவின் பணிகளைத் தடுக்கும் செயலாகும் என்பது தங்களது நம்பிக்கை என அவர் குறிப்பிட்டார்.
எனவே, இவ்விடயத்தில் சுயாதீனமான விசாரணை மேற்கொள்ளுமாறு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவை தாங்கள் கோரியுள்ளதாகவும், சுயாதீன ஆணைக்குழுக்களின் நம்பகத்தன்மையை நிரூபிக்க இது ஒரு முக்கியமான சந்தர்ப்பம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்துகளை அவர் நேற்று (11) லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் புகாரை ஒப்படைத்த பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
