Sunday, November 24, 2024

Latest Posts

யாழ்ப்பாணத்தில் 3 தமிழ் ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய இராணுவம்

வடக்கு கிழக்கில் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்புத் தரப்பினரின் இடையூறுகள், அச்சுறுத்தல்கள் தொடர்வதாக குற்றச்சாட்டுகள் காணப்படுகின்ற நிலையில், யாழ்ப்பாணம், பலாலி, வசாவிளான் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த மூன்று தமிழ் ஊடகவியலாளர்கள் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

மூன்று ஊடகவியலாளர்களின் கைத்தொலைபேசிகள் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டு அதில் இருந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகளும் அழிக்கப்பட்டுள்ளன.

பிரபாகரன் டிலக்சன், சுந்தரம்பிள்ளை ராஜேஸ்கரன், சின்னையா யோகேஸ்வரன் ஆகிய மூன்று தமிழ் ஊடகவியலாளர்களே இராணுவத்தால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

தம்மை புகைப்படம் எடுத்த இராணுவத்தினர், தமது பெயர் விபரங்களையும் கேட்டு பதிவு செய்துகொண்டதாக ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சன் தெரிவிக்கின்றார்.  

யாழ்ப்பாணம், பலாலி வசாவிளான் பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள ஆலயங்களின் இராணுவத்தின் முன் அனுமதியுடன் வழிபாடுகளில் ஈடுபட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை 8 மணியளவில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள ஆலயங்களுக்கு செல்வதற்காக பொதுமக்கள் பலாலி வீதிக்கு அருகில் அமைந்துள்ள வசவிளான் இராணுவ குடியிருப்பிற்கு முன்னால் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட பகுதியில் குழுமியிருந்தனர்.

இதனை புகைப்படம் மற்றும் காணொளி பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்கள் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டு அவர்களின் கைத்தொலைபேசியில் உள்ள காணொளிகளும், புகைப்படங்களும் அழிக்கப்பட்டுள்ளன.

விடுவிக்கப்பட்ட பகுதியில் வீதியோரமாக நின்றிருந்த பொதுமக்களையும், அவர்கள் ஆலயங்களுக்கு வழிபடுவதற்கு ஆயர்த்தமாவதையும் காணொளி பதிவு செய்த மற்றும் புகைப்படங்களை எடுத்த பதிவு செய்த ஊடகவியலாளர்களே அச்சுறுத்தப்பபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள ஆலயங்களில் சுமார் 34 வருடங்களின் பின்னர் பொது மக்கள் வழிபாடுகளில் ஈடுபட இராணுவத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக வழிபாடுகளை மேற்கொள்ள 290 பக்தர்கள் தமது பெயர் விபரங்களை தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு சமர்ப்பித்துள்ளனர்.

வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள 21 ஆலயங்களில், பலாலி வடக்கு ஜே/ 254 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள இராஜேஸ்வரி அம்மன் கோவில்,  நாகதம்பிரான் அம்மன் கோவில் ஜே/238 கிராம அலுவலர் பிரிவில் உள்ள முத்துமாரி அம்மன் கோவில், ஜே/245 வசவிளான் மேற்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள மனாம்பிராய் பிள்ளையார் கோவில், சிவன் கோவில் , நாகதம்பிரான் கோவில், சக்தியுடையாள் அம்மன் கோவில்  ஆகிய ஏழு ஆலயங்களை  தரிசிப்பதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

இவற்றில் 5 ஆலயங்களை தரிசிக்க 290 பேர் தமது பெயர் விபரங்களை சமர்பித்துள்ளனர்.

இன்று காலை 9 மணியளவில் பலாலி இராணுவ தலைமையகத்தின் பிரதான நுழைவாயில் ஊடாக ஆலயத்தினை தரிசிப்பதற்கு வருகைத்தந்த பக்தர்கள் இராணுவத்தினரின் பேருந்து மூலம் ஆலயங்களுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை வழிபாடுகளில் ஈடுபடச் செல்வோருக்கு தொலைபேசிகள் உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்களைச் கொண்டுச் செல்ல இராணுவத்தால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பலாலி இராணுவ தலைமையகத்தின் பிரதான நுழைவாயிலில் பொது மக்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு கைத்தொலைபேசி உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்கள் இராணுவத்தினரால் பெற்றுக்கொள்ளப்படுவதோடு, வழிபாடுகள் முடிந்து வெளியே வரும்போது குறித்த உபகரணங்களை பொது மக்கள் மீள பெற்றுக்கொள்ள முடியும் என இராணுவம் அறிவித்துள்ளதாக யாழ்ப்பாண ஊடவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.