Saturday, May 4, 2024

Latest Posts

பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் சிறுவர்களின் உணவு பாதியாக குறைக்கப்பட்டுள்ளது

இலங்கை அரசாங்கம் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிய சுமார் ஒரு வருடத்திற்குப் பின்னர், நாட்டின் பொருளாதார வீழ்ச்சி கடுமையான பஞ்சத்தை நோக்கிய பாதையில் பயணிக்கிக்கின்ற நிலையில், நாட்டில் வாழும் குடும்பங்களில் பாதி பேர் தங்கள் பிள்ளைகளுக்கான ஊட்டச்சத்தை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சிறுவர் உரிமைகள் தொடர்பில் செயற்படும் சர்வதேச அமைப்பு எச்சரித்துள்ளது.

வறுமை, மோதல்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டு 70களில் இருந்து இலங்கையில் இயங்கி வரும் Save the Children (சேவ் த சில்ரன்)  என்ற அமைப்பினால் நடத்தப்பட்டதாக அண்மையின் ஆய்வில் அச்சமூட்டும் இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் சிறுவர்கள் ‘தொலைந்துபோன தலைமுறையாக’ மாறுவதைத் தடுக்க, அரசும், சர்வதேச சமூகமும் உடனடியாகச் செயற்படவேண்டுமென சிறுவர்கள் உரிமைகள் தொடர்பான  அமைப்பு வலியுறுத்துகிறது.

காலப்போக்கில், பணவீக்கம், உணவு, மருந்து மற்றும் எரிபொருளின் பற்றாக்குறை மற்றும் நிலையான வேலையின்மை ஆகியவற்றைச் சமாளிக்க முடியாத நிலைமை குடும்பங்களுக்கு ஏற்படும். உலக வங்கியின் கூற்றுக்கு அமைய, இலங்கை உலகில் ஏழாவது மிக உயர்ந்த  உணவுப் பணவீக்க வீதத்தைக் கொண்டுள்ளதோடு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பணவீக்கம் 50% அதிகமாக அதிகரித்துள்ளது.

கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு அமைய, தெற்காசியாவிலேயே மிக மோசமான உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் நாடாக இலங்கை பதிவாகியிருந்தது.

இலங்கையின் 9 மாவட்டங்களில் உள்ள 2,308 குடும்பங்களை உள்ளடக்கி Save the Children நடத்திய அண்மைய ஆய்வில் இந்த பணவீக்கம் காரணமாக கடந்த ஆண்டு ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் சராசரி குடும்ப செலவு 18 வீதத்தால் அதிகரித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில், பெரும்பாலான அல்லது அனைத்து அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாத குடும்பங்களின் எண்ணிக்கை 23% உயர்வடைந்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக, கடந்த ஆறு மாதங்களில், பல குடும்பங்கள் வாழ்க்கையைச் சமாளிக்க தீவிர நடவடிக்கைகளை நாட வேண்டியிருந்தது. இதற்கமைய வீட்டு செலவுகளை சமாளிக்க கடன் வாங்கும் குடும்பங்களின் எண்ணிக்கை 24 வீதத்தால் அதிகரித்துள்ளது. உணவினை பெற்றுக்கொள்வதற்காக கடனில் தள்ளப்பட்டதாகக் கூறும் குடும்பங்களின் எண்ணிக்கை 24 வீதத்தால் அதிகரித்துள்ளது. மேலும் தங்கள் தளபாடங்களை விற்று பணம் திரட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை 28 வீதத்தால் அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது.

பெண்களுக்கு அதிக அழுத்தம்

பெண் தலைமைத்துவ குடும்பங்கள் குறிப்பாக பாதிக்கப்படக்கூடியவை என Save the Children தெரிவிக்கின்றது. பெண்கள் சுரண்டப்படுவது, அதிக நேரம் வேலை செய்வது மற்றும் சில சமயங்களில் வேலைக்காக இடம்பெயர வேண்டிய ஆபத்துக்களை அவர்கள் எதிர்கொள்வதாக Save the Children சுட்டிக்காட்டியுள்ளது. மறுபுறம் இதன் காரணமாக சிறுவர்கள் தனியாக இருப்பதால் மேலும் பாதிக்கப்படுவதாக சிறுவர் உரிமைகள் தொடர்பாக செயல்படும் இந்த அமைப்பு தெரிவிக்கின்றது.

கணக்கெடுக்கப்பட்ட குடும்பங்களில் பாதி பேர் தங்கள் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் உணவின் அளவைக் குறைத்ததாகக் கூறியுள்ளனர். அதே நேரத்தில் 27% பெரியவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு உணவளிக்க தமது உணவைத் தவிர்ப்பதாகக் கூறியுள்ளனர். பத்தில் ஒன்பது குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சத்தான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய முடியவில்லை எனக் கூறியுள்ளன.

இந்த கணக்கெடுப்பில் பங்கேற்ற கொழும்பில் வசிக்கும் குடும்பம் ஒன்று தங்களது மூன்று பிள்ளைகளுக்கு போதிய உணவு வழங்க முடியாமல் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளது. முட்டை, யோகட் போன்ற எளிய சத்தான உணவுளைக் கூட குடும்பம் வாங்க முடியாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளதால், சிறுவர்களுக்கு ஊட்டச்சத்தை அளிக்கக்கூடிய உணவுப் பொருட்களை மட்டுப்படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. பெரும்பாலும், அவர்கள் வீட்டில் உள்ள சிறு குழந்தைக்கு உணவளிப்பதில் முன்னுரிமை கொடுக்க வேண்டியிருந்ததது.

தனக்கும் தன்னுடைய தன்னுடைய 8 வயது சகோதரிக்கும் இப்போது யோகட் போன்ற பொருட்கள் கிடைப்பது அரிது எனவும், ஏனெனில் அவர்களின் பெற்றோர்கள் தங்களது ஒரு வயது  சகோரிக்கு மாத்திரமே அவற்றைக் கொடுப்பதாகவும் அந்த குடும்பத்தின் 11 வயது மகள் தெரிவித்துள்ளார்.

“நாங்களும் உண்மையில் யோகட் சாப்பிட விரும்புகிறோம், ஆனால் பெரும்பாலான நேரங்களில் என் பெற்றோர்கள் எமது இளைய சகோதரிக்கு மாத்திரமே யோகட்டை கொடுக்க முடியும். அவர்களிடம் நிறைய பணம் இருக்கும்போதெல்லாம், நாங்கள் இருவரும் யோகட் சாப்பிடுகிறோம்.” என அவள் கூறியுள்ளார்.

“இப்போது கடைகளில் பொருட்களின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. இதுவரை இப்படி இருந்ததில்லை. “

கடந்த வருடம் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில், 70% குடும்பங்கள் தங்கள் வருமான ஆதாரத்தை அல்லது பெரும்பாலான வருமான வழிகளை இழந்துள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இவற்றில், பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் (54%) பருவகால மற்றும் ஒழுங்குமுறையற்ற வேலையின் அடிப்படையில் தங்கள் முக்கிய வருமானத்தைக் கொண்டுள்ளன. இந்த நிலையற்ற தன்மையால் சிறுவர்களுக்கு அடுத்த உணவு எங்கிருந்து வரும் என்று தெரியாமல் ஆபத்தில் இருப்பதாக Save the Children (STC) தெரிவிக்கின்றது.

“இந்த புள்ளிவிபரங்கள் இலங்கையின் நெருக்கடி எவ்வாறு கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது என்பதையும், எந்தவொரு நெருக்கடியையும் போலவே, சிறுவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம், ஊட்டச்சத்து மற்றும் கல்வி அனைத்தும் இன்று ஆபத்தில் உள்ளன என்பதையும் வெளிக்காட்டுகின்றது.  இந்த சிறுவர்கள் நாட்டின் போருக்குப் பிந்தைய தலைமுறையாக நம்பிக்கையுடன் பிறந்துள்ளனர், ஆனால் நாங்கள் அவர்களை மீண்டும் தோல்வியில் ஆழ்த்தும் அபாயத்தில் இருக்கிறோம்.” என Save the Children (STC) அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜூலியன் செல்லப்பா தெரிவித்தார்.

“குடும்பத்தில் யார் சாப்பிட வேண்டும் என்பதைத் தெரிவு செய்யும் நிலைக்கு பெற்றோர்கள் ஒருபோதும் தள்ளப்படக்கூடாது. இங்கு நாம் காணும் அனைத்தும் பசி நெருக்கடியின் உண்மையான ஆபத்தைக் காட்டுகிறது. இலங்கை அரசாங்கம் சில குடும்பங்களுக்கு நலன்புரி திட்டங்களின் மூலம் அத்தியாவசிய ஒத்துழைப்பை வழங்கி வருகின்ற போதிலும், சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் சமூக பாதுகாப்பு அமைப்புகளை மிக விரைவாக கட்டியெழுப்புவது தற்போது அவசியமாகியுள்ளது. இது உடனடி பதில் தேவைப்படும் அவசரநிலை.”

இந்தத் தேவைகளை சிறப்பாகப் பூர்த்தி செய்வதற்கு, அனைத்து மனிதாபிமானத் தலையீடுகளும் அந்தந்த சமூகங்களின் ஆணாதிக்க பாலின இயக்கவியலைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை Save the Children (STC) மேலும் வலியுறுத்துகிறது.

அப்படி ஒரு பிரச்சினையும் இல்லை

எவ்வாறாயினும் இலங்கை உணவு நெருக்கடியில் சிக்காது என்பது அரசாங்கத்தின் நம்பிக்கை.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் உலக உணவு அமைப்பு, நன்கொடை நாடுகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து உணவு நெருக்கடியை சமாளிக்க வெற்றிகரமான திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அரச ஊடகமான சண்டே ஒப்சவர் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.