இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் ஸ்ரீ மோகன் பகவத்தை 2022 பிப்ரவரி 24ஆந் திகதி சந்தித்தார்.
இந்த சந்திப்பு மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். இன் தலைமையகத்தில் நடைபெற்றது. இலக்கிம் என பொருள்படும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் என்ற ‘தேசிய தொண்டர் அமைப்பு’ 5-6 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பெரிய மற்றும் பரவலான இந்திய இந்து தன்னார்வ அமைப்பாகும்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் அல்லது ‘சர்சங்சாலக்’ ஸ்ரீ மோகன் பகவத், உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடாவை மிகவும் அன்புடன் வரவேற்றார். இந்த சந்திப்பின் போது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில், குறிப்பாக பௌத்தம் மற்றும் இந்து மதத்திற்கு இடையிலான பழமையான கலாச்சார மற்றும் மத உறவுகள் உட்பட பலதரப்பட்ட விடயங்கள் குறித்து அவர்கள் கலந்துரையாடியதுடன், இந்தியாவில் தோன்றிய இந்த இரண்டு உலக மதங்களுக்கிடையில் ஒரு உரையாடலை நிறுவுவதற்கான வழிகளையும் எதிர்பார்த்தனர். அமைப்பின் சிரேஷ்ட நிர்வாகிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் இலங்கையின் உயர்ஸ்தானிகர் சட்டகம் பொருத்தப்பட்ட இரண்டு பெரிய புகைப்படங்களை அமைப்புக்கு அன்பளிப்பாக வழங்கினார். இந்த புகைப்படங்களில் இலங்கைக்கு இந்தியா வழங்கிய பௌத்த மதத்தைத் சித்தரிக்கும் வகையிலான களனி ரஜமஹா விகாரையின் இரண்டு சுவரோவியங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் புகைப்படங்களில், முதல் புகைப்படம், இலங்கைக்கு வந்த மன்னன் தேவநம்பியதிஸ்ஸவிடம் புத்தரின் செய்தியை மகிந்த தேரர் வழக்குவதையும், இரண்டாவது புகைப்படம் ஸ்ரீ மஹா போதி மரத்தின் வலப்பக்கக் கிளை நாற்றைத் தாங்கிய சங்கமித்தா பிக்குனி இலங்கைக்கு வந்ததையும் சித்தரிக்கின்றன.
முன்னதாக, உயர்ஸ்தானிகர் மொரகொட, மறைந்த ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் நிறுவனர் கலாநிதி. கேசவ் ஹெட்கேவாரின் நினைவிடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அங்கு, கலாநிதி. ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி (ஹெட்கேவார் நினைவுக் குழு) கட்டிடத்தில், குழுவின் சிரேஷ்ட அதிகாரிகள் முன்னிலையில், பரிசளிக்கப்பட்ட இரண்டு புகைப்படங்களையும் அவர் வெளியிட்டார்.
1925 செப்டம்பர் 27ஆந் திகதி நாக்பூரில் இந்து தேசத்தை உருவாக்கும் நோக்கத்துடன் கலாநிதி. கேசவ் பலிராம் ஹெட்கேவாரால் நிறுவப்பட்ட ஆர்.எஸ்.எஸ், இந்திய கலாச்சாரம் மற்றும் சிவில் சமூகத்தின் விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கான இலட்சியங்களை ஊக்குவிப்பதுடன், இந்து சமூகத்தை வலுப்படுத்த இந்துத்துவா சித்தாந்தத்தைப் பரப்புகின்றது.
ஸ்ரீ மோகன் பகவத் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் 6வது சர்சங்கசாலக் ஆவார். அவர் 2009 முதல் அந்தப் பதவியில் இருந்து வருகின்றார்.
இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,
புது தில்லி