மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையால் இலங்கையின் எரிசக்தி தேவைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்கும் நோக்கில் இந்தியாவின் ஆதரவு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, மத்திய கிழக்கில் போர் நிலைமை தொடர்ந்து நீடித்தால் இலங்கைக்கு தேவையான எரிபொருள் கையிருப்புகளை வழங்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் இந்தியாவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, மார்ச் 6ஆம் திகதி இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர் அவர்களுடன் நடைபெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பில் அமைச்சர் விஜித ஹேரத் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இந்த கோரிக்கைக்கு இந்திய அரசு நேர்மறையான பதிலை வழங்கியுள்ளதுடன், அதனை செயல்படுத்த தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் எதிர்கால காலப்பகுதியில் இலங்கைக்கு தேவையான எரிபொருள் விநியோகம் தடையின்றி மற்றும் பாதுகாப்பாக தொடர்ந்து கிடைப்பதற்கான அடித்தளம் உருவாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
