ஒரு வீடு, ரூபா இருபத்து-எட்டு இலட்சம் என்ற மதிப்பீட்டுடன், 1,300 வீடுகளை கட்டும் நான்காம் கட்ட பெருந்தோட்ட மக்களுக்கான இந்திய வீடமைப்பு வேலை திட்ட பணிகள் தற்போது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
இந்திய அரசின் நன்கொடை உதவியுடனான இந்த திட்டம் தொடர்பில் இந்திய அரசுக்கு நன்றி கூறி, வீடு கட்டும் பணிகளை நாம் வரவேற்கிறோம். அதேவேளை இந்த திட்ட நடைமுறையில் முழுமையான வெளிப்படை தன்மை இருக்க வேண்டும் என்பதே தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிலைபாடாகும்.
பெருந்தோட்டங்களில் இந்திய உதவியுடான தனி வீடுகள் கட்டும் திட்டத்தை, 2015-2019 ஆண்டுகால நல்லாட்சியின் பங்காளிகளாக இருந்த போது நாம் ஆரம்பித்து வைத்தோம். எமது கால பகுதியில் நடைபெற்ற இந்த வீடு கட்டும் பணிகளில், யூஎன்-ஹெபிடாட் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித வாழ்விட திட்டம் (United Nations Human Settlements Programme – UN-Habitat), இலங்கை செஞ்சிலுவை சங்கம் (Sri Lanka Red Cross Society – SLRCS), சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் சம்மேளனம் (International Federation of Red Cross and Red Crescent Societies-IFRC) ஆகிய நம்பக தன்மை கொண்ட அரசுசார்பற்ற நிறுவனங்கள் கட்டுமான பணிகளை நடைமுறைபடுத்தல், கண்காணிப்பு ஆகிய பொறுப்புகளை சிறப்பாக செய்தன.
பணிகளை கூட்டிணைக்கும் பொறுப்பை மாத்திரமே எமது புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு செய்தது. இதனால், இந்திய உதவியுடனான பெருந்தோட்ட வீடமைப்பு திட்டத்தில் முழுமையான வெளிப்படை தன்மை அன்று இருந்தது.
இன்று இந்த அரசுசார்பற்ற நிறுவனங்கள் இந்த பொறுப்புகளில் இருந்து அதிரடியாக நீக்கபட்டுள்ளன. ஆகவே வெளிப்படைதன்மை தொடர்பான கேள்விகள் எழுந்துள்ளன. எமது கேள்விகளை கண்டு எவரும் பதட்டமடைய தேவையில்லை. நாம் நியாயமான கேள்விகளைதான் எழுப்புகிறோம். அவற்றுக்கு பொறுப்பில் உள்ளவர்கள் பதில் கூற கடமை பட்டுள்ளார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
இந்தியா ஒட்டுமொத்தமாக 46,000 வீடுகளை இலங்கையில் வடகிழக்கிலும், 14,000 வீடுகளை பெருந்தோட்டங்களிலும் கட்டுவிக்கிறது. இதில் மூன்று கட்டங்களில் வடகிழக்கில் 46,000 வீடுகளும், பெருந்தோட்டங்களில் 4,000 வீடுகளும் பூர்த்தியடைந்துள்ளன. மிகுதி 10,000 வீடுகளில் 1,300 வீடுகள் நான்காம் கட்டத்தில் இன்று ஆரம்பித்து வைக்கபட்டுள்ளன. முதல் மூன்று கட்டங்களிலும் மேற்சொன்ன நம்பகதன்மை கொண்ட அரசுசார்பற்ற நிறுவனங்கள்,கட்டுமான நடைமுறைபடுத்தல், கண்காணிப்பு பணிகளை செய்தன. அரச நிறுவனமான தேசிய வீடமைப்பு அதிகார சபையும் பங்கு வகித்தது. இந்த முறை, அரசுசார்பற்ற நிறுவங்கள் அகற்றபட்டு முழு பொறுப்பும் அரச நிறுவனங்களான தேசிய வீடமைப்பு அதிகார சபை மற்றும் அரச பொறியியல் கூட்டுத்தாபனம் ஆகிய வற்றுக்கு மாத்திரம் வழங்கபட்டுள்ளன.
ஒரு வீடு, ரூபா இருபத்து-எட்டு இலட்சம் என்ற மதிப்பீட்டுடன், 1,300 வீடுகளை கட்டும் பணி, எவரது கோரிக்கையின் பேரில், எக்காரணத்திற்காக அரச நிறுவனங்களுக்கு மாத்திரம் வழங்கபட்டுள்ளது என்ற கேள்வி மலைநாடு முழுக்க இன்று எதிரொலிகின்றது.
அதையே, இந்திய வம்சாவளி மலையக தமிழ் மக்களின் அதிக வாக்குகளையும், மலையக தமிழ் மக்களின் ஆணையையும் பெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் என்ற முறையில் நான் இங்கே எழுப்புகிறேன்.
மேலும், இந்த திட்டம் தொடர்பில் “டெண்டர்” என்ற கேள்வி பத்திர கோரல் நிகழ்ந்து, கட்டுமான “கொன்றாக்ட்டர்” என்ற ஒப்பந்தக்காரர்கள் தெரிவு செய்யப்பட்டு விட்டனாரா? அது நடந்து இருந்தால் எப்போது நடை பெற்றது? அதை நடத்திய நிறுவனங்கள் யாவை? “டெண்டர்” என்ற கேள்வி பத்திர கோரல் தொடர்பில் அரச விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளனவா?வீடுகளை கட்ட, தோட்ட நிறுவனங்கள் காணிகளை விடுவித்து உள்ளனவா? அவற்றுக்கு மண் சரிவு அபாயம் இல்லை என்ற தேசிய கட்டிட ஆய்வு நிறுவன (NBRO) சான்றிதழ்கள் வழங்கபட்டுள்ளனாவா? ஜனாதிபதி செயலகத்தில் இந்த பணிகள் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டபோது, அதற்கு சமாந்திரமாக தோட்டங்களில் அடிக்கல்கள் நாட்டியவர்கள் யார்? அவர்கள் கட்டுமான “கொன்றாக்ட்” என்ற ஒப்பந்தத்தை பெற்றவர்களா? இத்தகைய வெளிப்படைதன்மை தொடர்பான கேள்விகள் எழுந்துள்ளன. எமது கேள்விகளை கண்டு எவரும் பதட்டமடைய தேவையில்லை. நாம் நியாயமான கேள்விகளைதான் எழுப்புகிறோம். அவற்றுக்கு பொறுப்பில் உள்ளவர்கள் பதில் கூற கடமை பட்டுள்ளார்கள் என்று மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.