Saturday, November 23, 2024

Latest Posts

நாசகார செயல்கள் குறித்து உலக தமிழர் பேரவை கவலை

29 மார்ச் 2024, இலங்கைஇலங்கையில் அண்மையில் நடந்தவை பற்றிய, சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் மற்றும் உலக தமிழர் பேரவையின் இணை ஊடக அறிக்கை.

மார்ச் 8, 2024 அன்று வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோவிலில் அனுட்டிக்கப்பட்ட மகாசிவராத்திரி விரத நாளன்று பாதுகாப்பு படையினர் பக்தர்களுக்கு உணவு, நீர் மற்றும் அடிப்படைத் தேவைகள் வழங்கப்படுவதைத் தடுத்ததுமல்லாது கோவில் அர்ச்சகர்கள் உட்பட பக்தர்களை அவமானப்படுத்தும் வகையில் அகற்றித் தடுப்புக்காவலில் வைக்குமளவுக்கு மிக மோசமாக நடந்துகொண்ட சம்பவம் குறித்து (பவுத்த துறவிகளின்) சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் மற்றும் உலகத் தமிழர் பேரவை ஆகியன ஆழ்ந்த கவலை கொண்டுள்ளன.

இங்கும் இதர இடங்களிலும் வாழும் மக்களின் பல்நூற்றாண்டுக் கலாச்சாரப் பண்பாடுகளையும் நடைமுறைகளையும் அழித்துவிட்டு பெரும்பான்மையினரின் அடையாளங்களையும் நடைமுறைகளையும் திணிக்கும் அரசின் அகன்ற திட்டம் சிறுபான்மைச் சமூகங்களிடையே அச்சத்தையும் சந்தேகங்களையும் தோற்றுவிக்கிறது என்ற வரலாற்றை நாம் அறிந்துள்ளோம். இதைச் சாதிக்க தொல்லியல் திணைக்களம் ஒரு கருவியாகப் பாவிக்கப்படுகின்றது.

பல ஆண்டுகளாக நடத்தப்பட்டுவரும் சாமப் பூஜைக்கான அனுமதி வழங்கப்பட்டதா இல்லையா என்ற விடயத்தில் முரண்பாடான தீர்மானங்களை எடுப்பதற்கு நீதிமன்றங்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. இங்கு மிக முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியது ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த பக்தர்கள் அவமானப்படுத்தும் வகையில் முரட்டுத்தனமாகக் கையாளப்பட்டமையே. இவ்விடயத்தில் கோவில் இருப்பிடம் சிதைக்கப்பட்டதென்பதற்கு பொலிசார் ஆதாரம் தரமுடியாமையினாலும் அக்கோவிலில் வழிபாடு செய்வதற்கான சட்டரீதியான அங்கீகாரம் ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்தமையினாலும் கைதுசெய்யப்பட்டவர்கள் நீதிபதியினால் விடுதலை செய்யப்பட்டமை ஆறுதல் தருவதாக உள்ளது.

பாதுகாப்பு நிர்வாகத்தினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் கடத்தல்கள், சட்டத்திற்குப் புறம்பான தடுத்துவைப்புகள், துன்புறுத்தல்கள் பற்றி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் ஃபோக்கெர் ரேர்க் அளித்த வாக்குமூலத்திற்கு அமைய அவரது கரிசனைகளை மேற்கூறிய சம்பவம் உறுதிப்படுத்துவதாக உள்ளது. இது ஒரு அலுவலகத்தை உருவாக்கப்போகிறோமென்பதுட்பட நல்லிணக்கத்துக்கான முயற்சிகளை எடுப்பதாக அரசு காட்டிவரும் முனைப்புக்கு எதிரானதாகவே பார்க்கப்படும்.

இலங்கையில் அனைத்து சமூகங்களின் மத்தியில் மத ஒற்றுமையை முன்னெடுக்க மன்றம் மற்றும் பேரவை எடுத்துவரும் முயற்சிகளை இப்படியான சம்பவங்கள் குலைத்துவிடுமோ என்ற அச்சமும் எங்களுக்குக் கரிசனை தருவதாக உள்ளது. இவ்வருடப் பின்பகுதியில் தேர்தல்கள் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம் நிலவும் இவ்வேளையில் வாக்குச் சேகரிப்புக் காரணமாக சில நாசகார சக்திகள் கலகத்தைத் தூண்டிவிடக்கூடும் என்பதால் எதிர்காலத்தில் இப்படியான சம்பவங்கள் நடைபெறாது தவிர்க்க அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள், சட்ட மற்றும் பாதுகாப்பு நிர்வாகங்கள் மிகவும் முன்னெச்சரிக்கையோடு செயற்படவேண்டுமென நாம் கேட்டுக்கொள்கிறோம்.

இதர முன்னெடுப்புக்களாக, மன்றத்தின் மூன்று முக்கிய பெளத்த துறவிகளான வண. மடம்பாகம அசாஜி திஸ்ஸ தேரர், வண. கிதலாகம நாயக்க தேரர் மற்றும் வண. பேரா. ப்லெகண்டே ரத்னசார தேரர் ஆகியோர் மார்ச் 14 அன்று புத்த சாசன, மத, கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவைச் சந்தித்து இமயமலைப் பிரகடனத்தை உத்தியோகபூர்வமாகக் கையளித்ததுடன் டிசம்பர் 2023 இல் நல்லை ஆதீன பீடாதிபதி அதி வண சிறீலசிறீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்வைத்த கரிசனைகள் பற்றியும் கலந்துரையாடியிருந்தனர்.

அத்தோடு, ஜனவரி மாதம் மன்றத்தின் துறவிகள் சிலர் பிரச்சினைகளுக்குரிய இடங்களெனக் காணப்பட்ட திருக்கோணேஸ்வரர் ஆலயம், குருந்தூர் மலை மற்றும் லிங்கேஸ்வரர் கோவில், கிருஷ்ணர் கோவில், சடையம்மா சாதுவின் சமாதி ஆகியன அமைந்திருக்கும் காங்கேசந்துறை ஜனாதிபதி மாளிகை வளாகம் ஆகியவற்றுக்கு விஜயத்தை மேற்கொண்டனர். மிக விரைவில் இப்பிரச்சினைகளுக்கான தீர்வுகள் எட்டப்படுமென அமைச்சர் துறவிகளுக்கு வாக்குறுதியளித்திருக்கிறார்.

மேலும், குருந்தூர் மலையை அண்மித்த தமிழர் நீர்ப்பாசன நிலங்களுக்கு இடை நிறுத்தப்பட்டிருந்த நீர் விநியோகமானது இத் துறவிகள் ஜனவரி 10இல் தொடங்கிய பேச்சுக்களைத் தொடர்ந்து வடமாகாண ஆளுனரின் உதவியுடன் மீளவும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.மன்றத்தின் வண.கலுப்பாஹன பியரட்ண தேரரும் பேரவையின் அவுஸ்திரேலிய கிளைப் பிரதிநிதி பிரகாஷ் ராஜசசுந்தரம் அவர்களும் மார்ச் 12 அன்று ஐ.நா. வதிவிட இணைப்பாளர் திரு மார்க்-ஆண்ட்றே ஃபிரான்சே யைக் கொழும்பில் சந்தித்து இமயமலைப் பிரகடனத்தைக் கையளித்தனர்.

இச்சந்திப்பைத் தொடர்ந்து ஐ.நா. வதிவிட இணைப்பாளர் ” இன்று, சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் மற்றும் உலகத் தமிழர் பேரவை ஆகியவற்றின் பிரதிநிதிகளிடமிருந்து ‘இமயமலைப் பிரகடனம்’ மற்றும் தேசிய உரையாடலுக்கான திட்டங்களைப் பெற்றுக்கொண்டேன். நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மதிக்கும் வகையில் சமூக, மத உரையாடல்கள் தொடர்பாக எடுக்கப்படவிருக்கும் நடவடிக்கைகள் பற்றி மேலும் அறிந்துகொள்ள நான் ஆவலாக இருக்கிறேன்” என ருவீட் செய்துள்ளார்.

மார்ச் 01, 02, வெள்ளி, சனி ஆகிய தினங்களில் ‘இமயமலைப் பிரகடனத்தின்’ அடிப்படையிலான தேசிய உரையாடல் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் மாவட்ட ரீதியிலான இணைப்பாளர்களுக்கான ஐந்து பயிற்சிப் பட்டறைகளில் மூன்றாவது பட்டறை மட்டக்களப்பில் நடைபெற்றது. பொலநறுவை, மொனறாகலை, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த இணைப்பாளர்களும் இப்பட்டறையில் பங்குபற்றியிருந்தனர். மட்டக்களப்பில் நடைபெற்ற பட்டறையில் சர்வ மதங்களைச் சேர்ந்த 30 மதத் தலைவர்களும் சில சிவில் சமூக அங்கத்தவர்களும் பங்குபற்றியிருந்தனர். வண. களுப்பாஹண பியரத்தன தேரர், வண. பேரா.பலெகண்ட ரத்னசார தேரர், வண. கிதலகம ஹேமசார நாயக்க தேரர் ஆகியோர் மன்றத்தின் சார்பிலும் இலண்டனிலிருந்து வேலுப்பிள்ளை குகனேந்திரன் பேரவையின் சார்பிலும் பங்குபற்றி உரையாடல்களை மேற்கொண்டிருந்தனர்.

விசாக தர்மதாச அவர்களின் போரால் பாதிக்கப்பட்ட பெண்களின் அமைப்பு (Association for War Affected Women (AWAW)) இக்கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தது. பங்குபற்றியோர் மத்தியில் ‘பிரகடனத்தின்’ ஆறு அம்சங்களும் பரந்த ஒப்புகையைப் பெற்றிருந்தன. திரு. இந்திகா பெரேரா, திரு. நாகரட்ணம் விஜய்ஸ்கந்தன் மற்றும் ஜினதாரி பரமேஷ்வரம் ஆகியோர் மொழிமாற்றுக் கடமைகளைச் செய்திருந்தனர். முதலாவது பட்டறை பெப்ரவரி 09, 10 ஆகிய தினங்களில் குருநாகலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கம்பஹா, அநுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இப்பட்டறையில் கலந்துகொண்டிருந்தனர். மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, நுவரேலியா மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களின் பிரதிநிதிகளுக்கான இரண்டாவது பட்டறை கண்டியில் நடைபெற்றிருந்தது.150 மதத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை இணைப்பாளராகப் பயிற்றுவிக்கும் எண்ணத்துடன் இப்பட்டறைகள் திட்டமிடப்பட்டன. 25 மாவட்டங்களிலும் மக்களிடையே முன்னெடுக்கப்படவுள்ள தேசிய கலந்துரையாடலுக்கான முக்கிய வளவாளர்களாக இவர்கள் செயற்படுவார்கள். இந்த ஐந்து பட்டறைகளும் நாடு தழுவிய ரீதியில் பரந்து செயற்படுத்தப்படும்.ஏப்ரல் 19, 20 ஆம் திகதிகளில் காலியில் நடைபெறவுள்ள அடுத்த பட்டறையில் கொழும்பு, களுத்துறை,காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள பிரதிநிதிகள் பங்கேற்பார்கள்.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களின் பிரநிதிகளுக்கானதும் இறுதியானதுமான பட்டறை, ஏப்ரல் 26, 27 ஆம் திகதிகளில் வவுனியாவில் நடைபெறும்.ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 5 சர்வமதப் பிரதிநிதிகளும் ஒரு சிவில் சமூகப் பிரதிநிதியுமாக மொத்தம் 6 பேர் வீதம் 25 மாவட்டங்களிலிருந்தும் மொத்தம் 150 பேர் இப்பட்டறைகளில் இணைப்பாளர்களாகப் பயிற்றப்படுவர். ஐந்து பட்டறைகள் நிறைவுபெற்றதும் தேசிய உரையாடல் ஆரம்பமாகும்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.