தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) தரவு அமைப்பிற்குச் சட்டவிரோதமாக ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட பாரிய மோசடி தொடர்பில், ஒரு சந்தேகநபரை ஏப்ரல் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஒஷாத மிகார மகாராச்சி உத்தரவிட்டுள்ளார்.
390 மில்லியன் ரூபா மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், பொத்துவிலைச் சேர்ந்த குறித்த சந்தேகநபரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கணினி குற்றப் பிரிவு கைது செய்துள்ளது.
சந்தேகநபர், கிரிப்டோ நாணயத்தை (cryptocurrency) வழங்குவதன் மூலம் குறித்த தனியார் வங்கியிடமிருந்து 390 மில்லியன் ரூபாவைப் பெற்றுக்கொண்டதாகப் பொலிஸார் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.
இந்த நிதி, “Buy Today” எனும் பெயரிலான ஒரு நிறுவனத்தின் ஊடாகப் பரிமாற்றம் செய்யப்பட்டதாகப் புலனாய்வாளர்கள் நீதிமன்றத்தில் குறிப்பிட்டதுடன், சந்தேகநபரின் வங்கிக் கணக்குகள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
