Wednesday, May 14, 2025

Latest Posts

ஊழல் எதிர்ப்பு மசோதாவை வரவேற்கிறது டிரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல்

ஊழல் தொடர்பிலான புதிய விடயங்களை இம்மசோதா உள்ளடக்கியுள்ளது. சொத்துக்கள் தொடர்பான பிரகடனங்கள் பொதுவெளியில் கிடைக்கப்பெற வேண்டும். பிரஜைகளின் தகவல் அறியும் உரிமையானது பாதிக்கப்படுகிறது . முறைப்பாட்டினை மேற்கொள்ளும் நபர்கள் மத்தியில் அச்சுறுத்தல்/ அச்சுறுத்தும் சூழ்நிலையை உருவாக்கக் கூடாது. வினைத்திறனான சட்ட அமுலாக்கம் மற்றும் ஜனநாயக சூழ்நிலை என்பன சட்டத்தின் வெற்றிக்கு முக்கியமானவையாகும்.

பரிந்துரைக்கப்பட்ட இந்த மசோதாவானது அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஊழல் எதிர்ப்பு மசோதாவானது இலஞ்ச ஒழிப்புச் சட்டம் (அத்தியாயம் 26), 1994ம் ஆண்டின் 19 இலக்க இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய முறைப்பாடுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவை ஸ்தாபித்தல் சட்டம் மற்றும் 1975ம் ஆண்டின் 1ம் இலக்க சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பிரகடனச் சட்டம் என்பவற்றின் மாற்றீடாக முன்வைக்கப்பட்டுள்ளது.

TISL நிறுவனம் உட்பட பல்வேறு பங்குதாரர்கள், சிவில் சமூக அமைப்புக்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்களிடமிருந்து கருத்துக்கள், யோசனைகள் மற்றும் அவதானிப்புக்களை இம்மசோதா உள்வாங்கியுள்ளது.

மேலும் இலங்கையில் தற்பொழுது காணப்படும் ஊழல் எதிர்ப்பு சட்டக் கட்டமைப்பை மேலும் மேம்படுத்த உதவும் பல பாராட்டத்தக்க விடயங்களை உள்ளடக்கியுள்ளது. தனியார் துறை சார்ந்த ஊழல் விடயங்கள் உட்பட, பாலியல் இலஞ்சம் சார்ந்த ஊழல்கள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் தொடர்பான ஊழல் குற்றங்கள் போன்ற விடயங்கள் இம்மசோதாவில் உள்ளடங்கப்பட்டுள்ள முக்கிய மாற்றங்களாகும். மேலும் இந்த மசோதாவானது குறித்த குற்றங்களுக்கு விதிக்கும் அபராதத்தையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

TISL நிறுவனம் உட்பட ஊழலுக்கு எதிராக செயற்படும் சமூக ஆர்வலர்கள் சில ஆண்டுகளாக சொத்து மற்றும் பொறுப்புக்கள் பிரகடனச் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய சில மாற்றங்கள் குறித்து தமது கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் இந்த மசோதாவில் அவ்வாறான சில மாற்றங்கள் இணைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முன்மொழியப்பட்டுள்ள சொத்து அறிவிப்பு முறைமையில், ஒரு மத்திய அதிகாரம் கொண்ட அமைப்பாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (CIABOC) காணப்படும் அங்கே, சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய அனைத்து அறிவிப்புக்களும் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும். சில முக்கியமான தகவல்கள் திருத்தப்பட்டு இலத்திரனியல் முறைமையூடாக சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய பிரகடனங்கள் பொதுவெளியில் கிடைக்கப்பெறும்.

இந்தச் சட்டம் பொருந்தக்கூடிய தனிநபர்களின் சட்டவிரோத செறிவூட்டல் தொடர்பான விடயங்களை இந்த இலத்திரனியல் முறைமையூடாக மக்களினால் அடையாளம் காண முடியும். தற்போதைய சட்டத்தை போலின்றி, இந்த முன்மொழியப்பட்ட மசோதாவானது ஜனாதிபதியின் சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை பிரகடனப்படுத்துமாறும் கோருகிறது.

எவ்வாறாயினும், TISL நிறுவனமானது இந்த முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தில் முக்கிய இரண்டு விடயங்கள் தொடர்பில் கரிசனை கொள்கிறது. இச்சட்டமானது தகவல் அறியும் உரிமைச் சட்டம் உட்பட மற்ற அனைத்து எழுதப்பட்ட சட்டங்களையும் மீற முற்படுகிறது. முன்மொழியப்பட்ட சட்டத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகள் இரகசிய பாதுகாப்பு/காப்பு பிரமாணத்தில் கையெழுத்திட வேண்டிய பிரிவுகள் காணப்படுகின்றன.

ஆகவே, புதிய சட்டத்தின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் தகவல்களை வெளியிடுவது ஆணைக்குழுவின் சிறப்பு அனுமதியுடன் மாத்திரமே சாத்தியமாகும். எனவே, இம்முன்மொழியப்பட்ட சட்ட ஏற்பாட்டின் அடிப்படையில், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிடமிருந்து (CIABOC) தகவல்களை அணுகுவதை மிகவும் கடினமாக்குவதன் மூலம் இரகசிய கலாச்சாரம் ஊக்குவிக்கப்படுகிறது. மேலும் மசோதாவில் கூறப்பட்டுள்ள “ஆட்சியில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தல்” எனும் நோக்கமும் மறுக்கப்படுகிறது.

TISL நிறுவனம் கரிசனை கொள்ளும் இரண்டாவது விடயமானது, தவறான குற்றச்சாட்டுகளை குறிக்கும் இந்த மசோதாவின் பிரிவு 119 ஆனது, ஊழல் தொடர்பில் தகவல் வழங்க விரும்பும் பொதுமக்களுக்கும் முறைக்கேடுகளை வெளிப்படுத்தும் நபர்களுக்கும் (whistleblowers) எதிர்மறையான சமிக்ஞையை தோற்றுவிக்க கூடும் என TISL நிறுவனம் குறிப்பிடுகிறது.

தற்போதைய சட்டத்திலும் காணப்படுகின்ற அதே சட்ட ஏற்பாடானது ஊழலுக்கு எதிராக செயற்படும் நபர்களை குறிவைத்து தவறாக பயன்படுத்தப்படவில்லை என்றாலும், அரசியல் ரீதியாக செல்வாக்கு செலுத்தும் பொதுச் சேவையின் பின்னணியில் அல்லது ஜனநாயகம் வலுவிழந்த நிலை அல்லது பலவீனமான ஆட்சிமுறைமை அல்லது ஊழல் மிக்கவர்களின் ஆட்சி (kleptocracy) போன்ற பாதகமான சூழ்நிலையில் இந்த சட்ட ஏற்பாடானது தீவிர எதிர்விளைவு மற்றும் ஆபத்துக்கூடியாதாக மாறும்.பிரஜைகளின் கருத்துச் சுதந்திரத்திற்காக தமது செயற்பாடுகளை மேற்கொள்ளும் ஓர் அமைப்பு என்றடிப்படையில் TISL நிறுவனமானது, இந்த முன்மொழியப்பட்ட மசோதாவானது மிகவும் வலுவானதாக அமைய வேண்டும் என கருதும் அதேவேளை, ஊழல் தொடர்பில் தகவல் வழங்க விரும்பும் பொதுமக்களுக்கும் முறைக்கேடுகளை வெளிப்படுத்தும் நபர்களுக்கும் (whistleblowers) அச்சுறுத்தலை ஏற்படுத்தாது ஊழல் தொடர்பில் முறையிட ஊக்குவிக்க வேண்டும் என கருதுகிறது.

சட்டத்தின் செயல்திறனானது அதன் முழுமையான அமுலாக்கத்திலேயே தங்கியுள்ளது என்றும் சட்டமானது எழுத்து வடிவில் மாத்திரம் காணப்படுகையில் இலங்கையில் இருந்து ஊழலை ஒழிக்க முடியாது என்றும் TISL நிறுவனம் மேலும் வலியுறுத்துகிறது.

உதாரணமாக, இந்த மசோதாவானது கூட்டு விசாரணைகள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை வழங்குகிறது. ஆனால் இது நடைமுறையில் செயல்படுத்தப்படும் வரை எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இந்த மசோதாவின் கீழ், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு கூடியளவிலான பொலீஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது குறித்த ஆணைக்குழுவின் செயல்பாடுகளை மேற்கொள்ள போதியளவிலான வாய்ப்பையும் வழங்குகிறது. ஆனால் இந்த செயல்பாடுகளை வெற்றிகரமாக செயல்படுத்துவது ஆணைக்குழுவிற்கு வழங்கப்படுகின்ற சுயாதீன தன்மையினை பொறுத்தது என TISL நிறுவனம் குறிப்பிடுகிறது.

அதாவது, ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள சுயாதீன தன்மை, ஆணைக்குழு மற்றும் அதன் பணிப்பாளர் நாயகத்தின் நியமனம், எந்தவொரு தலையீடுகளோ செல்வாக்குகளோ இன்றி ஆணைக்குழு மற்றும் சட்ட அமுலாக்க அதிகார சபைகள் இயங்கக்கூடிய சூழ்நிலை மற்றும் மனிதவளம், நிதி, அறிவுத்திறன் போன்றன இச்செயல்பாடுகளின் வெற்றியின் பங்காளிகள் என TISL நிறுவனம் மீண்டும் வலியுறுத்துகிறது.

எனவே, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தொழிநுட்ப உதவியுடன் இந்த சட்டத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கரிசனை செலுத்தி இலங்கையிலிருந்து ஊழலை ஒழிப்பதற்கும் நிலையான பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கும் நாட்டின் பிரஜைகள், துறைசார் வல்லுநர்கள் மற்றும் சிவில் சமூகத்துடன் இணைந்து செயல்பட ஒன்றிணையுமாறு TISL நிறுவனமானது அரசாங்கத்திற்கு அழைப்பு விடுகிறது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.