சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை இலங்கையில் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் செயல்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
G24 அமைச்சர்கள் குழு கூட்டத்தின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவிற்கும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
வாஷிங்டனில் நடைபெற்ற G24 அமைச்சர்கள் கூட்டத்தில் இலங்கையின் பிரதிநிதியாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கலந்துகொண்டார்.
இது தொடர்பில் இவர் டுவிட்டர் பதிவொன்றில் கூறியுள்ளதாவது,
சவால்களுக்கு மத்தியில் நிலையான மற்றும் கூட்டு வளர்ச்சியைப் பாதுகாப்பதே சந்திப்பின் முக்கிய நோக்கமாக இருந்தது.
சர்வதேச சமூகம் மற்றும் பலதரப்பு நிறுவனங்கள் வளர்ந்து வரும் சந்தை மற்றும் பொருளாதாரங்களில் நிலையான வளர்ச்சியை அடைவதற்கான கொள்கை முயற்சிகளை ஆதரிக்கக்கூடிய முக்கிய பகுதிகள் குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டது என கூறியுள்ளார்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு ஏற்பட்ட சிரமங்களை போக்குவதற்கு தலைமைத்துவத்தை வழங்கியமைக்கு இராஜாங்க அமைச்சர் தனது நன்றியை இதன்போது கிறிஸ்டலினா ஜோர்ஜிவாவுக்கு தெரிவித்ததுடன், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்த கலந்துரையாடலில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.
N.S