பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் திருத்தங்கள் மற்றும் மாற்றங்களுக்கு உட்படுத்தப்படும் என்பதால் உத்தேச சட்டமூலம் தொடர்பில் எவரும் அச்சமோ அல்லது அச்சுறுத்தல் உணர்வையோ ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைவில் உள்ள சில விதிகள் குறித்து உலக நாடுகள் மற்றும் உள்ளூர் சமூகம் எழுப்பியுள்ள கவலைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அவற்றைத் தணிக்க அரசாங்கம் தயாராக உள்ளது எனவும் கூறியுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ,
1979ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சியில் பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இயற்றப்பட்டதுடன் பிரிவினைவாத கிளர்ச்சியை ஒழிக்க தற்காலிக நடவடிக்கையாக அதனை தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை அதன் பின்னர் தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் தங்களின் தனிப்பட்ட மற்றும் அரசியல் ஆதாயங்களுக்காக தவறாகப் பயன்படுத்தன. அதனால்தான், கடுமையான சட்டமாக முத்திரை குத்தப்பட்ட PTA ஐ ATA ஆக (பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்) மாற்ற நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இதில் மக்களின் உரிமைகள், அவர்களின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை கட்டுப்படுத்தும் விதிகள் ஏதேனும் இருந்தால், அவற்றை நிவர்த்தி செய்வதில் அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, நான் பாராளுமன்றத்தில் சட்டமூலத்தை சமர்ப்பித்தவுடன், எந்தவொரு குடிமகனும், அரசியல் கட்சியும் அல்லது அமைப்பும் அதனை உச்ச நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்த சுதந்திரம் உள்ளது.
எதிர்காலத்தில் பயங்கரவாத முயற்சிகளைத் தடுக்கும் முக்கிய நோக்கத்துடன் அடிப்படை, மனித மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் ஏனைய உடன்படிக்கைகளின் படிபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் மற்றும் உலகளாவிய சமூகத்தினரால் எழுப்பப்படும் கவலைகளை அரசாங்கம் உணர்ந்துள்ளதுடன், அவற்றை நிவர்த்தி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
N.S