Saturday, May 18, 2024

Latest Posts

ஊடக சுதந்திரத்தில் 150 ஆவது இடத்தில் இலங்கை!

எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பின் ஊடக சுதந்திர குறிகாட்டியின் பிரகாரம் 180 நாடுகளின் வரிசையில் இலங்கை 35.21 புள்ளிகளுடன் 150 இடத்தில் இருக்கின்றது. கடந்த ஆண்டு ஊடக சுதந்திர குறிகாட்டியுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் இலங்கை பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது.

உலக ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பினால் 2024 ஆம் ஆண்டுக்கான ஊடக சுதந்திர குறிகாட்டியை அடிப்படையாகக்கொண்டு வரிசைப்படுத்தப்பட்ட 180 நாடுகளின் பட்டியல் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

இப்பட்டியலின் பிரகாரம் மொத்தமாக 180 நாடுகளில் கடந்த ஆண்டு 45.85 புள்ளிகளுடன் 135 ஆவது இடத்தில் இருந்த இலங்கை, இவ்வருடம் 35.21 புள்ளிகளுடன் 150 ஆவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டிருக்கின்றது. அரசியல் குறிகாட்டி, பொருளாதார குறிகாட்டி, சட்டக் குறிகாட்டி, சமூக குறிகாட்டி மற்றும் பாதுகாப்பு குறிகாட்டி ஆகிய 5 விடயப்பரப்புகளுக்குத் தனித்தனியாகப் புள்ளியிடப்பட்டு, ஊடக சுதந்திரக் குறிகாட்டி தயாரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இலங்கையில் ஊடக சுதந்திரம் சார்ந்த நெருக்கடிகள் பெருமளவுக்கு 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட யுத்தத்துடன் நெருக்கமான பிணைப்பைக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு, ஊடகவியலாளர்கள் பலருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட குற்றங்கள் மற்றும் மீறல்கள் தொடர்பில் இன்னமும் நீதி நிலைநாட்டப்படவில்லை என விசனம் வெளியிட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி இலங்கையின் ஊடகத்துறையானது அரசியல் தரப்புக்களில் பெரிதும் தங்கியிருப்பதாகவும், இந்நாட்டில் ஊடகத்துறை இன்னமும் அச்சுறுத்தல்மிகு நிலையிலேயே இருப்பதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் 2022 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகி, நாட்டைவிட்டு வெளியேறியபோது ஊடக சுதந்திரத்தின் மீதான அவரது ஒடுக்குமுறைகள் முடிவுக்குவந்துவிட்டதாகக் கருதப்பட்டதாகவும், இருப்பினும் இன்னமும் ஊடகத்துறை மீதான அரசியல் ரீதியான துருவமயப்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்வதாகவும் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.