இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று இன்று (09) காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், இலங்கை இராணுவம் மற்றும் விமானப்படையைச் சேர்ந்த 6 வீரர்கள் உயிரிழந்தனர்.
ஹெலிகொப்டரை அவசர தரையிறக்கம் செய்ய முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
விபத்து இடம்பெற்ற போது, ஹெலிகொப்டரில் 12 இராணுவ வீரர்கள் பயணித்துள்ள நிலையில், ஏனைய 6 வீரர்கள் அரலகங்வில மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்துக்குள்ளான இந்த ஹெலிகொப்டர், இலங்கை விமானப்படையின் 7வது பிரிவுக்கு சொந்தமானது. இந்த ஹெலிகொப்டர் இன்று காலை 6:44 மணியளவில் ஹிங்குரக்கொட விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்டது.
மாதுரு ஓயா இராணுவ பயிற்சிப் பாடசாலையில் நடைபெறவிருந்த விசேட படையின் விடைபெறுதல் அணிவகுப்பு நிகழ்ச்சிக்காக இராணுவ வீரர்களை ஏற்றிச் செல்வதற்காக இந்த ஹெலிகொப்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
விமானப்படையின் தகவலின்படி, காலை 7:08 மணியளவில் மாதுரு ஓயா பகுதியில் ஹெலிகொப்டரில் 6 இராணுவ வீரர்கள் ஏற்றப்பட்டனர். இதனால், விமானிகள் இருவர் உட்பட 6 விமானப்படை வீரர்கள் என மொத்தம் 12 பேர் ஹெலிகொப்டரில் இருந்துள்ளனர்.
இதன்போது, ஹெலிகொப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசர தரையிறக்கம் மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, ஹெலிகொப்டர் மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்ததாக விமானப்படை தெரிவித்தது.
விமானப்படை மற்றும் இராணுவ வீரர்கள் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். விபத்தில் சிக்கிய 12 பேரும் மீட்கப்பட்டு அரலகங்வில பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 8 பேர் பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
எனினும், 6 வீரர்கள் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராணுவ விசேட படையைச் சேர்ந்த நான்கு பேர் மற்றும் விமானப்படையைச் சேர்ந்த இரண்டு பேருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து விசாரிக்க 9 பேர் கொண்ட குழுவை நியமிக்க விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்