ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவை சந்தித்துள்ளார். அப்போது பொலிஸ் மா அதிபரை பதவி விலகுமாறு கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் நேற்று (14) இடம்பெற்ற சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொட்டு எம்பிக்கள் குழு கூட்டம் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கும் நிலையில் உறுப்பினர்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டதால் சுமார் 10.30 மணிக்கு கூட்டம் துவங்கியது. இதில் சுமார் 65 எம்பிக்கள் கலந்து கொண்டனர்.
கடந்த 9ம் திகதி எம்.பி.க்கள் பலரது வீடுகள், சொத்துகள் சேதப்படுத்தப்பட்டதால் கூட்டம் ஆரம்பம் முதலே சூடுபிடித்தது. ஜனாதிபதியை சுற்றிவளைத்து தமது துயரத்தை வெளிப்படுத்திய அவர்கள், தமது சொத்துக்களை பாதுகாக்க தவறியதாக குற்றம் சுமத்தி பொலிஸ் மா அதிபரையும் இராணுவத் தளபதியையும் கடுமையாக சாடியுள்ளனர்.
அதன் பிரகாரம் ஜனாதிபதி அந்தக் கூட்டத்தில் உரையாற்றினார். டி. விக்கிரமரத்னவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். பாராளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் மா அதிபரை கடுமையாக கண்டித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குவதற்கு அவர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும், இதற்கு முழுப்பொறுப்பும் பொலிஸ் மா அதிபர் ஏற்க வேண்டும் என்றும் அவர்கள் கடுமையாக வலியுறுத்தினர்.
இறுதியாக பொலிஸ் மா அதிபரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.