Sunday, November 24, 2024

Latest Posts

அடுத்த வாரம் பாராளுமன்றில் முக்கிய விவாதம்

பாராளுமன்றம் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 7ஆம் திகதிவரை கூட்டப்படவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதற்கமைய ஜூன் 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணி முதல் 10.30 மணிவரையான நேரம் வாய்மூல விடைக்காக ஒதுக்கப்பட்டிருப்பதுடன், மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை பெண்களின் வலுவூட்டல் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் நடத்தப்படவுள்ளது.

இதன் பின்னர் இலங்கை பட்டய கப்பல் தரகர்கள் நிறுவனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம், தெதிகம ஸ்ரீ மைத்திரி பிரக்ஞார்த்த பௌத்த கல்வி சபாவ (கூட்டிணைத்தல்) சட்டமூலம் என்பன பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. பி.ப 5.00 மணி முதல் 5.30 மணி வரை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணைக்காக (அரசாங்கம்) நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜூன் 5ஆம் திகதி புதன்கிழமை, மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்களுக்காக (04 வினாக்கள்) நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூலவிடைக்கான வினாக்களுக்காக (05 வினாக்கள்) நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டத்தின் கீழ் 2311/40 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி, குடியியல் வான்செலவுச் சட்டத்தின் கீழ் 2362/23 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் மற்றும் பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் கீழ் 2374/17 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி என்பவற்றை விவாதமின்றி அங்கீகரிப்பதற்கும் இங்கு இணங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பி.ப 5.30 மணி வரை கல்வித்துறையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பான எதிர்க்கட்சியால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்துக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜூன் 6ஆம் திகதி வியாழக்கிழமை, மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை இலங்கை மின்சாரம் சட்டமூலம் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் நடத்தப்படவுள்ளது.அன்றையதினம் பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை விவாதம் நடைபெறும்.

ஜூன் 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் பின்னர் மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை பொதுத் தனிசு முகாமைத்துவம் சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு), துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் 2364/37 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கட்டளை, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளை (இலங்கை அரசாங்கத்திற்கும் சவுதி அரேபிய அரசாங்கத்திற்கும் இடையில் வருமானம் மீதான வரிகள் தொடர்பில் இரட்டை வரிவிதிப்பை நீக்குவதற்கும், வரி செலுத்தாது தட்டிக்கழித்தல் மற்றும் தவிர்ப்பு என்பவற்றைத் தடுப்பதற்கான உடன்படிக்கையை அங்கீகரித்தல்), விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட ஐந்து கட்டளைகள், உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் 2376/25 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை, நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் 2382/02 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக (இரண்டு) ஒதுக்கப்பட்டுள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.